ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

துலா

அண்மையில் பொத்துவில் போயிருந்த பொழுது தான் துலாவைப் பார்த்தேன். துலாவைப் பார்த்துக் கன காலம் ஆகியிருந்தது அப்பொழுதுதான் உறைத்தது.

பொத்துவிலில் துலா பார்த்தது தியாகு அண்ணை வீட்டில். கடை நடத்த யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் போனவர் இப்போ பொத்துவில் வாசி. அவருடைய பிள்ளைகளில் இருவர் லண்டனில். ஒரு மகள் தம்பிலுவிலில் திருமணம் செய்து அங்கிருப்பதாகச் சொன்னார்.

அவரும் மனைவியும் மட்டும் பொத்துவிலில் இருக்கிறார்கள். நாங்கள் போனபோது 'கொமேட்' வைத்த 'பாத்றூம்' கட்டப் பட்டுக் கொண்டிருந்தது. பேரப் பிள்ளைகள் லண்டனிலிருந்து வந்து வீட்டில் தங்க வேணுமெண்டால் அது ஒரு முன் நிபந்தனையாகி விட்டதை அவர் சொன்னார். கிணற்றுக்கு இன்னும் 'மோட்டர்' போடவில்லை. துலா மட்டும் தான்.



அதற்கு முதல் துலாவைப் பார்த்தது தில்லையம்பலப் பிள்ளையார் கோவிலில். சின்ன வயதில் எல்லா இடமும் துலா இருந்தது. உசனில் மடத்துக்குப் பின்னால் இருக்கும் நல்ல தண்ணிக் கிணற்றுக்கும் துலா இருந்தது. கந்தரோடையிலிருந்து சுன்னாகத்திற்கு அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து போகும் பொழுதுகளில், 'இரண்டு துலாக் கிணத்தடியை' கடந்து போவது மெலிதாக ஞாபகமிருக்கிறது. இப்ப கிணறும் இல்லை, துலாவும் இல்லை. இரண்டு துலாக் கிணத்தடி இருந்த சுவடும் இல்லை.

துலாவைப் பற்றிய நினைவு வரும் பொழுது, விடிகாலையில் வழமையாகத் துலா மிதிக்க வருபவனைப் போல வந்து, தோட்டத்திற்குத் தண்ணி கட்ட, மனிதர்களைப் பேய் கூட்டிக் கொண்டு போனதான சின்ன வயதுப் 'பேய்க்கதைகள்' ஞாபகம் வரும். 

அந்த ஞாபகம் வந்தால், ரஞ்சகுமாரின் 'கோளறுபதிகம்' ஞாபகம் வரும். 
 
"ஒரு தடவை மற்றவர்களை விட நல்ல அலம்பர் வெட்ட வேண்டும் என்ற அவாவில் அப்பு காட்டுக்குள் வெகுதூரம் போய்விட்டார். அப்புவுக்கு அப்போ நல்ல வாலிபம். மல்லன் போல உடல் கட்டு. கல்யாணமாகி எனது அம்மா பிறந்து அப்போது தான் தவழ்கிறாளாம். அப்புவின் வாழ்க்கையில் உல்லாசம் வீசுகின்ற காலம், நல்ல பாரமாக அலம்பர் வெட்டி விட்டார். மற்றவர்களுக்கெல்லாம் பொறாமை. அப்புவையும் அவரது பிரசித்தி பெற்ற 'வடக்கன்' களையும் விட்டு விட்டு அவர்கள் முன்னே வண்டிகளை ஒட்டிச் சென்று விட்டார்கள். அப்பு இரண்டு மூன்று 'கட்டை' பின் தங்கிவிட்டார். அக்காலங்களில் அப்புவுக்குப் பயமே கிடையாது. வாலிபம் அல்லவா?

நிலவு பகல் போலக் காய்கிறது. அப்போ தார் ரோட்டுகள் கிடையாது. குண்டுங் குழியும் புழுதியும் நிறைந்த மக்கி ரோட்டுக்களும், வண்டிப் பாதைகளும் தான். வண்டி நிறைந்த பாரம். 'வடக்கன்'கள் முக்கித்தக்கி இழுக்கின்றன. வண்டி அப்படியும் இப்படியுமாக இலேசாகத் தாலாட்டுகிறது. பாதையின் இருபுறமும் தாழம்புதர்கள் மலர்ந்திருந்ததால் 'கம்'மென்ற வாசனை. கண்டல் மரங்கள் நீருக்குள் முக்குளித்து நிமிர்ந்தன. நீரில் கண்டல் சாயம் ஊறி தேயிலைச்சாயம் மனோரம்யமான சிவந்த நிறம் காட்டுகிறது. காற்று வேறு மெல்ல வீசிற்று. தனிமை தந்த சலிப்பும் ஏக்கமும் வாட்டுகிறது. அப்புவுக்கு பாட்டு வந்தது. பாடத் தொடங்கினார். 

வயல் வெளிகளும் சிறுபற்றைகளும் மாறிமாறி வருகின்றன. அப்புவை நோக்கிக் கையசைத்து பின்னால் போய் நின்று திரும்பிப் பார்த்தன. வயல்வெளிகளினூடாக யாரோ ஒருவன் நொண்டி நொண்டி வருகிறான். செம்பாட்டு மண்ணில் விழுந்து புரண்டவன் போல பழுப்புநிற வேட்டி கட்டியிருக்கிறான். வந்தவன், வாய்பேசாமல் பிண்ணியத்தில் பிடித்து தூங்குகிறான். பின்பாரம் மிக அதிகா¢த்து மாடுகளை தூக்க எத்தனித்தது. மாடுகளின் வாயிலிருந்து வெண்நுரை கக்கிற்று. அப்பு திட்டினார். 

"வேசைபிள்ளை, எடடா கையை... துவரங்கம்பாலை வெளுப்பன்."

அவன் முன்னால் வந்தான். வந்தவன், நுகத்தடியில் ஏறி உட்கார்ந்தான். அவனுடலிலிருந்து கெட்ட நாற்றம்- மலநாற்றம் வீசிற்று. மாடுகள் வெருண்டடித்தன. கதறின. பாரம் தாங்காமல் முன்னங்கால்களை மடித்து விழுந்தன. அப்புவுக்குச் சினம் பொங்கிற்று. 

"எளிய வடுவா..." என உறுமியபடி, ஆசனத்திலிருந்தபடியே எட்டி அவனது முதுகில் துவரங்கம்பால் சாத்தினார். கூர்மையான குரலில் ஓலமெழுப்பியபடி அவன் பாய்ந்து இறங்கினான். அப்போது கோடை வானம் கிழியும்படி ஒரு மின்னல் தெறித்தது. மின்னல் ஒளியில் வந்தவனை அப்பு நன்றாகக் கண்டார். வானத்துக்கும் பூமிக்குமாக அவன் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தான். சில நொடி கழித்து பெரும் இடியோசை கேட்டது. அத்துடன் கூடவே அப்புவின் நெஞ்சில் பலத்த உதை கிடைத்தது. வண்டியின் துலாவில் அப்பு மயங்கிச் சாய்ந்தார். எப்படி வீடு வந்து சேர்ந்தோமென அப்புவுக்கு இப்போது தெரியாதாம். அதெல்லாம் அவரது பாதைபழகிய அருமையான வடக்கன் மாடுகளின் மகிமை என நன்றியுடன் சொல்லுவார். 

"நீ பேயைக் கண்டா என்னடா செய்வாய்?" என்று அப்பு எகத்தாளமாய்க் கேட்பார். 

"பயத்திலை கழிஞ்சு போடுவாய்" என பொக்கைவாய் சிரிக்கும். 

"இப்ப உந்த மெஷினுகள் வயலுகளுக்கை ஒண்டுபாதி சாமமெண்டும் பாராமல் உழுது உழுது பேய்பிசாசெல்லாம் எந்தப் பக்கம் போனதெண்டு சொல்லேலாமல் போவிட்டுது" என மிக வருத்தத்துடன் முத்தாய்ப்பு வைப்பார். "

பேய் பிசாசெல்லாம் போன மாதிரி துலாக்களும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டன,எங்கள் வாழ்க்கையிலிருந்து.
 
தியாகு அண்ணரின் கிணற்றில் ஒரு வாளி தண்ணீர் அள்ளினேன். ஒவ்வொரு நாளும் அள்ளிக் குளித்தால், ஜிம்முக்குப் போகத் தேவையில்லை.

மோட்டர் பூட்டி, ராங்கில தண்ணி ஏத்தி, பாத்றூமிலை குளிப்பது வசதி.

வசதியும், சந்தோசமும் ஒன்றை இழந்து தான் மற்றொன்றைப் பெற வேண்டும் என்பதான விடயங்களாகி விட்டனவா?