ஞாயிறு, 17 நவம்பர், 2019

அல்லல் சொன்னக்கால், வாழாங்கிருப்பீர்! வாழ்ந்து போதீரே.

மிகவும் புரிந்துணர்வுடனும், பரிவுடனும், ஒரு வகையில் துயரத்துடனும் இதனை எழுதுகிறேன். 
 
தேர்தல் முடிவுகளின் திசை தெரிந்து விட்டது. ஒருவகையில் தமிழர் தரப்பின் தோல்வி காலக் கோட்டில் முன் தள்ளப் பட்டிருக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், தேர்தலில் மறு தரப்பு வென்றிருந்தால் தமிழர் தரப்பின் தோல்வி வெளித்தெரியும் காலம் சற்றுப் பின்னே தள்ளப் பட்டிருக்கும். அவ்வளவே.
 


ஆனால் இந்தத் தேர்தலில் எமக்குள் நடந்த உரையாடலின் தரம் தான் என்னையும் என் போன்றவர்களையும் துயரத்தில் ஆழ்த்துகிறது. எனையொத்தவர்களின் தலைமுறை வயதளவில் அரை நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தலைமுறை. தமிழர் பிரச்சனையினைப் பாராளுமன்ற முறைமையினூடாக அணுகுவதன் தோல்வியை எங்கள் பதின்ம வயதுகளில் நேரடியாகத் தரிசித்தவர்கள். அதே காலத்தில் முகிழ்த்த போராட்ட வழியையும் அதன் மழலைப் பருவத்தையும், சிறுவப் பருவத்தையும், பின் அது தன் பின்னிளமைக் காலத்தில் அகாலமானதையும் கூட நாங்கள் தரிசித்தோம். எங்களது தலைமுறை விட்ட தவறுகளின் பங்காளர்களாகவும் சாட்சிகளாகவும் இருந்தோம். ஆனால் வேறு வழியில்லை. எங்களுக்கு எந்த முன்னுதாரணங்களும் இருக்கவில்லை. நாங்களே சிந்தித்து, நாங்களே எமக்குச் சரியெனப் பட்டதைச் செய்து, அது பிழைத்தால் அதிலிருந்து கற்று, முன் செல்ல வேண்டியிருந்த அல்லது முற்றுப் புள்ளி வைக்க வேண்டியிருந்த தலை முறை.

ஆனால் உங்களது தலை முறைக்கு ஒரு பெரு வாய்ப்பு  இருக்கின்றது.  எங்களின் தலைமுறை பெற்ற பட்டறிவிலிருந்து முன் செல்வது தான் அது.

  1. அரசியலை அறிவு பூர்வமாக அணுகுங்கள். ஆழமாக அணுகுங்கள். உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, மேலோட்டமான சிந்தனைகளின் பின் சென்று விடாதீர்கள். அரசு வேறு, அரசாங்கம் வேறு. நாடு வேறு, தேசம் வேறு. சிறுபான்மையினம் வேறு, தேசிய இனம் வேறு. இராஜதந்திரம் வேறு, பூகோள அரசியல் வேறு. கொள்கை வேறு, கோரிக்கை வேறு. பகை முரண் வேறு, சிநேக முரண் வேறு. எது எது என்பதைப் பிரித்தறியுங்கள். மிகுந்த தேடலுடன் அரசியலை அணுகுங்கள். வாசியுங்கள், உரையாடுங்கள்.
  2. கண்ணியமாக உரையாடுங்கள். சுத்துமாத்து மந்திரன், சொம்புகள், சைக்கிள் தம்பிகள், குபீர் குமார் போன்ற விளிப்புகள், அதன் பின் இருக்கும் மனநிலை உங்கள் கருத்தை மற்றவர் நோக்கி இம்மியளவும் கொண்டு செல்லப் போவதில்லை. கருத்துக்கள் வார்த்தையளவிலேயே நிராகரிக்கப் பட்டு விடும். மற்றவரை விட நீங்கள் புத்திசாலி என்று நிரூபிப்பதா, அல்லது உங்கள் தரப்புக் கருத்திலுள்ள உண்மைகளையும் கருத்தில் எடுக்கச் சொல்வதா உங்கள் உரையாடலின் நோக்கம்? மீண்டும் கவனியுங்கள்: பகை முரண் வேறு, சிநேக முரண் வேறு. சில வேளைகளில் பார்க்கும் போது நீங்கள் பகை முரணைக் கண்ணியத்துடனும், சிநேக முரணை வக்கிரத்துடனும் அணுகுவது போல் தெரிகிறது.
  3. எமது பிரச்சனையின் தீர்வைத் தேர்தல் அரசியலுக்குள் தேடாதீர்கள். தேர்தல்கள் மூலோபயாக் கூறுகளும் இல்லை, தந்திரோபாயக் கூறுகளும் இல்லை, ஏன் உத்திக் கூறுகளும் இல்லை. அவை வெறும் உசாத் துணைகளே. எண்ணிக்கை அடிப்படையிலான சனநாயச் சட்டகத்துள், இன முரண் துருவமயப் பட்ட நாடுகளில், தேர்தல்கள் தீர்வை நோக்கி நகர்த்தா. அவற்றை நிராகரிக்கத் தேவையில்லை, ஆனால் அவை எமக்கான மையப் புள்ளிகள் அல்ல.
  4. எங்கள் வெற்றி, எமது கூட்டுப் பிரக்ஞை உருவாக்கம், திரளாக்கம், அறவழி, நேரடி சனநாயச் செயற்பாட்டு வடிவங்கள் என்பவற்றில் தங்கியிருக்கிறது. எமது போராட்டத்தின் உரிமையாளர்கள் நாங்கள் மட்டும் தான். பங்கீடுபாட்டாளர்கள் புலம் பெயர் மக்கள், தமிழக மக்கள், முற்போக்கு/விரிபடு  சிந்தனையுள்ள சிங்கள மக்கள், பிராந்திய/ சர்வதேச சமூகம் என்பவை தான். இவற்றில் ஒவ்வொரு தரப்புடனும் ஊடாட்டம் செய்யத் தேவையான தெளிவான வேலைத் திட்டம் எமக்குத் தேவை. புலம் பெயர் செம்புகள், பூகோள அரசியல் வகுப்பெடுக்கும் கோஷ்டி, இந்தியக் கைக்கூலி என்ற சொல்லாடல்களும், நிராகரிப்புகளும் எம்மை ஒரு அங்குலம் கூட முன்னகர்த்தா.
  5. எமது பேரம் பேசும் பலம் சந்தேகத்துக்கிடமற்ற எமது கூட்டுணர்விலும், அணிதிரளலிலும், எமது நியாயங்களை எமது பங்கீடுபாட்டுத் தரப்பினர் மறுக்கவியாலா வகையில் முன் கொண்டு செல்வதிலும் தான் தங்கியிருக்கிறது.
  6. நேரடிச் சனநாயகம் (Direct Democracy), சமூக இயக்கங்கள் (Social Movements), அறவழிப் போராட்ட வழிமுறைகள் (Ways of Non-Violent Struggle) என்பன பற்றி மிகப் பரந்து பட்ட வாசிப்பும், அறிமுகமும், பரிச்சயமும் எம் அனைவருக்கும் தேவை. தேடுங்கள்.

உலகில் அணுகுமுறைகள் தொடர்பாக இரண்டு தெரிவுகள் உள்ளன: விரைவான, எளிமையான ஆனால் பிழையான அணுகுமுறைகள் (Quick and Simple, but Wrong Approaches); மெதுவான, சிக்கலான ஆனால் சரியான அணுகுமுறைகள் (Slow and Complex, but Right Approaches). தெரிவு உங்களது.

என்னையும் ஒரு சொம்புத் தம்பியாக அல்லது சைக்கிள் தம்பியாகக் கருதுவீர்களாயின், "ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக் கால், வாழங்கிருப்பீர் திருவாரூரில் வாழ்ந்து போதீரே” என்று சுந்தரர் வாழ்த்தியதைப் போல வாழ்த்தி விட்டுக் கடந்து செல்வேன். துயரங்களுடன்.