செவ்வாய், 17 டிசம்பர், 2013

ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்?

வட மாகாணத்தின் சமகாலப் பொருளாதார நெருக்கடி, வளர்ச்சிக்கான வழி வகை குறித்த ஒரு கண்ணோட்டம்

செங்கோடன்

பகுதி 1

பொருளாதாரக் காரணங்களுக்காக நிகழும் தற்கொலைகள் பற்றி நாமனைவரும் அவ்வப்போது அறிந்து வருகின்றோம். கடந்த காலங்களில் இவ்வாறான தற்கொலைகள், நீண்ட கால இடைவெளிகளில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்திருக்கின்றன. எனினும், அண்மைக் காலத்தில், ஒரு குறுகிய காலப் பகுதியில், யாழ் குடாநாட்டில், பொருளாதாரக் காரணங்களினால் உந்தப்பட்ட தற்கொலைகள் அதிகளவில் நிகழ்ந்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம். எத்தனை தற்கொலைகள் பொருளாதாரக் காரணங்களினால் உந்தப்பட்டு நிகழ்ந்தன என்பது குறித்த தெளிவான புள்ளி விபரங்களோ, இத்தோற்றப்பாடு குறித்தான சம்பவக் கற்கைகளோ இதுவரை கிடைக்கவில்லை. எனினும் இந்த நிலை குறித்த சமூகக் கரிசனை காரணமாக யாழ்ப்பாண முகாமையாளர் அவை (Jaffna Managers Forum) ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்ததும், அதில் பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்ததும், இத் தற்கொலைகள் எழுப்பிய சமூக அதிர்வலைகளின் வெளிப்பாடுகள் எனக் கூறலாம்.

தற்கொலைகளைத் தவிர வியாபாரங்கள் மூடப்படுதல், வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் தனித்தோ குடும்பமாகவோ தலைமறைவாதல், கொடுப்பனவு செய்யப்படாது திருப்பப்படும் காசோலைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், காசோலை மற்றும் நிதி மோசடிகள் அதிகரித்தல், வர்த்தக வங்கிகளின் தொழிற்படாக் கடன்களின் அளவு (Non Performing Loans) அதிகரித்தல், வாகனக் குத்தகை நிறுவனங்களால் வாகனங்கள் கையகப்படுத்தல் அதிகரித்தல் போன்றவை எமது பிரதேச மக்களின் மனங்களில் பல கேள்விகளையும், கிலேசங்களையும் உருவாக்குகின்றன. சிக்கன வாழ்முறைக்கும் நிதிசார் நன்னடத்தைக்கும் விதந்து பேசப்படும் ஒரு பிராந்தியத்தில் ஏன் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுகின்றன? இவை எமது பிரதேசத்தில் நிலவும் நிதி நெருக்கடியின் குறிகாட்டிகளா? அல்லது எமது பிரதேசத்தில் நிகழவிருக்கும் பொருளாதார நெருக்கடியை கோடி காட்டும் முன்னபாயச் சமிக்ஞைகளா? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் இன்று பலரின் மனங்களில் உருவாகியிருக்கின்றன. இவற்றிற்கான விடைகளைத் தேடும் போது தனிநபர் உளவியல், நடத்தைப் பாங்கு என்ற விடயப் பரப்பில் எம்மைக் குறுக்கிக் கொள்ளாமல், சூழமைவுக் காரணிகளையும் (Contextual Factors) சமூக- பொருளாதார- அரசியற் காரணிகளையும் கருத்திற் கொள்ளும், முழுமைசார் நோக்கு நிலையைக் கைக் கொள்வதே பொருத்தமானதாகும்.

ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் உடனடிக் காரணங்களை தேடுவதற்கு, போர் நடைபெற்ற காலப்பகுதியினதும், போரின் பின்னதான காலப்பகுதியினதும் தொடர் சூழ்நிலைகளை நோக்குவது அவசியமாகும். போர் நடந்த காலப்பகுதியில் வட பிராந்தியத்தின் பெருமளவான பகுதிகளில் இருந்த பொருளாதார முறைமையை 'பகுதி மூடிய பொருளாதார முறைமை' எனக் கூறலாம். அது மிகவும் நெருக்கடியான பொருளாதாரமாக இருந்தது. ஆனால் அது மிகவும் எளிமையானது. தப்பிப் பிழைப்பதும், இருப்பினை உறுதி செய்யவும் தான் அதனது அடிநாதமாக விளங்கியது. மக்களின் செலவீனங்கள் பெருமளவில் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன. மக்களின் முதலீடுகளும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற தேவையான பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதையோ, வழங்குவதையோ நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந் நடவடிக்கைகளில் பெருமளவில் பங்கேற்றதோடு ஏனைய பிரதேசங்களைச் சார்ந்தவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவது பெருமளவில் சாத்தியமற்றதாகவே இருந்தது.

எனினும் போர் முடிவுக்கு வந்ததும் இரண்டு பிரதான தளங்களில் குறிப்பான மாற்றங்கள் நிகழ்ந்தன. நுகர்வுத் தளத்திலும் முதலீட்டுத் தளத்திலும் இம் மாற்றங்கள் நிகழ்ந்தன. நுகர்வுத் தளத்தில் மக்களின் நுகர்வுப் பாங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை. போர் முடிவுக்கு வந்த போது ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அத்தியாவசிய தேவைகளுக்கும் புறம்பான பொருட்களின் நுகர்வு சாத்தியமாகியது. நீண்ட காலமாக கவனிக்கப்படாதிருந்த பௌதீகக் கட்டுமானங்களை மேம்பாடு செய்யவேண்டியிருந்தமை, மின்சாரத்தின் கிடைதன்மை, வெளிப்பிரதேசங்களுக்கான தரைப் போக்குவரத்து சாத்தியமாகியமை, தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சி என்பவை எண்ணற்ற நுகர்வுத் தேவைகளை உருவாக்கின. இதன் பின்னணியில் இழந்தவற்றைப் பிரதியீடு செய்வதற்கும், ஏனையவற்றை இற்றைப்படுத்தலிற்கும் செய்யப்பட்ட முயற்சிகள் காரணமாக ஒரு 'நுகர்வு அலை' உருவாகியது.

வர்த்தக நடவடிக்கைகள் சார்ந்த முதலீட்டுத் தளத்தில் நடந்த மாற்றங்களில் இரு வகையான போக்குகள் குறிப்பிடத்தக்கன. முதலாவதாக மேற்குறிப்பிட்ட 'நுகர்வு அலையை மையப்படுத்திய வர்த்தகச் செயற்பாடுகளில் இப்பிரதேசத்திற்கு வெளியே இருப்போரும் நேரடியாகவோ, விநியோகக் கட்டமைப்புகளை உள்ளூர் வர்த்தகர்களுடன் இணைந்து உருவாக்குவதன் மூலமாகவோ பங்கேற்பது சாத்தியமானது. இப் பிரதேசத்தைச் சாராத பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தமது கிளைகளை நிறுவியும், தமது விநியோகக் கட்டமைப்புக்களை உருவாக்கியும், இந்நுகர்வு அலை காரணமாக எழுந்த பொருளாதாரப் பலன்களை அறுவடை செய்ய முயல்கின்றன. இரண்டாவதாக உள்ளூரில் சிறிய அளவிலான மூலதனத் தேட்டத்தை வைத்திருந்தவர்களும் இந்நுகர்வு அலையின் பொருளாதாரப் பலன்களை அடைய முற்பட்டனர். முன்பு ஒரு பொழுதும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிராத, அனுப்பு காசுப் பொருளாதாரம் மூலம் (Remittance Economy) பணத் தோட்டத்தினை அடைந்தவர்களும் இவ்வகுதியில் அடங்கினர். 

'நுகர்வு அலை' நோக்கிய வர்த்தக முயற்சிகளில் அதிக விற்பனைப் புரள்வை நோக்காக் கொண்ட மிகைச் சரக்குக் கையிருப்பும் (Excessive Stock Holdings), தளர்வுப் போக்கான கடன் விற்பனை காரணமாக அதிகரித்த கடன் பெற்றோர் கணக்கினையும் (Trade Debtors/ Account Receivables) நிதியீட்டம் செய்வதற்காக அதிகரித்த அளவில் தொழிற்படு மூலதனம் (Working Capital) உட்பாய்ச்சப்பட்டது. மிகைச் சரக்குக் கையிருப்பை பேணுவதற்கான களஞ்சிய வசதிகள், வியாபாரக் கவர்ச்சியை ஏற்படுத்துவதற்கான, வியாபாரத் தலங்களின் நவீனப்படுத்துகை, பொருட்போக்குவரத்து, விற்பனை விநியோக நடவடிக்கைகளுக்கான வாகனக் கொள்வனவு என்பவற்றிற்காக அதிகரித்த அளவில் நிலையான மூலதனம் (Fixed Capital) உட்பாய்ச்சப்பட்டது.

இவ்வாறான மூலதனத் தேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு வங்கிகள், வங்கியல்லா நிதி நிறுவனங்கள், குத்தகைக் கொள்வனவு நிறுவனங்கள் என்பவை எமது பிரதேசத்தை நோக்கி படையெடுத்தன. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி வட மாகாணத்தில் 2012ம் ஆண்டில், வர்த்தக வங்கிகளிலும், விஷேட வங்கிகளிலும், கிளைகளின் எண்ணிக்கை 220 ஆகும். இவற்றுள் யாழ் குடாநாட்டில் மட்டும் 133 கிளைகள் காணப்படுகின்றன. இதன்படி யாழ்ப்பாணக் குடாநாட்டில் 4398 நபர்களுக்கு ஒரு வங்கிக் கிளை என்ற அடிப்படையில் வங்கிகளின் கிளைப்பரம்பல் அமைந்துள்ளது. எனினும் கண்டி மாநகரில் 6944 நபர்களுக்கு ஒரு வங்கிக் கிளை என்ற அடிப்படையிலேயே வங்கிக் கிளைகளின் பரம்பல் அமைந்துள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய மாகாணம் 9.8மூ பங்களிப்பினை வழங்குவதனையும், வட மாகாணம் வெறுமனே 3.7மூ பங்களிப்பினை வழங்குவதையும் நோக்கும் போது இவ்வகையான வங்கிக் கிளைப்பரம்பலின் யதார்த்த முரண் புலனாகும். இவ்வாறான நிதி நிறுவனங்களின் படையெடுப்புக் காரணமாக, நிதித் துறையில் மிகை வழங்கல் நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக வழங்கலால் உந்தப்பட்ட முதலீட்டு நடவடிக்கைகளும் இப்பிரதேசத்தில் நிகழ்ந்தன (Supply Driven Investment).

சம காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்களிப்புச் செய்யாதவர்களும் வர்த்தகம் சார்ந்த பௌதீகக் கட்டுமானங்களில் அதிகளவு முதலீடுகளை மேற்கொண்டனர். பாரிய நிறுவனங்களுக்கு வாடகைக்குஃகுத்தகைக்கு வழங்கும் நோக்கில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக பிரதான வர்த்தக மையங்களில் நிலத்தின் விலையும், வாடகையும் வரையறையற்ற உயர்வுக்குள்ளாகின.

எனினும் எமது பிரதேசத்தில் எழுந்த நுகர்வு அலை தொடரவில்லை. ஏறத்தாழ இரண்டு அல்லது மூன்று வருடங்கள் நீடித்த அலை ஓயாத அலையாக இருக்கவில்லை. மாறாக பெருமளவு வர்த்தகர்களைப் பொறுத்தவரை அது ஆழிப் பேரலைக்கு ஒப்பானதாக மாறியது. எமது பிரதேசத்தின் வர்த்தகம் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் ஒரு குமிழிப் பொருளாதார நிலையை அடைந்தன.

நுகர்வு அலை தணிய ஆரம்பித்ததும் விற்பனையில் படிப்படியான வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது. பொருட் கையிருப்பில் தேக்க நிலை உருவாகியது. எனவே விற்பனை அளவைத் தக்க வைப்பதற்காக கடனுக்குப் பொருட்களை விற்கும் நடவடிக்கைகளும், கடன் விற்பனைக் கால எல்லையை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் வர்த்தகர்கள் மேற்கொண்டனர். விற்பனையின் அளவு குறைந்த போதும் தென் பகுதியைச் சேர்ந்த பொருள் வழங்குநர்களின் அழுத்தம் காரணமாகவும் விற்பனை முகாமையாளர்களின் விற்பனை இலக்கை எட்டும் முயற்சிகள் காரணமாகவும் சில வேளைகளில் சுய தெரிவின் காரணமாகவும் பொருட் கையிருப்பின் அளவைப் பெருமளவு வர்த்தகர்கள் குறைக்க முனையவில்லை. எனவே முன்பிருந்ததை விட அவர்கள் தம் தொழிற்படு மூலதனத்தை (றுழசமiபெ ஊயிவையட) அதிகரிக்க வேண்டி வந்தது. இதற்கான நிதியீட்டத்தை வங்கிகள் போன்ற முறை சார்ந்த நிறுவனங்களிலிருந்து பெற முடியாது போன போது அவசரத்தின் நிமித்தம், முறைசாரா நிதி மூலங்களிலிருந்து இது பெறப்பட்டது. 'மீற்றர் வட்டி' என்ற முறைமை கோலோச்சத் தொடங்கியது.

'மீற்றர் வட்டி' எனும் முறைமை தற்போதைய பொருளாதார சூழ்நிலைகளின் தர்க்க விதிகளுக்கு அப்பாற்பட்டது. போட்டி நிறைந்த, இலாப வீதம் குறைந்த வர்த்தக சூழ்நிலையில் மிகவும் அதிகமான வட்டி வீதத்தில் நிதியினைப் பெற்று மூலதனமிடுவது பொருளாதார ரீதியில் தர்க்கபூர்வமானதன்று. இம்முறைமையைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்தவர்களின் மூலதனச் செலவு (Cost of Capital) மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. இதற்குச் சமாந்தரமாக அதிகரித்த நிலத்தின் விலை, நில வாடகை என்பவற்றால் வர்த்தக நடவடிக்கையின் செலவுக் கட்டமைப்பும் (Cost Structure) அதிகரித்தது. இது போட்டித் தன்மைக்கு உகந்ததாக இருக்கவில்லை. மறுபுறத்தில் வாகனங்கள், கட்டடங்கள் போன்ற வர்த்தக உட்கட்டுமானங்களில் முதலீடு செய்தவர்களுக்கும் முதலீட்டுக்குப் பொருத்தமான அளவு வருமானம் கிடைக்கவில்லை. பல வர்த்தகர்களைப் பொறுத்தவரையில் வர்த்தகம் செழித்த போது, அதாவது நுகர்வு அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அவர்கள் வரித்துக் கொண்ட வாழ்க்கை முறையும் விரலுக்கு மீறிய வீக்கமாக அமைந்து விட்டது. அந்த வாழ்க்கை முறையில் இருந்து உடனடியாக அவர்களால் மீள முடியாது போய்விட்டது. எனவே வியாபார ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் பொருளாதாரப் பிரச்சினை அவர்களைச் சூழ ஆரம்பித்தது.

நுகர்வு அலையின் வீழ்ச்சி தற்காலிகமானது என்ற நம்பிக்கையில் காத்திருந்தவர்களில் நம்பிக்கை வீண்போக, தற்கொலைகள், தலைமறைவுகள், தலைகுனிவுகள் என்பவை மேலெழத் தொடங்கின. சந்தையின் குறுங்காலச் சமிக்ஞைகளின் அடிப்படையில் நெடுங்காலத் திட்டங்களை வகுத்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள் என்பவை கை பிசைந்து நிற்கும் நிலை உருவாகியது.

எனினும் நடந்து முடிந்து கொண்டிருப்பது ஒரு நிதியியற் குறு நாடகமே. ஆனால் தொடர்ச்சியானதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான பொருளாதார வளர்ச்சியை எமது பிரதேசம் அடைய வேண்டும் என்ற வேணவாக் கொண்டவர்கள் இக் குறுநாடகத்தின் மேடைக்கு அப்பாற் சென்று எமது பிரதேசத்தின் பொருளாதாரத்தின் கட்டமைப்புக் கூறுகளுக்குள்ளேயும் அரசியற் பொருளாதார புலத்தினுள்ளும் தமது கவனத்தைச் செலுத்தி மீட்சிக்கான வழிவகைகளை காண வேண்டும்.

பகுதி 2

நீண்ட கால அடிப்படையில் எமது பிரதேசப் பொருளாதாரத்தில் ஆரோக்கியமான, நிலை பேண் தகைமையுடைய வளர்ச்சியைக் காண விரும்புகின்றவர்கள், எமது பிரதேசப் பொருளாதாரத்தின் கட்டமைப்புக் கூறுகளை தெளிவாகப் புரிய வேண்டியது அவசியமாகும். இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 2011ம் ஆண்டு தொடர்பான சில புள்ளி விபரங்களின் அடிப்படையில் இதனைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இப்புள்ளி விபரங்களின் துல்லியத் தன்மை குறித்து பல சந்தேகங்கள் இருப்பினும் இவை பொருளாதாரத்தின் தன்மை குறித்த அண்ணளவான புரிதலை அடைவதற்குப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன.

இலங்கைத்தீவின் மொத்த சனத்தொகை ஏறத்தாழ 20.3 மில்லியன்களாகும். இதனது நிலப்பரப்பளவு 62.705 சதுர கி.மீ ஆகும். வடமாகாணத்தின் சனத்தொகை ஏறத்தாழ 1.06 மில்லியன்களாகவும், நிலப்பரப்பு 8290 சதுர கி. மீ ஆகவும் விளங்குகின்றன. அதாவது இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 7.88 வீதம் இப்பகுதியில் வசிக்கின்றது. மொத்த நிலப்பரப்பில் 13.22 வீதம் பரப்பை வட மாகாணம் கொண்டுள்ளது. எனவே சனத்தொகை அடர்த்தியைப் பொறுத்த வரையில், இலங்கயின் தேசிய சனத்தொகையடர்த்தி ஒரு சதுர கி. மீ க்கு 324 பேர்களாக அமைய, வடபுலத்தில் இது 128 பேர்களாக அமைகின்றது. இக் காலப்பகுதிக்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6544 பில்லியன் ரூபாய்களாக அமைய, இதில் 241 பில்லியன் ரூபாய்களை வட மாகாணம் பங்களிப்புச் செய்துள்ளது. அதாவது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.7 வீதம் மட்டுமே வட மாகாணத்தில் இருந்து கிடைக்கின்றது. உத்தியோக பூர்வ தரவுகளின் படி வட மாகாணமே இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஆகக் குறைந்த பங்களிப்பினை வழங்குகின்றது. வடமாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 241 பில்லியன் ரூபாய்களில் 58 பில்லியன் ரூபாய்கள் (24 வீதம்) விவசாய-மீன்பிடித் துறையிலிருந்தும,; 45 பில்லியன் ரூபாய்கள் (19 வீதம்) கைத்தொழிற் துறையிலிருந்தும,; 137 பில்லியன் ரூபாய்கள்(57 வீதம்) சேவைத்துறையிலிருந்தும் வழங்கப்படுகின்றன.

விவசாய-மீன்பிடித்துறையின் உப கூறுகளை நோக்குமிடத்து நெல் தவிர்ந்த ஏனைய பயிர்கள் 25 பில்லியன் ருபாய்களையும் மீன்பிடி 12 பில்லியன் ரூபாய்களையும் நெற்பயிர் 8 பில்லியன் ரூபாய்களையும் கால்நடைத்துறை 6 பில்லியன் ரூபாய்களையும் தெங்குப் பயிர்த்துறை 3 பில்லியன் ரூபாய்களையும் ஏனைய துறைகள் மிகுதியையும் பங்களிப்புச் செய்கின்றன.

வட பிராந்தியத்தின் விவசாயத் துறையை உற்று நோக்குவோமாயின், அது அதனது முழுமையில் இன்னமும் உழுகுடி (Peasant) விவசாயமாகவே அமைந்திருக்கின்றது. நெல், தானியங்கள், மரக்கறிகள் என்பவற்றின் உற்பத்தியில் ஈடுபடுவோர் பெருமளவில் சிற்றுடைமை விவசாயிகளாகவே காணப்படுகின்றனர். பெரிய அளவிலான பண்ணைகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு அருகிவிட்டன. பல்லாண்டுப் பயிர்களான வாழை, தென்னை, மரமுந்திரிகை போன்றவைகளும் பெருந்தோட்ட அடிப்படையிலன்றி சிற்றுடைமை அடிப்படையிலே இப்பிரதேசத்தில் செய்கை பண்ணப் படுகின்றன. பெருந்தோட்ட அடிப்படையில் இவற்றை பயிர் செய்வதற்கு இங்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
விலங்கு வேளாண்மையை பொறுத்தவரையில் கூட இதே நிலைமையே இங்கு காணப்படுகின்றது. கால்நடை வளர்ப்பு குடும்ப மட்டத்திலேயே சிற்றளவுத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பண்ணைத் தொழில் இப்பகுதியில் விருத்தியடையவில்லை.

மீன்பிடித்துறையைப் பொறுத்த வரையிலும் கூட குறிப்பிடத்தக்க அளவு கடல் வளம் இப்பிரதேசத்தில் காணப்பட்ட போதும், அதன் பொருளாதாரப் பங்களிப்பு இருக்க வேண்டிய அளவினதாக இல்லை. 2012ம் ஆண்டுப் புள்ளி விபரங்களின் படி இலங்கையில் பிடிக்கப்பட்ட 417,220 மெற்றிக் தொன்கள் கடல் மீன்களில் 59,340 மெற்றிக் தொன்கள் (14 வீதம்) மட்டுமே வட மாகாணக் கடல்களிலிருந்து பிடிக்கப்பட்டன. இலங்கையில் காணப்படும் 4, 241 உள்ளிணை இயந்திரம் பொருத்தப்பட்ட பன்னாட் படகுகளில் (Multi Day Boats) 5 படகுகள் மட்டுமே வட மாகாணத்தைச் சேர்ந்தவை என்பது மீன்பிடித் தொழிலின் நவீனத் தன்மை குறித்த ஒரு சோற்றுப் பதமாகும்.

தொகுத்து நோக்கின் வட பகுதியின் விவசாய – மீன்பிடித் துறை வீரியமும் வீச்சும் இழந்த துறையாக இருப்பதுடன் இப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை முன் தள்ளக் கூடிய உந்து விசையை தன்னகத்தே கொண்டிராத துறையாகவும் இருக்கின்றது.

இப்பிரதேசத்தின் கைத்தொழிற் துறையிலிருந்து பெறப்பட்ட 47 பில்லியன் ரூபாய்கள், பெறுமதியுள்ள உற்பத்தியில் சுரங்கமகழ்தற் துறை 12 பில்லியன் ரூபாய்கள், பொருளுற்பத்தித் துறை 5 பில்லியன் ரூபாய்கள், மின்சார உற்பத்தி 1.5 பில்லியன் ரூபாய்கள், கட்டட நிர்மாணத்துறை 26 பில்லியன் ரூபாய்கள் என்ற அளவுகளில் பங்களிப்பை வழங்கியுள்ளன.
கைத்தொழிற் துறையை ஆழ்ந்து பரிசீலித்தால் இப்பகுதியின் பொருளுற்பத்தித் துறையின் வளர்ச்சியின்மை தெளிவாக புலப்படும். இத்துறை வெறுமனே ஐந்து பில்லியன் ரூபாய்கள் என்ற உற்பத்தி அளவையே கொண்டுள்ளது. அத்துடன் இப்புள்ளி விபரக் காலப்பகுதியில் அரசினால் வெளிநாட்டுக் கடன்களினூடாக மேற்கொள்ளப்பட்ட அரச துறை சார்ந்த கட்டமைப்புப் பணிகளையும் தனியாரால் நுகர்வு அலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வர்த்தகக் கட்டுமான நடவடிக்கைகளையும் கருத்திற் கொண்டால் கட்டட நிர்மாணத் துறையின் அதிகரித்த பங்களிப்பு தொடர்ந்தும் நிலைத்திருக்கும் என்று அனுமானிக்க முடியாது. எனவே வட பகுதியின் பொருளாதாரத்தில் கைத்தொழிற்துறையின் பங்களிப்பும் மிகவும் வலுவற்றதாகவே காணப்படும் ஏது நிலைகளே காணப்படுகின்றன. இந்நிலை இப்பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அனுகூலமானதல்ல.

வட பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 வீதத்திற்கும் அதிகமான அளவு சேவைத் துறையிலிருந்தே கிடைக்கின்றது. ஏலவே குறிப்பிட்டபடி வட பகுதியின் சேவைத்துறை 137 பில்லியன் ரூபாய்களை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பாக வழங்குகின்றது. இத் துறையை மேலும் பகுத்தாய்ந்தால் வர்த்தகத்துறை 17 பில்லியன் ரூபாய்கள் போக்குவரத்துத் துறை 30 பில்லியன் ரூபாய்கள் நிதிச் சேவைகள் 18 பில்லியன் ரூபாய்கள் அரச சேவைகள் 59 பில்லியன் ரூபாய்கள் என்ற அளவுகளில் தமது பங்களிப்பை வழங்குகின்றன.

அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதாரத்தில் வர்த்தகம் உள்ளடங்கிய சேவைத்துறை, விவசாயத் துறையினதும், கைத்தொழிற் துறையினதும் இணைந்த பங்களிப்பை விட அதிகளவில் பங்களிப்பை வழங்குகின்றது என்று கூறப்படுவதுண்டு. தொலைத் தொடர்புத்துறை, போக்குவரத்து, நிதிச் சேவைகள் என்பவை ஏனைய பெறுமதி சேர் துறைகளுக்குத் தேவையான முக்கியமான உள்ளீடுகளாகும். சுகாதாரம், கல்வி போன்ற சேவைகள் தரமான மனித வளத்தை உருவாக்குவதற்கும், சட்டம் மற்றும் கணக்கியல் துறைகள் ஆரோக்கியமான பொருளாதார முறைமைக்கும் அவசியமானவையாகும். எனவே சிறப்பான முதலீட்டுச் சூழ்நிலைகளை உருவாக்குவதற்கும், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும், உற்பத்தியின் அளவை அதிகரிப்பதற்கும், சேவைத்துறையின் செயற்பாடுகளும் பங்களிப்பும் மிகவும் அவசியமானவையாகும்.

எனினும் எமது பிரதேசத்தின் சேவைத்துறையை நுணுகி ஆராய்ந்து பார்த்தால் அத்துறை மற்றைய துறைகளை விட அதிகமான பங்களிப்பினை வழங்கியுள்ள போதிலும் மேற்கூறப்பட்டது போன்று சிறப்பான முதலீட்டுச் சூழ்நிலை, உற்பத்தித் திறன், உற்பத்தி அளவு என்பவற்றிற்கு நேர்க்கணியமான பங்களிப்பை வழங்கும் தகவுடையதாக இல்லை என்பது புலப்படும். இப்பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையினதும் கைத்தொழிற்துறையினதும் தனித்த பங்களிப்பினை விட அரச சேவைகளினது பங்களிப்பு அதிகமானதாகும்.(விவசாயம் மீன்பிடி-58 பில்லியன், கைத்தொழில் - 45 பில்லியன், அரச சேவைகள்- 59 பில்லியன்)

இலங்கையின் அரச சேவைத்துறையின் பயனுறுதித் தன்மையும் வினைத்திறனும் பரவலான விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் சூழ்நிலையில், சேவைத்துறை சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச சேவைகள் மேலோங்கியிருப்பது எந்த வகையில் எமது பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும்? என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

எனினும் வட பிரதேசத்தின் பொருளாதாரத்தை ஓரளவிற்கேனும் உயிர்த்துடிப்புள்ளதாய் பேணுவது இப்பிரதேசத்தின் அனுப்பு காசுப் பொருளாதாரமாகும் (Remittance Economy). இலங்கையின் அனுப்பு காசுப் பொருளாதாரம், வட மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பார்க்க ஏறத்தாழ 3 மடங்கானது. (763 பில்லியன் ரூபாய்கள்) எனினும் வட மாகாணத்தின் அனுப்பு காசுப் பொருளாதாரத்தின் பருமன் தொடர்பான புள்ளிவிபரங்கள் உத்தியோகபூர்வமாக  எங்கும் வெளியிடப்படவில்லை. இப்பிரதேச மக்களின் வாங்கும் சக்திக்கு இப் பொருளாதாரம் கணிசமான பங்களிப்பை வழங்கிய போதிலும் இது நுகர்வுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் தனிநபர் சார்ந்த உட்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முதலீடு செய்வதற்கும் பயன்பட்டதேயன்றி குறிப்பிடத்தக்க அளவான மூலதனத் திரட்சிக்கோ முதலீட்டுச் செயன்முறைக்கோ இதுவரையில் பாரிய அளவில் பங்களிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக நோக்கின் வீரியமும் வீச்சும் இழந்துள்ள விவசாய – மீன்பிடித்துறை, மிகவும் வளர்ச்சி குன்றிய பொருளுற்பத்தி கைத்தொழிற்துறை, அரச சேவைகள் கோலோச்சும் சேவைத்துறை என்பவற்றாலேயே வட பிரதேசத்தின் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டிருப்பது புலனாகும். இவ்வாறான பின்புலத்தில் வட மாகாணத்தின் பொருளாதாரம் வளர்ச்சிக்கான உள்ளார்ந்த உந்து சக்திகள் இன்னமும் உருவாகாத நிலையிலேயே இன்றுவரை காணப்படுகின்றது என்ற அனுமானத்திற்கு வரலாம்.

பகுதி 3

இந்நிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்து எமது பிரதேசத்தில் காணப்படும் பௌதீக வளங்கள், நிறுவனங்கள், மனித வளம் என்பவற்றை உத்தம மட்ட பயன்பாட்டிற்குட்படுத்தி விவசாய, கைத்தொழில், சேவைத் துறைகளிலே நிலை பேண் தகு மேம்பாட்டினை ஏற்படுத்த விரும்பின், பின்வரும் மூன்று அம்சங்கள் தொடர்பாகவேனும் முன்னுரிமை அடிப்படையில் நாம் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

1. சுதேச மூலதனத் திரட்சியும், முதலீட்டாளர்களின் உருவாக்கமும்.
2. ஆரோக்கியமான முதலீட்டுச் சூழ்நிலை
3. பிராந்தியத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் உள்ளூர் நிறுவனங்களினதும் மனித வளத்தினதும் அதிகரித்த பங்களிப்பு.

1. சுதேச மூலதனத் திரட்சியும், முதலீட்டாளர்களின் உருவாக்கமும்.

காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை வட மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், உள்ள10ர் வளங்களின் பொருளாதார பயன்பாட்டிற்கும் ஆதாரமாக விளங்கக் கூடிய மூலதனத் திரட்சியோ, உயிர்த் துடிப்புள்ள சுதேச முதலீட்டாளர் வர்க்கமோ, வட பிரதேசத்தில் நிலை கொண்டு உருவாகவில்லை. இப் பிரதேசத்தின் பௌதீக அல்லது இயற்கை வளங்களின் பாவனையும் மேம்பாடும் காலனித்துவ ஆட்சிக்காலம் தொட்டு அரசுகளின் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கும் அக்கறைக்கும் உட்படாததால,; சுதேச உயர் குழாமொன்று இப்பிரதேசத்தில் நிலை கொண்டு உருவாகவில்லை. சமூக அடுக்கொழுங்கில் மேல் நிலையை அடைய விரும்பியவர்கள் இப்பிரதேசங்களிலிருந்து வெளி நோக்கிச் சென்று வேறிடங்களிலேயே தம்மை உயர் குழாமினராக ஆக்க முடிந்தது. (இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு - இலங்கையின் பொருளாதார வரலாறு: வடக்கு- கிழக்குப் பரிணாமம் ; கலாநிதி வி. நித்தியானந்தம்)

இனப் பிரச்சினையும், அதன் விளைவான போரும் கூர்மையடைய அதன் சமகாலங்களில் முகிழ்ந்து வந்த முதலீட்டாளர்களும் இப் பிரதேசத்தை விட்டு வெளியேறினர். எனினும் போர்க்காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் சிலர் அக்காலச் சூழ்நிலையில் ஊக வாணிபத்தில் ஈடுபட்டோ, இப்பிரதேசத்திற்குள் எடுத்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்ட அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொருட்களை எமது பிரதேசத்திற்குள் எடுத்து வருவதனூடாகவோ கிடைத்த அதீத மிகை இலாபத்தினூடாக குறிப்பிடத்தக்க மூலதனத் திரட்சியை அடைந்தனர். (இவ்வாறானவர்களை பேச்சு வழக்கில் 'வன் செயற் பணக்காரர்கள்' என்று மக்கள் கூறுவர்) இவ்வாறு நடுத்தர அளவிலான மூலதனத் திரட்சியை அடைந்தவர்களும், தமது மூலதனத்தை வர்த்தகத் துறைக்கு அப்பால் முதலீடு செய்ய ஆர்வமற்றிருக்கிறார்கள். மேலும் தமது வர்த்தக நடவடிக்கைகளிற் கூட மரபு ரீதியான பொருட்களின் வர்த்தகத்தில் மட்டும் ஈடுபடுவதுடன் மரபு சார்ந்த முகாமைத்துவ முறைகளையும் பின்பற்றுகின்றனர். இதனால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மூலதனத் திரட்சியை எட்ட முடியாதவர்களாக இவர்கள் தம்மைத் தாமே மட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.

மறுபுறத்தில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அப்பால் பொருளுற்பத்தித் துறையிலோ, பாரிய சேவைகளை வழங்கும் துறைகளிலோ முதலிட ஆர்வமாகவுள்ள தொழில் முனைவுத் தன்மை கொண்டவர்கள் அதற்குத் தேவையான மூலதனத் திரட்சியை கொண்டவர்களாக இல்லை. இவர்கள் தமது முதலீடுகளுக்கு கடன் மூலதனத்தை (Debt Capital) நம்பியிருக்கின்றார்கள.; எனினும் இலங்கையில் தற்போது நிலவும் கடன் ஒழுங்கமைப்பில் நடுத்தர மீளளிப்புக் காலத்தைக் கொண்ட ( சுமார் 7 வருடங்கள்) ஒப்பீட்டளவில் வட்டி வீதம் கூடிய கடன் திட்டங்களையே வர்த்தக வங்கிகள் வழங்கி வருகின்றன. பாரிய மூலதனம் தேவைப்படும் முதலீட்டு நடவடிக்கைகளில் இருந்து குறுகிய அல்லது நடுத்தரக் கால எல்லையினுள் கடன்களிற்கான வட்டியையும் முதல் மீளளிப்பையும் மேற்கொள்ளக் கூடிய வகையில் காசுப் பாய்ச்சலையும், பொருளாதாரப் பலன்களையும் எதிர்பார்க்க முடியபது. ஏனெனில் இவை நீண்ட கால முதலீடுகளாகும். எனவே இவ்வாறான கடன் மூலதனத்துடன் ஓரளவு பெரிய முதலீடுகளை இப்பிரதேசத்தில் மேற்கொண்டவர்கள் கடன் மீளளிப்பில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மூலதனத்தை திரட்டக்கூடிய மாற்று வடிவங்களும் எமது பிரதேசத்தில் வளர்ச்சியடையவோ, அங்கீகாரத்தைப் பெறவோ இல்லை. பொதுவாக எமது பிரதேசத்திலுள்ள தனியார் முதலீடுகள் பெருமளவில் தனிநபருடைமை (Sole Proprietorship) அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. பங்குடைமை (Partnership) அடிப்படையிலான முதலீடுகள் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அருகிவருகின்றன. பல முதலீட்டாளர்கள் இணைந்து முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய தனியார் கம்பனி முறைமை (Private Limited Liability Companies) ஆங்காங்கே உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அவையும் பெருமளவில் குடும்ப உடைமை சார்ந்தனவாகவே அமைந்து வருகின்றன. பொது மக்களிடையே பங்குகளைத் திரட்டி முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்மை கொண்ட பொதுக் கம்பனிகள் (Public Companies) எம்மிடையே இல்லை. எமது பிரதேசத்தைச் சார்ந்த எந்த நிறுவனமும் இதுவரை இலங்கையின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை. பரந்து பட்ட பொது மக்களிடமிருந்து நிதி மூலதனத்தைத் திரட்டி பேரளவும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சாத்தியமாக்கும் இம்முறைமை எமது பிரதேசத்தில் பெயரளவிற்கேனும் உருவாகவோ, அங்கீகாரத்தையும், ஆதரவையும் பெறவோ இல்லை.

சுருங்கக் கூறின் பிராந்தியம் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்கத் தேவையான மூலதனத் திரட்சியோ. உள்ளூர் முதலீட்டாளர் குழாமின் உருவாக்கமோ, மூலதனத் திரட்சியை சாத்தியமானதாக்கும் மாற்று நிறுவன வடிவங்களின் உருவாக்கமோ, எமது பிரதேசத்தில் நிகழவில்லை. இவற்றினது உருவாக்கம் பிராந்தியம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளில் ஒன்றாகும்.

2. ஆரோக்கியமான முதலீட்டுச் சூழ்நிலை

நீதியானதும் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததும், இலகுவானதுமான முதலீட்டுச் சூழ்நிலை பொருளாதார வளர்ச்சிக்கான முன் நிபந்தனைகளுள் ஒன்றாகும். இலங்கையிலே முதலீடு தொடர்பான கொள்கை உருவாக்கம், அமுலாக்கம், முதலீடுகளுக்கு தேவையான அனுமதிகளை வழங்கும் எண்ணற்ற திணைக்களங்கள் அனைத்தும் தேசிய மட்டத்திலே இனத்துவ முற்சாய்வுகளும், பாரபட்ச அணுகு முறைகளும், ஊழலும் மலிந்தவையாக இருக்கின்றன. முதலீட்டாளர்கள், அரசின் பாதுகாப்புத் தொடர்பான கரிசனைகளையும் அரசியற் பின்னணி குறித்த சந்தேகங்களையும் திருப்தி செய்வது நீண்டதும், சிக்கலானதுமான அனுமதி வழங்கற் செயற்பாட்டின் முதற்படி நிலையாகும். இப்படிநிலையைத் தாண்டிய பின் பல்வேறு திணைக்களங்களால் வழங்கப்படும் அனுமதிகளைப் பெறுவதற்கு இனப் பாகுபாடு சாhந்த பல்வேறு பட்ட சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றைச் சமாளிப்பதற்கு சட்டபூர்வமான வழிமுறைகளுக்குப் புறம்பான வழிமுறைகளைக் கையாள வேண்டி நேரிடுகிறது. அரசியல் வாதிகள், அலுவலரடுக்கு நிலை அதிகாரிகள் என இன்னோரன்ன தரப்பினருக்குப் பல்வேறு விதமான கொடுப்பனவுகளை மேற்கொள்வதினூடாகவே இது சாத்தியமாகின்றது.

மாகாண மட்டத்திலும், அலுவலரடுக்கு நிலையினர், தனியார் முதலீடுகள் தொடர்பாகச் சினேகித பூர்வமான நோக்கு நிலையை கொண்டவர்களாக இல்லை. இவர்கள் தனியார் துறை முதலீட்டாளர்களுடன் பகைமை நோக்குடன் அல்லது வெறுத்து ஒதுக்கும் மனப்பான்மையுடனேயே கருமமாற்றுகின்றனர். எனவே தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், நேர்மையானதும், வெளிப்படைத் தன்மை கொண்டதுமான அனுமதி வழங்கற் செயன்முறை காணப்படாமை பல முதலீட்டாளர்களைச் சலிப்படைய வைத்து அவர்களை விலகிச் செல்ல நிர்ப்பந்திக்கின்றது.

இதனை விட சில குறிப்பான தொழில் முயற்சிகளுக்கான அனுமதி முற்று முழுதாக அரசியற் பின்புலம் உள்ளவர்களுக்கே கிடைக்கின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான அனுமதி, மணல் அகழ்வு, கல் அகழ்வும் உடைத்தலும், வனமர அரிவு, சுழியோட்ட அனுமதி போன்றவை ஆளும் கட்சி சார்பான அரசியற் பின்னணி உடையவர்களுக்கே கிடைக்கின்றது.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நேரடியான முதலீட்டு நடவடிக்கைகளும், சமநிலையற்ற, திரிபடைந்த முதலீட்டுச் சூழ்நிலையை இப்பிரதேசத்தில் தோற்றுவித்துள்ளன. எமது பிரதேசத்தின் இயற்கை வளங்கள் அதிகார பலத்தினால் கையப்படுத்தப்பட்டு, பிரதேச மக்களை ஈடுபடுத்தாமலும், அதன் பொருளாதாரப் பலன்கள் பிரதேச மக்களை அடையா வண்ணமும் பல பொருளாதார முயற்சிகளை ஆயுதப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதியுயர் பாதுகாப்பு வலயமெனக் கூறிக் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி வடக்குப் பிரதேசத்திலே இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள 'தல் செவன' உல்லாசத் தங்கு விடுதி, பலாலியை அண்மித்த உயர் பாதுகாப்பு வலயத்திலே அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன விவசாயச் செய்கை, காரை நகர்க் கடற் கோட்டையிலே அமைக்கப்பட்டுள்ள தங்ககம், சுண்டிக்குளம் கடற்பரப்பில் அமைக்கப்படடுள்ள விருந்தகம், வன்னியின் கையகப்படுத்தப்பட்ட பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தி முயற்சிகள் என்பவை இதற்கு உதாரணங்களாகும். சிறிய அளவில் பல்வேறு படைப்பிரிவுகளால் நடாத்தப்படும் விருந்தகங்களும், இப்பிரதேசத்தின் பொருளாதார சந்தர்ப்பங்களை அரசும், ஆயுதப் படைகளும் நிறுவன ரீதியாக கையகப்படுத்துவதற்கு எடுத்துக் காட்டுக்களாகும்.

புலம் பெயர்ந்த தமிழர்களால் இப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய முதலீட்டு நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக இரட்டைக் குடியுரிமை வழங்கும் முறைமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுவும் இனத்துவப் பாகுபாடு சார்ந்த அரசின் நடவடிக்கைகளுக்கு ஒரு உதாரணமாகும். இவையனைத்தினதும் ஒட்டு மொத்த விளைவாக வட பிரதேசம் முதலீட்டு நடவடிக்கைகளுக்குச் சாதகமான பிரதேசமாக விளங்கவில்லை. போர் முடிந்த பிறகு இப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க அளவு பெரிய முதலீடுகளை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். சில நகர் சார் தங்ககங்கள், தனியார் வைத்தியசாலைகள், பனிக்கட்டித் தொழிற்சாலைகள், கடலுணவு பரிகரிக்கும் தொழிற்சாலை என மிகச் சொற்பமான தனியார் முதலீட்டு முயற்சிகளே இப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவடடத்திலும் வவுனியா மாவட்டத்திலும் பிற பிரதேசங்கள் அல்லது நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களால் ஆடைத் தொழிற்துறை சார்ந்த இரண்டு முதலீட்டு முயற்சிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

போதியளவு மூலதனத் திரட்சியும் முதலீட்டாளர்களின் உருவாக்கமும் நிகழ்ந்திராத சூழ்நிலையில் விதி விலக்காக முதலீடுகளை மேற்கொள்ளத் தயாராகவிருக்கும் ஒரு சில உள்ளூர், புலம் பெயர் முதலீட்டாளர்களை ஊக்கங்கெடச் செய்யும் முதலீட்டுச் சூழ்நிலை, இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியமான தடைக்கற்களில் ஒன்றாகும்.

3. பிராந்தியத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் உள்ளூர் நிறுவனங்களினதும் மனித வளத்தினதும் அதிகரித்த பங்களிப்பு.

மூன்று தசாப்தங்களாக நீடித்த போரினால், நேரடியாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்பட்ட நிறுவனங்களும், மனித வளமும் இயல்பான வளர்ச்சியை எய்தியிருக்கவில்லை. சம காலத்தில் உலகின் பிற பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் முழுதாக இப்பிரதேசங்களில் உள்வாங்கப்படவில்லை. இதன் பின்னணியில் போர் முடிந்த பிறகு இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகளில் எமது பிரதேசத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களும் மனித வளமும் ஏனைய பிரதேசங்களைச் சார்ந்த நிறுவனங்களுடனும் ஆளணியினருடனும் போட்டி போட்டுப் பங்கேற்பது சவால்கள் நிறைந்ததாகவே உள்ளது. உதாரணமாகப் போர் முடிந்த பிறகு இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வீதி நிர்மாண, கட்டட நிர்மாணப் பணிகளில் பங்கேற்கக் கூடிய மூலதன, இயந்திர – உபகரணம் சார்ந்த தொழில்நுட்ப தகுதிகளை வேறு பிரதேசங்களைச் சார்ந்த நிறுவனங்களே கொண்டிருந்தன. இத் துறைக்குத் தேவைப்படும் பல்வேறு திறன் சார் தேவைகளும் எமது பிரதேசத்தின் தொழிற் படையில் காணப்படவில்லை. இதைப்போலவே விருந்தோம்பல் முகாமைத்துவம் (Hospitality Management) பரிசாரகத் தொழில் (Stewardship) தாதியத் தொழில் போன்ற துறைகளில் நன்கு பயிற்றப்பட்ட ஆளணி எமது எமது பிரதேசத்தில் போதுமான அளவு இல்லை. இந்நிலையில் இப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் குறைந்தளவிலான அரச, தனியார் முதலீட்டு நடவடிக்கைகளில் கூட எமது பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனங்களும், ஆளணியினரும் பங்கேற்கும் அளவு குறைவடைகிறது. இது நலிவு நிலையிலுள்ள பொருளாதாரத்தை மேலும் பலவீனமாக்கும்.

தனிச் சிங்களச் சட்டம், தரப்படுத்தல் போன்றவற்றால் மருத்துவம், பொறியியல், கணக்கியல் போன்ற வாண்மை சார் (Professional Disciplines) துறைகளை நோக்கிக் குவிமையம் கொண்ட தமிழ் பேசும் மக்களின் கல்வி தொடர்பான மனப்பாங்கு இன்னமும் முன்னைய சூழ்நிலைகளின் செல்வாக்கிலிருந்து விடுபடவில்லை. இதனால் புதிய பொருளாதாரம் (New Economy) சார்ந்து உருவாகி வரும் பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்குத் தேவையான கல்வியைப் பெறுவதற்கு எமது சமூகம் இன்னமும் தயாராகவில்லை. இந்நிலை புதிய பொருளாதாரம் சார்ந்த முதலீட்டு முயற்சிகளை எமது பிரதேசத்தில் மேற்கொள்வதற்குச் சவாலானதொன்றாக மாறி வருகின்றது. மாறிவரும் பொருளாதார உலகில் தோற்றம் பெற்று வரும் தொழில் முயற்சிகளுக்குப் பொருத்தமான மனித வளம் ஒரு பிரதேசத்தில் உருவாக்கப்படுவது, அப்பிரதேசம் புதிய பொருளாதார ஒழுங்கில் கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு அவசியமானதாகும். இந்த அம்சத்தில் எமது பிரதேசத்தில் ஒரு பாரிய இடைவெளி காணப்படுகின்றது.

எம் முன் உள்ள வழி

இதுவரை விவாதித்தவற்றைப்பற்றி பொழிப்பாகக் கூறின், எமது பிரதேசத்தில் தற்போது மேற்கிளம்பியுள்ள வர்த்தக நெருக்கடி நுகர்வு அலையின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் சார்ந்ததாக இருக்கின்றது. இந்த நெருக்கடியை இதனளவிலேயே தீர்க்க முடியாது. அடிப்படையான சில அடிப்படையான சில பொருளாதார மாற்றங்களை உருவாக்குவதன் மூலமே இந் நெருக்கடி நிலைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணலாம். அடிப்படையான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த விரும்பின் எமது பிரதேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக் கூறுகளைப் புரிந்து கொள்வது அவசியம். எமது பிரதேச விவசாய- மீன்பிடித்துறை, கைத்தொழிற் துறை, சேவைத்துறை என்பவை மாற்றத்திற்கான உள்ளார்ந்த இயங்கு விசைகளைத் தம்மகத்தே கொண்டிருக்கவில்லை. இந்நிலையை மாற்ற வேண்டுமெனில,எமது பிரதேசம் சார்ந்த மூலதனத் திரட்சி, முதலீட்டாளர்களின் உருவாக்கம், முதலிடுவதற்கான உத்தம சூழ்நிலைகளின் உருவாக்கம், பொருத்தமான நிறுவனக் கட்டமைப்புகளினதும் மனித வளத்தினதும் விருத்தி என்பவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எனினும் இம்மாற்றங்கள் சுயமாக நிகழ முடியாது. போரின் நேரடியான களமாக இருந்த இப்பிரதேசம் மனித, சொத்து, வள இழப்புக்களை பெருமளவில் சந்தித்திருக்கின்ற பின்னணியில் சடுதியாக வெளியுலகுடன் போட்டியிட்டுத் தன்னை நிலைநிறுத்துமாறு  விடப்பட்டுள்ளது. நவ தாராளவாதப் பொருளாதார விழுமியங்களின் பாற் பட்டு எந்த விதமான சிறப்பு ஏற்பாடுகளுமற்று பொருளாதாரப் போட்டிச் சந்தைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. மறுபுறத்தில் அரசு, நவ தாராளவாத விழுமியங்களுக்கு முரணாக இனப் பாகுபாடு சார்ந்த பல நடைமுறைகளைக் கையாண்டு பொருளாதாரச் சந்தர்ப்பங்களை இனங்களிற்கிடையில் பாரபட்சமாக மீள் விநியோகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் மூலதனத் திரட்சி, முதலீட்டாளர்களின் உருவாக்கம், முதலீட்டுச் சூழ்நிலைகளின் உருவாக்கம், நிறுவன மற்றும் மனித வளங்களின் அபிவிருத்தி என்பவற்றை சந்தைச் சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் அடைய முடியாது. அரசியற் தளத்தில் நிலவும் 'மாறு நிலை நீதி' (Transitional Justice)  என்ற எண்ணக்கருவிற்குச் சமாந்தரமான 'பொருளாதார மாறு நிலை நீதி' என்ற அடிப்படையில் இம்மாற்றங்களை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலாவது சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விசேட நிதியீட்டு ஒழுங்குகள், வரி ஏற்பாடுகள், முதலீட்டு ஊக்குவிப்புச் செயன் முறைகள், மனித வள மேம்பாட்டிற்கான சிறப்பு ஏற்பாடுகள், போட்டித் தவிர்ப்பு நடைமுறைகள் என்பவை இவ்வாறான மாறுநிலைக் காலப் பொருளாதார ஏற்பாடுகளுக்குள் அடங்கலாம்.

இவ்வாறான ஏற்பாடுகளின் உருவாக்கம் அரசியல் அதிகாரத்தின் பாற்பட்டது. ஒற்றைத் தேசிய அரசும், இனத்துவ ரீதியாக துருவ மயப்பட்ட சமூகங்களும் நிலவும் ஒரு நாட்டில் இவற்றை வெறுமனே பொருளாதாரத் தளத்தில் நிகழும் செயற்பாடுகளால் அடைய முடியாது. எமது பிரதேசத்தின் இன்றைய பொருளாதார நலிவு நிலையும், இதிலிருந்து மீளும் வழிமுறைகளும் அரசியற் - பொருளாதார அணுகு முறைகளினூடாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும.; அதே வகையான அணுகு முறைகளினாலேயே தீர்க்கப்படவும் வேண்டும். 

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

அவர்கள் அதற்குச் சமாதானம் என்று பெயரிட்டனர்

அது நடு கிடங்கா? புதைகுழியாவெனத் தெரியவில்லை. ஆனால் அது வெட்டப் பட்டுக்கொண்டிருக்கிறது. அது ஆழமாகிறது, நாள் தோறும். வெற்றி வாகை சூடியிருந்தான்  அரசன். அவனது படையினர் அது நடுகிடங்கென்றார்கள். அவர்கள் சொல்வதே சரி என்றாகிவிட்டது நிலமை. ஏனென்றால் அவர்கள் வெற்றி பெற்றவர்களாயிருந்தனர். வெல்லப் பட்ட மக்களோ ஊமைகளாயிருந்தனர். அவர்கள் ஐவருக்கொருவராய் படையினரால் சூழப்பட்டிருந்தனர். எதிர்ப்பின் குரல் வளைகளை இல்லாதொழிக்கும் ஆயுதங்களை படையினர் கொண்டிருந்தனர். அதன் வரிசை நீண்டு சென்றது. கண்காணிப்பு, கழிவு ஒயில், கல்லெறி, காடைத்தனம், கைது, கைத்துப்பாக்கி, கலாஸினிகோவ்.. என.


கார்த்திகை மாதம். மரித்தவர்கள் மீது பயம், விளக்குகள் மீது பயம், வணங்குவோர் மீது பயம், மரம் நட்டால் பயம், மணியடித்தால் பயம். தெனாலி திரைப்படத்தில் கமலஹாசன் பயப்படும் பட்டியலை விட நீளமான பயப் பட்டியல் அரசனுக்கும், படைகளுக்கும், கார்த்திகை மாதத்தில். பயந்தவர்களின் ஆயுதமானது கல்.

கத்தரிக்கப்பட்ட செய்தி: "வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் . ஆர்னோல்ட், மற்றும் சாவகச்சேரி, கரவெட்டி, வல்வெட்டித்துறை, வலி கிழக்கு போன்ற பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்களின் வீடுகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது."

எங்கும் கண்ணாடிகள் சிதறிக் கிடந்தன. மக்களின் அற்ப சொற்ப நம்பிக்கைகளைப் போல.
#
யாழ்ப்பாணக் காவல் துறை நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கல்லெறிகள் குறித்த கேள்விகளுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பதில்.

கத்தரிக்கப்பட்ட செய்தி: "இத்தாக்குதல்கள் தொடர்பாக அந்தந்தப் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து யாரும் எந்தத் தகவல்களையும் தரவில்லை. தந்திருந்தால் அவர்களைப் பிடித்திருப்போம்".

உங்கள் சீருடைகளையும் எங்களிடம் தாருங்கள். கைது செய்வதையும் நாங்களே செய்து விட்டுப் போகிறோம், என்ற எண்ணத்தை ஆழப் புதைக்க வேண்டியிருந்தது. வெற்றி பெற்றவர்களின் கைகளில் குவிக்கப்பட்டிருந்தன, புகழும், பணமும், அதிகாரங்களும். நீங்கள் ஒரு குடிமகனா? அல்லது தேசவிரோதியா? என நிர்ணயம் செய்யும் அதிகாரம் அவர்களுக்கிருக்கிறது. சிங்கள மொழி, சரணாகதியின் மொழி அல்லது மௌனம் போன்ற மொழிகள் குடிமகன் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும், இலகுவாக. தமிழ் மொழி, அதிருப்தியின் மொழி அல்லது நியாயம் கேட்கும் மொழி என்பவை தேசத்துரோக மகுடத்தை உங்களுக்குத் தரும், மிக இலகுவாக. முன்னைய மொழிகளே செய்தியாளர் கூட்டங்களின் பிரகடனப் படுத்தாத உத்தியோகபூர்வ மொழிகளென்றாயிற்று. எண்ணங்களையும், எதிர்வினைகளையும் புதைக்க வேண்டியிருந்தது, தொண்டைக் குழிகளில்.
#
தெருவெங்கும் திரிகின்றன ஓநாய்கள். அவை ஆடுகளை இழுத்துச்செல்கின்றன, ஒன்றாயும், பலவாயும். புதர்களின் மீது படிகிறது, இரத்தம். அதன் வெடில் கலக்கிறது காற்றின் துகழ்களில். தப்பிய ஆடுகளின் கதறல் துளைக்கிறது, மனிதமுள்ளவர்களின் இதயங்களை. இணைகளை இழந்த மறி ஆடுகள், தந்தையரை இழந்த குட்டி ஆடுகள், குட்டிகளை இழந்த தாயாடுகள். ஆடுகளின் கதறல் கடவுளர்களுக்கும் கேட்கவில்லை. கடவுளர்கள் கோவிலற்று அலைந்து கொண்டிருந்தனர், அகதிகளாக.
#
பிரித்தானியப் பிரதமர் பொது நலவாய நாடுகளின் உச்சி மாநாட்டுக் காலத்தில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். காணாமற் போனவர்களின் உறவுகள் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடாத்தினர், யாழ் நூலகத்தின் முன்பாக.

கத்தரிக்கப்பட்ட செய்தி: "பொது நூலகத்திற்கு முன்பாக இடம் பெற்ற போராட்டத்தின் போது, பொது மக்களையும், பாதிரியார்களையும் பொலிசார் தாக்கியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைககப் பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோக் காட்சிகள், புகைப்படங்கள், பலவும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

"அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முதலில் பொது நூலகத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்தனர். இதன் பின்னர் துரையப்பா விளையாட்டரங்கில் ஹெலி வந்திறங்கியதும், மந்தைகள் போல அங்கு ஓடிச்சென்றனர். இங்கு வந்த பிரதமருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்குவதே எமது பணியாகும். ஏதாவது அசம்பாவிதம் நடை பெற்றால் எமது நாட்டிற்குத்தான் அவமானம். தமது கடமையினையே பொலிஸார் அங்கு செய்தார்கள். மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை".

அந்த ஆடுகளின் கதறல்களை அவமானகரமானவை என்றன, ஓநாய்கள். மௌன விரதம் அனுஷ்டிப்பதன் மூலமாகவோ, ஆங்காங்கே வாழாவிருந்து துயரங்களை அசைபோடுவதன் மூலமாகவோ, நாட்டின் கௌரவத்தைப் பேண வேண்டிய அவசியத்தை அவை வலியுறுத்தின. ஆடுகள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஓநாய்களின் நன் மதிப்பைப் பெறவேண்டிய அவசியம் குறித்தும் அவை பிரசங்கித்தன.
#
கத்தரிக்கப்பட்ட செய்தி: "யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக சில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக கடந்த 26ம் திகதி துப்பாக்கியால் சுடப் பட்டு நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப் பட்டுள்ளார். நேற்று முந்தினமிரவு மீசாலையில் உள்ள சாவகச்சேரிப் பிரதேச சபையின் உறுப்பினர் வீடு தாக்கப் பட்ட சம்பவத்திலும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே யாழில் துப்பாக்கிதாரிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

"....... யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்தப் பிரச்சனை இருக்கிறது".
#
அவர்கள் சூழப் பட்டிருந்தனர், படையினரால். மக்களில் ஐவருக்கு ஒருவன் என்ற  விகிதத்தில். இழந்த உறவுகளை நினைத்து ஒரு மெழுகு திரியைத்தானும் ஏற்ற முடியவில்லை அவர்களால். ஒரு சிறிய செடியைத்தானும் அவர்களால் நட முடியவில்லை. அவர்கள் விடும் பெருமூச்சுகள் கூடக் கண்காணிக்கப் பட்டுக் கணக்கெடுக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் துப்பாக்கிதாரிகள் திரிகின்றனர், இலக்கத்தகடுகள் அற்ற வாகனங்களில்.
#
வெட்டப் பட்டுக் கொண்டிருந்த கிடங்கின் அருகில் ஒருத்தனை இழுத்து வந்தனர். அவனது கைகள் பின்புறமாகக் கட்டப் பட்டிருந்தன. கிடங்கின் அருகில் முழந்தாழிடச் செய்தனர், அவனை. அவனது பிடரியில் துப்பாக்கிக் குழல் வைக்கப் பட்டது. அது கொதித்துக் கொண்டிருந்தது. தொடர்ச்சியாகக் குண்டுகளைக் கக்கியிருக்க வேண்டும். இப்போது அவனது கணம். விதி முடியும் தருணம். சிரசை ஊடறுத்துச் சென்றது குண்டு. அவனைக் கிடங்கினுள் தள்ளினர். புறங்காலால் மண்ணைத் தள்ளி மூடினர். அவர்களது நீளமான பெயர்ப் பட்டியலில் அவனது பெயர் மீது கோடிட்டனர், குறுக்காக. நல்லிணக்கத்திற்கான கடைசி நம்பிக்கை.

பிணங்களால் மூடப் பட்ட கிடங்கில் அவர்கள் ஒரு செடியை நட்டனர். அது கருப்பாக இருந்தது. அசுரத் தனமாக வளர்ந்தது. அந்த மண்ணின் உயிரை அது உறிஞ்சியது. அதன் வேர்கள் கருப்பு. இலை கருப்பு. தண்டு கருப்பு. கரிய பெரு விருட்சமாக வளர்ந்தது அது. அதன் பூக்களின் கேசரங்கள் குழந்தைகளின் விலா என்புகளாய் இருந்தன. அதன் கனிகளில் விதைகளிற்குப் பதில் மண்டையோடுகள். அந்தக் கருப்பு விருட்சத்திற்கு அவர்கள் 'சமாதானம்' என்று பெயரிட்டனர்.