சனி, 27 மே, 2017

புனலனர்த்தம்

உன் கையில் இருக்கும் பைபிளை என்னால் நிராகரிக்க முடியாது. அது காட்டும் அற விழுமியங்கள் என் ஆன்மாவிற்கும் அண்மித்தவைதான்.

ஆனால், உன் மறு கையில் நீ துப்பாக்கியை வைத்திருக்கிறாய்* என்பதையும் நான் மனதிருத்துகிறேன். நீ துப்பாக்கியை வைத்திருக்கிறாய் என்பதற்காக நான் பைபிளை நிராகரிக்கப் போவதில்லை. நீ துப்பாக்கி வைத்திருக்கிறாய் என்பதற்காக நான் பைபிளை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. அது என் ஆன்மாவிற்கு அண்மித்தது என்பதனால் மட்டுமே நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்.

அதை நான் ஏற்றுக் கொள்ளும் போதும், நீ மறு கையில் துப்பாக்கியை வைத்திருக்கிறாய் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதனை நான் உதாசீனப் படுத்த முடியாது. அதை நான் காணவில்லை என்பதாகப் பாவனை செய்யவும் முடியாது.

நாங்கள் எல்லோரும் எக்காளமிடுபவர்களும் இல்லை. 'நீளப் பகை நினைந்து’ வன்மமுறுபவர்களும் இல்லை. அநுராதபுரத்தில், கொழும்பில், காத்தான் குடியில், கெப்பிட்டிகொலாவையில் குருதி தோய்ந்த உடலங்களைக் கண்டு வெதும்பியவர்கள் தான் எம்மில் அதிகம். 

குமுதினிக்கும், கிளாலிக்கும், கொக்கட்டிச் சோலைக்கும், மக் கெய்சர் மைதானத்திற்கும், நவாலிக்கும், செஞ்சோலைக்கும் இன்னும் நீண்டு செல்லும் பட்டியலுக்கும் வெதும்பியவர்களை, என் கைவிரலளவுக்கு மேல் நான் கண்டதில்லை.

புனலனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட மனிதங்களை எண்ணி எம்மால் எக்காளமிட முடியாது. பாற் சோற்றையும், வெடியின் ஓசையினையும் பின் தள்ளி வைத்து விட்டு, நாங்கள் கலங்குகிறோம்.


என்றாலும், பாற் சோற்றையும், வெடியொலியையும் நிகழவே இல்லை என பாவனை செய்யவும் எங்களால் முடியாது.

‘இராசதந்திரப் பகை மறப்பு’, ‘இராசதந்திர எக்காளமின்மை’ என்பதற்கப்பால், பகையற்ற நட்பும், இழப்பின் போதான ஒத்துணர்வும் புற நடையற்று எல்லா மனங்களிலும் உருவாக வேண்டுமெனின், உன் மறு கையில் இருக்கும் துப்பாக்கியைத் தூர எறிந்து விடு. பாற் சோற்றையும், வெடிக் கட்டையையும் தான்.


(* ஒரு கையில் பைபிளுடனும், மறு கையில் வாளுடனும் போர்த்துக்கீசியர்கள் வந்தார்கள் எனச் சொல்வார்கள்)