சனி, 19 அக்டோபர், 2019

நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே!


பேசப் பெரிதும் இனியாய் நீயே (பாடல் ஒன்று)

நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே (பாடல் எட்டு)

திருநாவுக்கரசர் தேவாரம், ஆறாம் திருமுறை, திருவையாற்றுத் திருப்பதிகம்.

தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதி. யாழ்ப்பாணப் பல்களைக் கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீடத்தில் நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலம். பேராசான் சிவத்தம்பி  கொழும்புப் பயணத்தின் போது எமது பீடத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தார். 

நாங்கள் (விவசாய பீட மாணவர் ஒன்றியம்) கேட்டுக் கொண்டதற்கிணங்க ’70 ஆண்டு சமதர்ம ஆட்சியின் பின் சோவியத்தின் உடைவு: நாங்கள் கற்க வேண்டியவை’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலை எங்களுடன் நிகழ்த்தினார். 

அதன் பின்னர், நாங்கள் ஒரு சிலர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, சிரேஸ்ட ஆசிரியர்கள் அறைக்கு (Senior Common Room) எங்களை அழைத்து உரையாடினார். அப்போது அங்கிருந்த வேறு பேராசிரியர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் சக பேராசிரியரைப் பார்த்து நட்பார்ந்த தொனியில் சிவத்தம்பி சொன்னார், ‘உன்னிலை இருக்கிற பிரச்சனை என்னெண்டால், நீ கடைசியாப் படிச்ச புத்தகத்தில உள்ளது தான் சரி எண்டு நம்பிறது தான். எங்களுக்கெண்டு ஒரு நோக்கு நிலை இருக்க வேணும். அது மாறலாம். ஆனால் ஒண்டைவிட்ட ஒரு நாளுக்கு ஒருக்கா அது மாறக் கூடாது. அப்பிடி மாறினால் அது நோக்கு நிலை இல்லை. எங்கடை சொந்த நோக்கு நிலையிலிருந்து, உலக நடப்புகளை விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேணும். அதுகளை விளங்கிக் கொள்ள, விளங்கப் படுத்த முடியேல்லை என்றால், நோக்கு நிலையை இன்னமும் ஆழமாக்க வேணும், அகலமாக்க வேணும்’.

இன்றைய உரையாடல் வெளிகளைப் பார்க்கும் பொழுது, நோக்கு நிலையற்ற ஒரு பெரும் கூட்டமே உருவாகி, உலா வருவது துலாம்பரமாகத் தெரிகிறது. எந்த விடயம் குறித்தும் எந்த விதமான ஆழமான, அறிவு பூர்வமான பார்வை இல்லாது வெறுமனே கருத்துச் சொல்லும் முனைப்பு பீறிட்டுத் தெரிகிறது. வார்த்தையாடல்களில் வன்முறை கொட்டிக் கிடக்கிறது. 
 
‘வா எரும’, ‘அடே வெண்ண’, ‘உன்ரை அளப்பறை’, ‘பொத்திக்கினு கிட’ என்பதெல்லாம் மாற்றுக் கருத்தாளர்களை நோக்கிய சொல்லடிகள். சார்பான கருத்துக்களுக்கு, ‘செம’, ‘மாஸ்’, ‘தூள் கிளப்பிட்ட தல’ என்ற சொல்லாடல்கள். KFC சாப்பாடும், Coca Cola கொப்பளிப்பும் என்ற ‘Life Style’. 
 
இரவல் மொழி, இரவற் சொல்லாடல்கள், இரவல் வாழ்முறை, இரவற் சிந்தனை!

உலக மயமாதலின் மினுங்கற் கலாச்சாரத்தால் சலவை செய்யப் பட்ட மூளையிலிருந்து வரும் மலட்டுச் சிந்தனைகள். தங்களுடைய அறியாமைகளையே தங்களின் பதாகைகளாக உயர்த்திப் பிடிக்கும் அப்பாவித்தனம். சுய சிந்தனையிலிருந்து காயடிக்கப் பட்ட கல்விமுறையும், ஊடகக் கருத்தியல் ஆக்கிரமிப்பும் விளவித்த பரிதாபச் சந்ததி. ‘நுனிப்புல் மேய்வதறிவு’, ‘மின்னுவதெல்லாம் பொன்னே காண்’ இரைந்த படியே (கல்)சொல்லெடுக்கிறது!

நோக்கு நிலை தொலைத்த உலகத்தில், செவிகளைப் பொத்தி, விலகிச் செல்வதை விட வேறென்ன செய்யலாம்?

திங்கள், 7 அக்டோபர், 2019

இல்லாத கறுப்புப் பூனையை இருட்டறைக்குள் தேடுவது


 
இல்லாத கறுப்புப் பூனையை இருட்டறைக்குள் தேடுபவர்களைக் கண்டிருக்கிறீர்களா? 

நாங்கள் தினமும் காண்கிறோம்.

பாராளுமன்ற, தேர்தல் வரையறைகளுக்குள் தீர்வைத் தேடுபவர்கள், சனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிப்பதுதான் தமிழ் மக்களின் முன்னுரிமைகளில் முதன்மையானது என்ற எண்ணப்பாடு கொண்டவர்கள் எனப் பல வடிவங்களிலே இந்தப் பூனை தேடிகளைக் காணலாம்.

இந்தத் தீவின் அரசியல் அடிப்படை குறித்து, வரலாற்றில் இருந்தோ, நடைமுறை யதார்த்ததில் இருந்தோ, சுய புத்தியிலிருந்தோ புரிய முடியவில்லை என்றால் இவர்களை எவ்வாறு வர்ணிப்பது?

தென்னிலங்கைத் தேர்தற் களங்களில், நாங்கள் ஆதரவளித்து வெற்றி வாகை சூடியவர்களும், எங்கள் ஆதரவில்லாமலேயே வெற்றி வாகை சூடியவர்களும் செய்தது ஒன்றே ஒன்றுதான்: பேரினவாத நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் வழுவாது முன்னெடுத்துச் சென்றது தான் அது.

ஜே. ஆரில் இருந்து சந்திரிகாவூடாக மைத்திரி வரை கண்ட அனுபவம் இது.

ஆகவே, நாங்கள் செய்ய வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான்: எங்கள் மக்களைப், பட்டி தொட்டியெங்கும் சென்று, அரசியல் விழிப்புணர்வுள்ளவர்களாக்கி, நாங்கள் எவருமே எண்ணிக்கையடிப்படையிலான 'பெரும்பான்மைச்' சனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை, சரி நிகர் சமானமாக வாழத் தேவையான நிறுவன ஏற்பாடுகள் ஏற்படும் வரை, உங்களால் ஆளப்படுவதற்கு எமது தார்மீகச் சம்மதத்தைத் தர்ப் போவதுமில்லை என்று முரசறைந்து சொல்வது மட்டும் தான்.

இதற்கு அடிப்படைகள் மூன்று: கருத்துருவாக்கம்- கூட்டுப் பிரக்ஞை-திரளாக்கம்

இவற்றிற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதே,மிழ் மக்கள் இத் தீவிலே சரி நிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற வேணவாவுடன், உணர்ச்சிகளுக்கு அறிவுக் கடிவாளம் இட்டு உணர்வுகளாய் மடை மாற்றி, மக்களின் பங்கேற்புடன் ஒரு சமூக அரசியலியக்கத்தைக் கட்டியெழுப்பும் நம்பிக்கையுடன் செயற்பட விழையும் கருத்துருவாக்கிகளினதும், செயற்பாட்டாளர்களினதும் முன்னுள்ள பணி.

ஆகவே தான் சொல்கிறோம், இன்றைய முன்னுரிமை சனாதிபதித்  தேர்தலில் வாக்களிப்பது தொடர்பானதல்ல, மக்களிடம் செல்வதும் அவர்களி அணிதிரட்டுவதுமாகும். 

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்றான் பொய்யா மொழிப் புலவன்.

இது கொல்லாமை குறித்த குறளாயினும், இதன் பின்னால் உள்ள அறம் பன்மைத்துவத்தைக் குறித்து நிற்கிறது, வேண்டி நிற்கிறது.

ஒரு பெரிய மக்கட் திரளினுள் இருக்கக் கூடிய பல உப பிரிவுகள் குறித்தும், அம் மக்கட் திரள் வாழ்ந்து வரும் உயிர்ச் சூழல் குறித்தும், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ அறவொழுக்கத்தைப் பேணல் அம் மக்கட் கூட்டத்தைத் திரளாகப் பேணுவதற்கான முன் நிபந்தனையாகும்.

வேறு வகையிற் கூறுவதானால், ஒரு மக்கட் கூட்டத்தின் அகச் சூழலின் சனநாயத் தன்மையும், பன்மைத்துவத் தன்மையும், அந்தக் கூட்டத்தின் கூட்டுப் பிரக்ஞையை, கூட்டுணர்வை, திரளாக்கத்தை தீர்மானிக்கும் தீர்க்கமான அம்சங்களாகும்.

எனவே, மதம் சார்ந்த, சமூகத் தட்டடுக்குச் சார்ந்த, பொருளாதாரத் தட்டடுக்குச் சார்ந்த, பிரதேசம் சார்ந்த, பாலினம் சார்ந்த எந்தவொரு உப பிரிவும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ அற அடிப்படையிலேயே நோக்கப் பட வேண்டும்.

இது தமிழ் மக்கள் இத் தீவிலே சரி நிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற வேணவாவுடன், உணர்ச்சிகளுக்கு அறிவுக் கடிவாளம் இட்டு உணர்வுகளாய் மடை மாற்றி, மக்களின் பங்கேற்புடன் ஒரு சமூக அரசியலியக்கத்தைக் கட்டியெழுப்பும் நம்பிக்கையுடன் செயற்பட விழையும் கருத்துருவாக்கிகளினதும், செயற்பாட்டாளர்களினதும் முன்னுள்ள பெரும் பணியாகும்.