புதன், 23 நவம்பர், 2016

தோற்றவர்களின் பாடல்

அவர்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்
சிரிக்கட்டும்.
முயலாதவர்களின் எக்காளச் சிரிப்பு.
தோற்றுவிட்டோமென ஏளனமாய்....
முயலாதவர்களின் எக்காளச் சிரிப்பு.

முயலாதவர்கள் தோற்பதில்லைத்தான்.
என்றாலும் அவர்கள் வெல்வதுமில்லையே.....

அவர்களின் சிரிப்பைத் தட்டி விடுகிறேன்...
பின்புறத்தில் ஒட்டிய மண்ணைத் தட்டுவதாய்...
முயன்று தோற்ற இறுமாப்போடு.

என்னால் மீண்டும் முயல இயலும்,
என்னால் மீண்டும் தோற்க முடியும்,

என்னால் மீண்டும் வெல்லவும் முடியும்...........

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

வட்டுக் கத்தரி, பசுமைப் புரட்சி, கருத்துருவாக்கம்

வட்டுக் கத்தரி


அதிகாலையில் எழுந்து, புலர்வின் முன்னதாக நடக்கச் செல்லுவது எனது தினசரி வழமை. பண்ணைக் கடற்கரைக்குச் சென்று, தீவுப்பகுதிகளுக்குச் செல்லும் பண்ணைக் கடற்பாதை வழியே நடந்து மீண்டும் திரும்பும் போது வானம் வெளுத்திருக்கும்

யாழ்ப்பாணக் கோட்டைக்கும் பண்ணைக் கடலுக்கும் இடையில் நடப்பதற்கென நடைவழியும் அதன் இருமருங்கும் புற்றரையும் அமைத்திருக்கிறார்கள். இம்முறை மழைக்காலம் தொடங்குமுன் புற்றரையில், புற்கள் தவிர்ந்த செடிகளை வெட்டிச் செப்பனிட்டிருந்தார்கள். செடிகள் வெட்டப்பட்ட புற்றரையில் புற்கள் மட்டும் கம்பளம் விரித்தது போல் நிலமெங்கும் நிறைந்திருந்தன. அந்த அழகு சிறிது காலம் தான். பின்னர் மீண்டும் செடிகள் முளைத்தன. மீண்டும் வெட்டப்படும் வரை செடிகள் ஆங்காங்கே துருத்திக் கொண்டிருப்பது வழமை. வெட்டிய செடிகளில் முதலில் முளைத்தது வட்டுக் கத்தரி



பசுமைப் புரட்சி

வட்டுக் கத்தரி ஒரு வனத் தாவரம். அது மருத்துவ குணம் உள்ளது. எனினும் அது ஒரு பயிர் அல்ல. வட்டுக் கத்தரிக்குப் பதிலாக ஒரு கத்தரிச் செடியோ, வெண்டிச் செடியோ வெட்டப் பட்டிருந்தால் அதன் கதை அத்துடன் முடிந்திருக்கும். ஏனெனில் அவை வனத் தாவரங்கள் அல்ல. பயிர்கள். ஒரு தாவரம் எப்பொழுது பயிர் ஆகிறது? என்பது ஒரு சிக்கலான கேள்வி. மனிதன் ஏதாவதொரு பலன் கருதி ஒரு வகையான தாவரத்தைப் பெருந்தொகையில் ஒரே இடத்தில் வளர்க்க முனையும் போதுதாவரம்’ ‘பயிர்ஆகிறது என்பது எளிமையான விளக்கம்

ஆனால் மனிதன் அதனுடன் நின்று விடுவதில்லை. அவன் செய்கை பண்ணும் ஒரு பயிரிலே தனக்குப் பிடித்தமான இயல்புடைய தாவரங்களை அடையாளம் காண்கிறான். அதிகம் விளைகின்ற ஒரு செடி, அதிகம் ருசியான காய்கனிகளைத் தரும் ஒரு செடி, அதிகம் வீரியமாக வளர்கின்ற ஒரு செடி என ஒரு சிலவற்றை அடையாளம் கண்டு அவற்றிலிருந்தே அடுத்த முறை பயிரிடத் தேவையான விதைகளைப் பெறுகிறான். இதனைத்தெரிவுஎன்பார்கள். அறிவு மேலும் வளர, தனக்குப் பிடித்தமான பல இயல்புகளை ஒரே தாவரத்தில் பெறும் பொருட்டுக்கலப்பினப் பெருக்கம்எனும் உத்தியையும் மனிதன் கண்டடைந்தான். தெரிவினதும், கலப்பினப் பெருக்கத்தினதும் கூட்டு விளைவாக ஒரு குறித்த பயிரிலே பல வகையானவர்க்கங்களைமனிதன் உருவாக்கினான்.


இதன் உச்சமாக, ‘இலட்சியப் பயிர் வர்க்கம்என ஒன்றைக் கற்பனை செய்து, அதனை அடைவதற்காக பல்வேறு பயனுடைய இயல்புகளை உடைய வர்க்கங்களை கலப்பினப் பெருக்கம் மூலம் ஒன்று சேர்த்து அதில் வெற்றியும் அடைந்தான். கோதுமைப் பயிரில் இவ்வாறானஇலட்சிய வர்க்கங்களைஉருவாக்கி வெற்றி கண்டவர் நோர்மன் போர்லாக். இவரைத்தான்பசுமைப் புரட்சியின் தந்தைஎன்பார்கள். கோதுமையில் பெறப்பட்ட வெற்றியை நெல்லிலும் பெறும் முயற்சி நடை பெற்று . ஆர். 8 நெல்லினம் கலப்பின முறை மூலம் உருவாக்கப் பட்ட போது நெற் பயிர்ச் செய்கையிலும்பசுமைப் புரட்சிஏற்பட்டது.

பசுமைப் புரட்சிஎனும் சொல் பலருக்கு விரும்பத்தக்க, வரவேற்கத்தக்க, நன்மைகள் பலவற்றை விவசாயத்திற்கு வழங்கிய ஒருபுரட்சியைக்குறிப்பதாகவே அமைந்திருக்கின்றது. பொதுவான, மேம்போக்கான, ‘பிரபல்யம்வாய்ந்த, ஜனரஞ்சகமான ஊடகங்களைச் சார்ந்த வாசிப்பு உள்ளவர்களின் பொதுப் புத்தியில் அது அவ்வாறானதொரு படிமத்தையே உருவாக்குகிறது. ஆனால், ஆழமான, தேடலுடன் கூடிய வாசிப்புள்ள சிலருக்கு அது அவ்வாறானதாக இல்லை. ‘பசுமைப் புரட்சிஉருவாக்கிய மிகப் பாதகமான சூழலியல், சமூக, பொருளாதார, அரசியல் விளைவுகளை இவர்கள் அறிவார்கள். விவசாயத்தை விவசாய இரசாயனங்களையும், வீரிய விதைகளையும் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களில் தங்கியிருக்கும் ஒன்றாக மாற்றியதுபசுமைப் புரட்சிதான் என அவர்கள் நன்கறிவார்கள். சூழலியலாளர் வந்தனா சிவாவின்பசுமைப் புரட்சியின் வன்முறைஎன்ற நூலை வாசிக்கும் ஒருவருக்குபசுமைப் புரட்சிஎன்ற சொல் பசுமையானதாகத் தோன்றாது.


கருத்துருவாக்கம்

ஆனால் எத்தனை பேருக்கு அவ்வாறானதொரு ஆழமான, நீளமான புத்தகத்தை வாசிக்கும் ஆர்வமும், பொறுமையும், நேரமும் இருக்கிறது? ஆர்வம், பொறுமை, நேரம் போன்றவற்றின் போதாமைகளின் விளைவாக எமது வாழ்க்கையைப் பாதிக்கும் பல விடயங்கள் தொடர்பான மேலோட்டமான, ஜனரஞ்சகமான புரிதலே எம்மில் பெரும்பான்மையோருக்கு இருக்கிறது. பணமும் அதிகாரமும் உள்ளோர், தமக்குத் தேவையான சம்மதத்தை இந்தப்புரிதலின் போதாமைகள்மீதே கட்டியெழுப்புகின்றனர்.


விடயங்களை விமர்சன ரீதியாகவும், பல்பரிமாண நோக்கு நிலை கொண்டும் அறிந்து கொண்டவர்கள் அதன் காரணமாக உருவாகும் மாற்றுக் கருத்துக்களை மக்களுக்குச் சொல்ல முனையும் போது எதிர் கொள்ளும் மிகப் பெரிய சவால்களும் இதே போதாமைகள் தான். ஆர்வம், பொறுமை, நேரம் என்பவற்றின் போதாமைகள்.


இவற்றை வெல்வதற்குத் தேவையானது புதிய அளிக்கை முறைகள்; சிறிய சிறிய கண்டடைதல்களாகப் பெரும் உண்மைகளைப் துண்டு துண்டாக வழங்குதலும், துண்டுகளிலிருந்து முழுமையைக் கட்டுவதற்கான இழைகளை வழங்குதலும். இவை சவாலானவை. எனினும் வேறு வழியில்லை. இன்றைய மனிதனின்கருத்தூன்று எல்லை’ (Attention Span) சமூக வலைத்தளப் பதிவுகளைப் மட்டும் உள்வாங்கும் அளவிற்குச் சுருங்கிவிட்ட நிலையில், அதற்கு இசைவாக சிறிய கண்டடைதல்களாக, கவிதைகள் போலக் கருத்துருவாக்கம் செய்ய நேரிட்டு விட்டது போலத் தோன்றுகிறது.

காவியங்கள் தூசி மண்டிக் கிடக்கின்றன, ஹைக்கூக்கள் கையிலேறுகின்றன. ஹைக்கூக்களாலான காவியங்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது