சனி, 23 டிசம்பர், 2017

ஆநிரை மீட்டல் #001


பண்டைக் காலத்தில் ஒரு நாட்டின் மன்னன் இன்னுமொரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பின், அதனை வெளிப்படுத்தும் வழிமுறையாகவிருந்ததுஆநிரை கவர்தல்’. அது தான் அக்காலத்தைய போர் அறம்.

அக் காலச் சமுதாயங்களின் செல்வத்தின் ஊற்றுக் கண்களாக அமைந்தவை ஆநிரைகள். ஆகவேதான் போராயத்தச் செய்தியாக விளங்கியது ஆநிரை கவர்தல். ஒரு நாடும் அதன் மன்னனும், நாட்டினது செல்வத்தைத் தக்க வைக்க முடியாவிட்டால், அந்த நாடும் மக்களும் சுபீட்சமாக இருக்க முடியாது. எனவே தான் ஒரு நாட்டினது மன்னனின் கடமையாக அமைந்தது அந்த நாட்டின் செல்வத்தை, ஆநிரைகளைப் பாதுகாத்தல்.  அவற்றிற்குப் பங்கம் நேர்ந்தால், அதற்குக் காரணமானவர்களோடு போர் புரிந்து அவற்றை மீட்டல் மன்னன் கடமை.

இன்றைய, நவீன யுக மனிதனது செல்வம் என்ன? அச் செல்வத்தினது ஊற்றுக் கண் என்ன? எல்லாரும் நினைப்பது போல்பணமும்’ ‘உடமைகளும்அல்ல. பெருவாரியான பணமும், உடமைகளும் இருந்தும், வாழ்வின் அழகை இரசிக்க முடியாமல், திருப்தி காண முடியாமல், மகிழ்வாக இருக்க முடியாமல் தவிக்கும் ஒரு மனிதன் செல்வந்தனா? அவனுக்கும்கல்லால் அடித்த செப்புச் சல்லிகூட இல்லாதவனுக்கும் என்ன வித்தியாசம்? இருவரது நிலையும் ஒன்றுதான். அலையடிக்கும் பேராழியின் நடுவே நிற்கும் நிலைதான்.

தண்ணீர்! நோக்குமிடமெல்லாம் நிறைந்துளது. குடிப்பதற்கோவெனின், ஒரு சிறு துளியுமிலது!

Time

இன்றைய உலகத்தில் செல்வத்தின் ஊற்றுக் கண்கள் இரண்டு: நேரமும், அசைதகவும் (Time and Mobility). இவை இரண்டும் கைவரப் பெற்றவர்களே, மட்டற்ற மகிழ்வும், கட்டற்ற வாழ்வும் கொண்டவர்கள். தன் வாழ்வுக்கு அர்த்தம் தர வல்ல செயல்களைச் செய்வதற்கு வரையறையற்ற நேரமுடையவன் மட்டற்ற மகிழ்ச்சிக்குச் சொந்தக்காரன். எந்த நேரமும் ஒரேயிடத்தில் கட்டுண்டு கிடக்காமல், விரும்பியவிடமெல்லாம் சென்றும் தான் செய்ய வேண்டியவற்றைச் செய்யும் வல்லமை பெற்றவன் கட்டற்ற வாழ்வுக்குச் சொந்தக்காரன். ஏனையவர்கள், ‘நேரத்தினதும்’ ‘இடத்தினதும்அடிமைகள். அடிமைகள் செல்வந்தர்களாக இருப்பதிலையே!

Work-is-no-longer-a-place-beach-1-1038x692

ஆகவேதான் இன்றைய அர்த்தத்தில், எங்களது ஆநிரைகள்நேரமும்’ ‘அசைதகவும்தான். அவற்றை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், போர்புரிந்தாயினும் கூட.

Work Anywhere
#சமகாலப் பயணியின் சிந்தனைகள்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்


தற்செயலாக முகப் புத்தக இடுகைகளைத் தட்டிக் கொண்டு போன போது தான் அந்தப் பதிவு கண்ணில் பட்டது. தமிழ் இணையப் பாவனை குறித்த ஒரு கலந்துரையாடல் தொடர்பான செய்திக் குறிப்பு அது.

Screen Shot 2017-04-10 at 9.53.14 AM

நீண்ட காலமாகப் புதிய விடயங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்ற மன ஆதங்கம் அதிகரித்திருந்தமையால், அதனைச் சற்றே அமைதிப் படுத்தலாம் என்றெண்ணி நிகழ்வுக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

நகருலிருந்து பிறவுன் வீதி வழியாகச் சென்று, கொக்குவில் பகுதியில் ஆடியபாதம் வீதித் தொடரூந்துக் கடவைப் பகுதியில் இடப் பக்கம் திரும்பி, ஆடியபாதம் வீதி வழியே கொக்குவில் சந்திப் பக்கம் சில மீற்றர் தூரம் சென்றதும், 'நூலகம்' நிறுவனம் தற்போது இயங்கி வரும் அலுவலகம் வரும். அங்குதான் கலந்துரையாடல்.

நான் அங்கு சென்ற பொழுது, உத்தமம் நிறுவனத்தின் சார்பாகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி. சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன், திரு. சி. சரவணபவானந்தன், திரு. ஹரிகரகணபதி, தமிழ் விக்கி பீடியாவின் முன்னோடி திரு. இ. மயூரநாதன் என்போர் ஏற்கனவே வந்திருந்தனர். சற்று நேரத்தின் பின்னர், போதியளவு கேட்போர் வந்த பின்னர் உரையாடல் ஆரம்பமாகியது. ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்கள் நடை பெற்ற அளிக்கைகள், உரையாடல் என்பவை முடிவுற்ற பொழுது நான் அறிந்து கொண்டவற்றையும், மனதில் உதித்தவற்றையும் இங்கு பதிவிடுகிறேன்.
  1. எமது பிரதேசத்தில் நிகழும் 'நல்லவை அல்லாதன' குறித்த செய்திகள் எம் மத்தியில் உரத்துப் பேசப் படுகின்றன. இந்தப் பிரதேசமே அறிவினதும், நல்லவற்றினதும் வரட்சியால் துன்புறுவது போன்ற மனப் பதிவையே ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என்பவை எம்முள்ளே ஏற்படுத்தியிறுக்கின்றன. ஆனால், ஆழமான, காத்திரமான பணிகள் இங்கே எதுவித ஆர்ப்பாட்டங்களுமிலாமல், அமைதியாக நிகழ்ந்தேறுகின்றன. அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் அவற்றைத் தம் தோள் சுமந்து நிறைவேற்றி வருகின்றனர்.
  2. இணைய மொழியாகத் தமிழைப் பயன் படுத்துவதற்கும், அதன் பாவனையைச் செழுமைப் படுத்துவதற்கும், பல தமிழறிஞர்கள் மிக அர்ப்பணிப்புடனும், தொலை நோக்குடனும் செயற்பட்டு, பலமான அத்திவாரத்தையும், தெளிவான பாதையையும் ஏற்கனவே உருவாக்கியிருக்கின்றனர். அதனை மேலும் செழுமைப் படுத்தும் பெரும் பொறுப்பு எம் முன்னே உள்ளது.
  3. தமிழ் விக்கிப் பீடியாவின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் ஈழத்து மாந்தரின் பங்களிப்பு அளப்பரியது. இதனை மென்மேலும் பரவலாக்க எம் அனைவரினதும் பங்களிப்பு அவசியம். தமிழினூடாக அறிவு சார் விடயங்களைக் கற்பதனைச் சாத்தியப்படுத்தும் ஒரு முயற்சியே தமிழ் விக்கிப் பீடியா.
  4. பாடசாலையில் கற்கும் சில சிறுவர்கள், விக்கிப் பீடியாவின் செழுமைக்கு மிகப் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
  5. நூலகம் நிறுவனம் ஆவணகம் என்னும் பல்லூடக ஆவணத் தளத்தை ஆரம்பித்து, அருமருந்தன்ன பல விடயங்களை ஆவணப் படுத்தி வருகின்றது. எம் இனத்தின் முதியவர்களுடன் பேசி அவர்களூடாக, எமது கடந்த கால வாழ்வியலை 'வாய்மொழி வரலாறு' ஆக பதிவேற்றல் மிகக் காத்திரமானதொன்று.
  6. தமிழ் இணையப் பாவனை, தமிழ் விக்கிப் பீடியாவை வளர்த்தெடுத்தல், எமது பிரதேச நூல்களையும், பல்லூடகத் தகவல் மூலங்களையும் எண்மியப் படுத்தி/ ஆவணப் படுத்திப் பேணல் என்பவற்றில் நாங்கள் ஒவ்வொருவரும் முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும்.
  7. பாரதி சொன்னதை நாங்களும் மீண்டும் உறுதியுடன் சொல்ல முடியும்.
பாரதி  

ஆநிரை இழந்த கதை


(இதனை எழுதத் தொடங்கும் போதுதான் தமிழில் Busy என்ற சொல்லிற்கு மிக அச்சொட்டாகப் பொருந்தக் கூடிய ஒற்றைச் சொல் இல்லை என்பது தெரிகிறது. கீழைத் தேய வாழ் முறையில் அவ்வாறான சொற்பதத்திற்கான தேவை எழுந்ததில்லையோ என்னவோ? நேரமற்ற வேலை மும்முரம் என்பதனையே Busy என்பதன் தமிழ்ப் பதமாக இந்த இடுகையில் நான் உபயோகிக்கிறேன்.)

ஆனிரை கவர்தல்

அண்மைய நாட்களில் அதீத வேலை காரணமான நேரமின்மைக்கு நான் ஆட்பட்டிருக்கிறேன். எனக்கு ஒரு நாளில் கிடைக்கக் கூடிய நேரத்தை விட, நான் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டிருக்கிறது. பிரச்சனைகளின் பின்னணி, அவை உருவாவதற்கான காரணங்கள் என்பவை குறித்துத் தெளிவாகச் சிந்திக்க நேரமின்றி அவற்றிற்கான தீர்வுகள் குறித்துத் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தகவல்களை உள்வாங்கத் தேவையான நேரத்ததை விட அதிகமாகத் தகவல்கள் வந்து குவிகின்றன. சிந்தனைகளையும் கருத்துக்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுவாக, அவற்றை ஒழுங்குபடுத்த முடியாத அளவிற்கு அவை ஏராளம் ஏராளமாய்த் தோன்றி மறைகின்றன. மனிதர்களுடன் அர்த்த பூர்வமாக உரையாட முடியாத அளவிற்கு அதிகமதிகம் மனிதர்களுடன் தினமும் உரையாட வேண்டியுள்ளது. அழைப்புக்களாலும், உடன் செய்திச் செயலிகளின் விழிப்பாக்கிகளினாலும் (Instant Messaging Alerts) திறன் பேசி கணகணத்துக் கொண்டிருக்கிறது.

விளைவு? என்ன செய்வது என்று தெரியாத அங்கலாய்ப்பு. பதற்றமான மனநிலை. மன அழுத்தம். மகிழ்வின் தொலைப்பு.

எனினும், நேரமற்ற வேலை மும்முரத்துடன் ஒருவர் இருக்கும் போதுதான் சமூகம் அவரை முக்கியமான ஒருவராகக் கருதுகிறது. நேரமின்மை ஒருவரின் முக்கியத்துவத்தின் குறிகாட்டியாக மாறிவிட்டது. இந்தத் தர்க்கத்தின் படி நானும் இப்பொழுது ஒரு 'முக்கியமான நபர்' ஆக மாறிவிட்டேன்.

ஆனால், 'நிற்க இருக்க' நேரமில்லாமல், 'தின்னக் குடிக்க' நேரமில்லாமல், 'சூரியன் சந்திரன் தெரியாமல்' மும்முரமாய் வேலை செய்து நான் என்ன பயனை விளைவிக்கிறேன்? என்ன செய்து 'கிழிக்கிறேன்'? ஒரு மனிதனாக, எனக்கு 'உள்ளே' 'வெற்றும் வெறிதுமாக', கோறையாக' நான் ஆகி விட்ட பொழுது, என்னால் என்ன பயனை விளைவிக்க முடியும்?

நேரமின்மை காரணமாக உடல் ஆரோக்கியமாக இல்லை. உடலுழைப்பு இல்லை. உடற்பயிற்சி இல்லை. நல்ல உணவைத் தெரிவு செய்து உண்பதுவுமில்லை. கிடைக்கும் உணவை 'அள்ளிக் கொட்டிக் கொண்டு' ஒட வேண்டியாகிவிட்டது. வாசிப்பதற்கு நேரமில்லை. அறிவுத் தேடல் இல்லை. கற்றறிந்த மனிதர்களோடு கதைப்பதற்கும் நேரமில்லை. தேவையுள்ள மானிடர்க்காய் 'பரிவும் பகிர்வும்' கொண்டு செயற்பட முடியவில்லை. குடும்பத்தினரைக் 'காண்பதுவுமில்லை'.
'நேரமற்ற வேலை மும்முரம்' என்னை முக்கியமானவனாக மாற்றவில்லை. 'உதவாக்கரை' ஆக ஆக்கியுள்ளது.

இதிலிருது 'விட்டு விடுதலையாதலே' முதற்பணி.

என்னுடைய 'ஆநிரையை' யார் கொண்டு போனார்? ஆநிரை மீட்டலே உடனடுத்த பணி.

ஆநிரை மீட்டல்

அருவியாய் வழிந்த வியர்வையைக் காற்று துடைத்ததோ குடித்ததோ அறியேன்... (நன்றி: ஆவியோ நிலையிற் கலங்கியது, யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன்)

ஏறத்தாழ மூன்று மாத கால இடைவெளியின் பின்னர் எனது வழமையான காலை நடையினை மீண்டும் தொடங்கிய மகிழ்வில் எனது மேசையின் முன்னர் இருக்கிறேன். அருவியாய் வழிந்த வியர்வை உலர்ந்து விட்டது. உடல் இலகுவாகவும், உள்ளம் புத்துணர்வுடனும் இருப்பதாக உணர்கிறேன். இந்தக் காலை நடையை மீண்டும் தொடங்கி ஏழு நாட்கள் ஆகிவிட்டன.

 

காலை வேளைகளில் நடக்கத் தொடங்கியது நான்கு வருடங்களுக்கு முன்புதான். நான் ஒரு இரவு ஆந்தை. நீண்ட நேரம் இரவில் என்னால் விழித்திருக்க முடியும். ஆனால் அதிகாலையில் எழுவது எனக்கு முடியாத காரியம். ஆகவே காலையில் எழுந்து நடந்து அதன் பின்னர் வேலைக்கு நேரத்திற்குச் செல்வது எனக்குச் சாத்தியமான ஒரு விடயமாக எனக்குத் தோன்றியதில்லை. எனது அலுவலக வேலையோ எப்பொழுதும் கணனியின் முன்னர் அசையாது இருக்கக் கோரும் ஒரு வேலை. ஒவ்வொரு வேலை நாளின் முடிவின் போதும் எனது உடலே எனக்குப் பாரமானதாகத் தோன்றத் தொடங்கியது. எப்பொழுது படுக்கையில் விழலாம் என எதிர்பார்க்கும் ஒரு உடற் களைப்பும் மனச் சலிப்பும் தோன்றத் தொடங்கியது. இவற்றிலிருந்து  விடுபட வேண்டும் என்றால் ஏதவதொரு வகையில் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. உடற் பயிற்சி தான் ஒரே வழி. 

தினமும்  வேலையை முடித்த பின்னர்  உடற் பயிற்சி செய்யலாம் எனத் தான் ஆரம்பத்தில் முயற்சித்தேன். என்றாலும் வேலையை 'முடிக்கக் கூடிய' நேரம் எனது கட்டுபாட்டில் இருக்கவில்லை. வேறு வழியின்றிக் காலையில் நடக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், ஆறு மணிக்கு எழுவது. ஆறரை மணியளவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஐந்து சுற்று நடப்பது. ஆறு மணிக்கு எழுவது பெரும் வேலை. அவ்வாறு எழுந்து, பின்னர் ஐந்து சுற்று நடந்தால் அது இமாலய சாதனை. அவ்வாறு நடக்கும் ஒவ்வொரு நாளும் மிகத் திருப்தியான நாட்கள். இந்துக் கல்லூரி மைதானத்திற்கு மண் நிரப்பித் திருத்தும் வேலை ஆரம்பித்த போது, யாழ்ப்பாணக் கோட்டையின் பின் பகுதியிலிருந்து பண்ணை வீதி வழியாக நடக்கத் தொடங்கினேன். 

அப்பொழுது பண்ணை வீதியின் முதற் பாலம் வரையான வீதி தான் திருத்தப் பட்டிருந்தது. துரையப்பா விளையாட்டரங்கத்தின் அருகில், துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு பண்ணை வீதியின் முதலாம் பாலம் வரை சென்று திரும்புதல் அன்றைய நாளின் மிகத் திருப்தி தரும் விடயங்களில் ஒன்று. பின்னர் பண்ணை வீதியின் திருத்த வேலைகள் தொடர்ந்த போது 'புதினம்' பார்க்கும் நோக்கத்தில், அவ்வப்போது திருத்தி முடிந்த வீதியின் எல்லை வரை நடக்கத் தொடங்கினேன். அதன் விளைவாக இரண்டாவது பாலம் வரை என் காலை நடை நீண்டது. அப்பொழுதும் அதன் தூரம் எனக்குத் தெரியவில்லை. இரண்டு கிலோ மீற்றர் வரை இருக்கலாம் என நான் நினைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் இரண்டாவது பாலம் வரை போய் வரும் போது 5 கிலோ மீற்றர் நடக்கிறேன் எனக் கற்பனை கொண்டிருந்தேன். அது குறித்துப் பெருமையும் கொண்டிருந்தேன்.  வீதித் திருத்த வேலைகள் முடியும் தறுவாயில், பண்ணை வீதியில் 'மைல் கற்கள்' (கிலோ மீற்றர் கற்கள்?) நாட்டப் படத் தொடங்கின. அப்பொழுதுதான், இரண்டாவது பாலத்தையும் தாண்டி மண்டைதீவுச் சந்திக்கு அருகில் சென்றால் தான் இரண்டு கிலோ மீற்றர் வரும் என்பது தெரிந்தது. என் கற்பனைப் பெருமை தகர்ந்து விட, இரண்டாவது கிலோ மீற்றர் கல் வரை சென்று திரும்புவதைப் புதிய இலக்காகக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். மொத்தம் நான்கு கிலோ மீற்றர்கள். அந்தத் தூரம் வழமைக்கு வர மூன்றாவது கிலோ மீற்றர் கல்லை அடைந்து திரும்புவது புதிய இலக்காயிற்று. பின்னர் அது நாலாயிற்று.

 

2016 டிசம்பர் இறுதியில், வேலை நாட்களில் நாலாவது கிலோ மீற்றர் கல் வரை சென்று திரும்புவதும், அவ்வாறான எட்டு கிலோ மீற்றர் தூரத்தில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை ஓடிக் கடப்பதுவும் (துள்ளோட்டம்- Jogging) வழமையாயிற்று. விடுமுறை நாட்களில் இது ஐந்தாவது கிலோ மீற்றர் கல் வரை சென்று திரும்புவது என்றாயிற்று. தூரம் கூடக் கூட காலையில் எழும் நேரமும் முன் தள்ளிப் போனது. இப்பொழுது அது அதி காலை 4.45 மணியாக இருக்கிறது. காலை 5.15 மணிக்கு நடக்கத் தொடங்கினால் 6.45 மணிக்கு மீண்டும் வீடு திரும்பிவிடலாம். 

எனது தொழிலில் புதிய பொறுப்பை இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட நாள் முதல் மூன்று மாதங்களாக என்னால் காலை வேளைகளில் நடக்க முடியவில்லை. ஏதொவொன்றை இழந்த துயரம் இந்த மூன்று மாதங்களும். என்றாலும், மீண்டும் முயன்று 'இழந்த வழமையை மீட்டெடுத்து, 'ஆநிரை மீட்ட அர்ச்சுனனாக' மகிழ்வாக இருக்கிறேன்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

ஜல் சாகர் (Music Room)

யாழ்ப்பாண நூலகத்தின் குவிமாடக் கேட்போர் கூடத்திற்குச்  செல்லும் படிக்கட்டில் நாங்கள் ஏறிக் கொண்டிருந்தபோது நேரம் பி.ப. 2.45. வழமையாக நூலகத்திற்குள் செருப்புக்கள் அணிந்து செல்ல முடியாது. நூலகத்தின் முன்றலில் உள்ள பாதணிப் பாதுகாப்பிடத்தில் அவற்றைக் கழற்றி வைத்து விட்டே செல்ல வேண்டும். ஆனால் குவிமாடக் கேட்போர் கூடத்திற்குச் செல்வதானால், மண்டபம் வரை சென்று, அதன் வாசல் உப்பரிகையில் செருப்புக்களைக் கழற்றினால் போதுமானது. போன தடவை இதே வழமையின் பிரகாரம் செருப்புக்களுடன் படியேற முற்பட்ட போது வாசலில் இருந்த நூலக ஊழியர் செருப்புக்களைப் பாதுகாப்பிடத்தில் விட்டுச் செல்லுமாறு கோரினார். இன்றைக்கும் அவர்தான் கடமையில் இருந்தார். செருப்புகளைக் கழற்றிக் கையளிக்க முனந்தபோது, தேவையில்லை, நீங்கள் செருப்புக்களை மேலே சென்று கழற்றலாம் என்றார். மாறும் என்ற விதி மட்டும் மாறாது, மற்றெல்லாம் மாறும்.

குவிமாட கேட்போர் கூடம் நூலகத்தின் இரண்டாவது மேற்றளத்திலே, முன்புறமாக இருக்கிறது. அப்படி ஒரு இடம் இருப்பதே அண்மையில் தான் எனக்குத் தெரிய வந்தது. வழமையாக நூலகத்தின் கேட்போர் கூடம் என்றால், முதலாவது மேற்றளத்திலே இருக்கும் பெரிய கேட்போர் கூடத்தைத்தான் குறிக்கும். பொதுவாக யாழ் நூல் நிலையத்தில் நிகழும் பகிரங்க நிகழ்வுகள் இங்குதான் நடக்கும். கோட்டை முனியப்பர் கோவில் பக்கமாக உள்ள பின்புற வாசலால் வந்தால் பெரிய கேட்போர் கூடத்தை அடைவது சுலபம். இன்னுமொரு குட்டிக் கேட்போர் கூடம் இருப்பது பிறகுதான் தெரிந்தது.

யேசுராசா அண்ணரின் முகப் புத்தகத்தில் தான் குவிமாடக் கேட்போர் கூடம் என்ற பிரயோகத்தை முதலில் கண்டேன். யாழ்ப்பாணப் பொது நூலக வாசகர் வட்டத்தின் பகிரங்க நிகழ்வுகள் இங்குதான் நடை பெற்று வருகின்றன. நூலக வாசகர் வட்டம் ஒவ்வொரு மாதத்தினதும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படக் காட்சியொன்றையும், நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளில் உரை நிகழ்வொன்றையும் கிரமமாக நடாத்தி வருகின்றது.

மே மாதம் நிகழ்ந்த முதலாவது திரையிடலுக்கு நான் செல்லவில்லை. அன்று இஸ்ரேலியத் திரைப்படமான Lemon Tree திரையிடப் பட்டது. பின்பு நடந்த இரண்டு திரைப்படக் காட்சிகளுக்கும் நான் போனேன். குரு தத்தின் ‘பியாசா’, அடூரின் ‘எலிப் பத்தாயம்’ என்பவை பின்னர் திரையிடப் பட்டன.

இன்றைக்கு சத்யஜித் ரேயின் ‘ஜல்சாகர்’ என்ற திரைப் படம் திரையிடப் படுவதாக இருந்தது. அதற்காகத் தான் படியேறிக் கொண்டிருந்தோம். முதலாவது தளத்திலிருந்து இரண்டாவதற்குச் செல்லும் படிக்கட்டின் வாசல் தற்காலிகத் தடுப்பொன்றினால் மூடப் பட்டிருந்தது. படக் காட்சி நடைபெறுவதாகவிருந்தால் இந்த நேரம் யேசுராசா அண்ணர் வந்து எல்லா முன்னாயத்தங்களையும் செய்து விட்டுப் பார்வையாளர்களுக்காகக் காத்திருப்பார். கடைசி நிமிடத்தில் ஓடி வந்து ‘ஆத்துப் பறந்து’ வேலை செய்யும் வழக்கம் அவரிடம் கிடையாது. எல்லாம் ஒழுங்காகவும், நேரத்துடனும் நடைபெற வேண்டுமென்று, மிகச் சிரத்தையுடன் அனைத்தையும் ஒழுங்குபடுத்தியிருப்பார். படிக்கட்டுத் தடுக்கப் பட்டிருப்பதால், படக் காட்சி இடம் மாறியிருக்க வேண்டும் அல்லது இரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும். செருப்பைக் கழற்றி விட முயன்ற போது கீழே இருந்த ஊழியர் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

என்னுடன் சேர்ந்து படியேறிக் கொண்டிருந்த மீராபாரதியும், சிறீஸ்கந்தராசா அண்ணரும் என்ன செய்வோம் என்று கேட்ட பொழுது, இன்னுமொரு நூலக ஊழியர் வந்தார். முதல் நாட் பெய்த மழையினால் சாளரங்களினூடாக மழை நீர் குவிமாட அரங்கிற்குள் வந்து விட்டதால் இன்று அதனைப் பாவிக்க முடியாதிருப்பதாகவும், திரைப்படக் காட்சி பிரதான கேட்போர் கூடத்திற்கு மாற்றப் பட்டுள்ளதாகவும் சொன்னார். அவர் பின்னால் பிரதான கேட்போர் கூடத்திற்குச் சென்றோம். முன்னாயத்தங்களை முடித்து விட்டு யேசுராசா அண்ணர் வழமை போலக் காத்திருந்தார்.

இந்த முறை எண்ணிக்கையில் குறைவானோரே வந்திருந்தனர். பதினைந்து இருக்கலாம். குருதத்தின் பியாசா படத்திற்கும் ஏறத்தாள இவ்வளவு பேரே வந்திருந்தனர். ஆனால் அடூரின் எலிப்பத்தாயத்திற்கு முப்பதுக்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். டொக்டர் முருகானந்தம், ஓவியர் இராசையா, கலாநிதி கந்தையா ஶ்ரீகணேசன் போன்றோர் ஏற்கனவே வந்திருந்தனர். வழமையாக வரும் கேதாரநாதன், கணபதி சர்வானந்தா போன்றோரை இம்முறை காணவில்லை.

பிற மொழிப் படங்கள் திரையிடப் படுவதானால் ஆங்கிலத்தில் sub-title இருக்கும் பிரதிகளையே திரையிடலுக்காகத் தெரிவு செய்வார்கள். என்றாலும் ஆங்கில மொழியில் பரிச்சயம் குறைவானவர்களின் நன்மைக்காகத் திரையிடப் படவுள்ள படம் தொடர்பான பின்னணித் தகவல்கள் உள்ளிட்ட ஒரு அறிமுகத்தை யேசுராசா அண்ணர் வழங்குவது வழமை. அது திரைப்படம் குறித்த புரிதலுக்கும், இரசனைக்கும் மிகவும் உதவியாக இருப்பது எனது அனுபவம்.



ஜல்சாகர் ஒரு சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட உன்னதமான திரைப்படம். 1958ம் ஆண்டு வெளிவந்ததாக அறிமுகவுரையில் சொல்லப்பட்டது. அதுகாலவரை கோலோச்சிய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் உடைவையும், எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த உள்ளூர் சிறு முதலாளிகளின் வெற்றியையும், இரண்டு மனிதர்களின் கதையின் ஊடாக மிகவும் கலை நேர்த்தியுடன் வெளிக்கொணர்கிறது, ஜல்சாகர்.

பிஸ்வம்பர் ரோய் தன் அரண்மனையின் உப்பரிகையில் தனிமையிலும், முதுமையிலும் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பெரிய நிலப் பிரபு. தூரத்தே ஒரு இயந்திரத்தின் ஒலி. அது என்னவென எஞ்சியிருக்கும் இரண்டு அரண்மனைப் பணியாளர்களில் ஒருவனிடம் வினவுகிறார். அது ஒரு மின் பிறப்பாக்கியின் ஒலி எனவும், ஒப்பந்தகாரர் மஹிம் கங்குலியின் மகனின் உபனயனம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவன் சொல்கிறான். மஹிம் கங்குலி இப்பொழுது பெரும் செல்வந்தன். ரோயின் நினைவு அவரது ஒரே மகனினது உபனயன நிகழ்வு நோக்கிப் பறக்கிறது. அது ஒரு மிகப் பெரும் நிகழ்வு. மிகுந்த பொருட்செலவுடன் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று. அவரின் குடும்பப் பெருமைகளை வெளிச் சொல்லும் வகையிலானதான் ஒன்று. அந்த நிகழ்வின் உச்சம் அவர் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்வுதான். உன்னதமான இசைக் கலைஞர்களை அழைத்து அதனை அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர் இசைக்கு அடிமை. அதன் பரம இரசிகன். தனது அரண்மனையில் ஒரு இசை அறையை (Music Room/ஜல்சாகர்) அதற்காகவே அவர் அமைத்திருந்தார். அங்கே இசை நிகழ்வுகளை நடத்தித் தன் நண்பர்களுடன் சேர்ந்து இரசிப்பது அவருக்கு மகிழ்வு தரும் ஒன்று. அது அவரது பெருமையை வெளிக்கொணரும் ஒரு வழிமுறையும் கூடத்தான். அவரது மனைவிக்கோ இது பிடிப்பதில்லை. அந்தக் குடும்பத்தின் செல்வத் தேட்டம் கரைந்து வருவதை அவள் நன்குணர்ந்திருந்தாள். அவரது நில புலன்களை வெள்ளப் பெருக்கும், செல்வத்தை படோடோபமான வாழ்வும் அரித்து வருவது அவளுக்குக் கவலை.

மகனின் உபனயன நிகழ்விற்குப் பிறகு அவர் ஒழுங்கு செய்த மிகப் பெரும் இசை நிகழ்வு ஒரு வருடப் பிறப்புத் தினத்தன்று நிகழ்ந்தது. அன்று தான் மஹிம் கங்குலி தனது புதிய வீட்டின் புது மனைப் புகு விழாவை ஏற்பாடு செய்திருந்தான். அதற்கு பிஸ்வம்பர் றோயையும் அழைத்திருந்தான். அந்த நிகழ்வுக்குச் செல்லாமல் இருப்பதற்காகவும், அதற்குப் போட்டியாகவுமே அதே நாளில் தனது ஜல்சாகரில் இந்த நிகழ்வை அவர் ஏற்பாடு செய்தார். ஒரே ஒரு வித்தியாசம். தனது பெட்டகத்தில் இருந்த பரம்பரை நகைகளை அடகு வைத்தே அந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய அவரால் முடிந்தது. தனது பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்த மனைவியையும், ஒரே மகனையும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அவர் மீள அழைத்திருந்தார். அன்றுதான் அவர் வாழ்வின் மிகப் பெரும் துயரம் நிகழ்ந்தது. வரும் வழியில் அவர் குடும்பம் பயணித்த படகைப் புயல் தின்று விட்டது.

இப்பொழுது எல்லாம் முடிந்து விட்டது. அவர் தனித்திருந்தார். அவரது நிலங்களை ஒன்றில் ஆற்று வெள்ளம் அரித்துச் சென்றுவிட்டது அல்லது பெற்ற கடனிற்காக வங்கி ஏலத்தில் விற்று விட்டது. நகைகளையும், தளபாடங்களையும் தான். தனது குடும்பத்தின் இழப்பிற்குப் பின்னால், உப்பரிகையை விட்டுக் கீழேயிறங்க அவர் மறுத்து விட்டார். மேலே தான் வாழ்க்கை. 

மஹிம் கங்குலியின் மகனது உபனயன நிகழ்வு அவரது பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. எஞ்சியிருந்த எல்லாவற்றையும் அவர் பார்க்க விரும்பினார். அவரது வெண்ணிறக் குதிரை. அவரது யானை.அவரது இசை அறை. எல்லாவற்றையும் தான். 

அவரது இசை அறை தூசி மண்டிப் போய்க் கிடந்தது. அவரது மூதாதையர்களுடைய படங்களும் தான். அவற்றைப் பார்த்த அந்தக் கணத்தில் அவர் மூன்றாவதும், இறுதியானதுமான ஒரு இசை நிகழ்வை ஏற்பாடு செய்ய மனம் கொண்டார். சொத்துக்களை விற்ற பின் எஞ்சியிருந்த ஒரு சிறு தொகைப் பணத்தைத் திரட்டி அந்த நிகழ்வை அவர் ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்வுக்கு மஹிம் கங்குலியையும் அழைத்திருந்தார். 

நிகழ்வின் இறுதி. இசைக் கலைஞர்களுக்கு பணமுடிப்புக் கொடுக்க வேண்டிய தருணம். மஹிம் கங்குலி இப்போது தனவந்தன். அவர்களுக்கான கௌரவத்தையும், பணமுடிப்பையும் கொடுக்க முனைந்தான். தனது கைத் தடியால் பணமுடிப்பை வழங்க நீண்ட அவனது கரங்களைக் கொளுவித் தடுத்தார் பிஸ்வந்தர் ரோய். தனது பெட்டகத்தில், இறுதியாக எஞ்சிய நாணயங்களைப் பணமுடிப்பாக்கி வழங்கினார் அவர்.

மஹிம் கங்குலியைத் தடுத்துத் தானே பணமுடிப்பை வழங்கியதை அவர் தனது பெரு வெற்றியாகக் கருதினார். கலைஞர்களைப் போஷிப்பது அவர் குடும்பத்தின் பாரம்பரியம். எத்தனை கீர்த்தி மிக்க பாரம்பரியம் அது. அவரது தந்தை, பாட்டன், முப்பாட்டன் என்று தலை முறை தலை முறையாக வரும் உரிமைப் பாரம்பரியம். மஹிம் கங்குலி இப்பொழுது வந்த பணக்காரன். பிஸ்வந்தர் ரோயின் பாரம்பரியம் என்ன? மஹிம் கங்குலியின் பாரம்பரியம் என்ன? பணம் மட்டும் பாரம்பரியத்தைக் கொண்டு வருமா?

அந்த வெற்றி, மஹிம் கங்குலி மீதான குறியீட்டு வெற்றி, தந்த களிபேருவகையினாலும், நம்பிக்கையாலும், நீண்ட நாட்கள் ஏறாதிருந்த அவரின் பிரியத்திற்குரிய குதிரை மீதேறிக் கம்பீரமாக அவர் சவாரி செய்தார். சில நிமிடங்கள் தான். அவரது குதிரையே அவரைத் தூக்கியெறிந்தது. நிலத்தில் விழுந்தவர் பின்னர் எழவேயில்லை.

1958 ஆம் ஆண்டு வெளிவந்த படம். தொழில் நுட்பச் சாத்தியங்கள் மிகக் குறைவான காலம். என்றாலும் கமரா கவிதையொன்றை எழிலுற எழுதிச் செல்கிறது. 

நினைவுகள் கிளறப் பட்டமையால் அவரிடம் எஞ்சியிருந்தவற்றைப் பார்க்க விரும்பி உப்பரிகையிலிருந்து கீழே வருகிறார், பிஸ்வந்தர் ரோய். குதிரையைப் பார்த்தாகி விட்டது. இப்பொழுது யானையைப் பார்க்க வேண்டும். யானை சற்றுத் தொலைவில் நிற்கிறது. அவர் யானையைப் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில், ஒரு வாகனம் யானைக்கு அருகாக எங்கோ செல்கிறது. புழுதியைக் கிளப்பியபடி. அந்தப் புழுதியில் யானை முற்றாக மறைந்து விட்டது. வாகனம் ‘கங்குலி அன் கோ’ என்ற பெயர் தாங்கியபடி உறுமி நகர்ந்து கொண்டிருக்கிறது.

மூன்றாவதும் இறுதியானதுமான இசை நிகழ்வின் முடிவு. மஹிம் கங்குலியைப் பணமுடிப்புக் கொடுப்பதிலிருந்து அவர் தடுத்து விட்டார். அந்த வெற்றிக் களிப்பில் அவர் மதுக் கிண்ணத்தை ஏந்தியிருக்கிறார். அந்த மதுவில் அவரது ஜல்சாகரின் தொங்கு விளக்கினது பிம்பம் தெரிகிறது. அதில் ஏற்றப் பட்டுள்ள மெழுகு திரிகள் முற்றாய் உருகி அணையும் தறுவாயிலுள்ளன. அவரது வாழ்வைப் போல. அவரது செல்வல் போல. அவரது பெருமை போல. அவர் கிலேசமுறுகிறார்.

பிஸ்வம்பர் ரோயின் அரண்மனையிலேயே படமாக்கல் நிகழ்ந்திருக்கிறது. காட்சிப் புலங்கள் அரண்மனையும், அரண்மனையிலிருந்து நோக்கப் படும் இடங்களும் மட்டும் தான். நடிகர்கள் மிகக் குறைவு. வசனங்கள் சிக்கனம். இசை கதையுடன் கவனமாகப் பின்னப் பட்டிருக்கிறது. மின் பிறப்பாக்கியின் சத்தம். நாயின் குரைப்பு, நடன மாதுவின் காற்சதங்கை ஒலி என எல்லாமே கதையுடன் பின்னிப் பிணைந்தவை.

சத்யஜித் ரே என்ற திரைப் பட மேதைமையின் செதுக்கல் இது.

திரையிடலைப்  போலவே அதற்கு முன்னால் நிகழும் அறிமுகக் குறிப்புக்களும், அதன் முடிவில் 30 நிமிடங்கள் நிகழும் கருத்துப் பரிமாற்றங்களும் மிக முக்கியமானவை. சினிமா எனும் மொழியைப் புரிந்து கொள்ள, இரசனையின் ஆழத்தை அதிகமாக்க இவற்றின் வகிபாகம் காத்திரமானது.

உரையாடல் நேரத்தில் பேசப்பட்ட இரண்டு விடயங்கள் மனதில் பதிந்தன.

ஒன்று: சத்யஜித் ரே இப்படத்தை நிலப் பிரபுத்துவத்தின் வீழ்ச்சியைச் சொல்வதற்காக எடுக்கவில்லை. அந்த சமூக அமைப்புடன் இணைந்திருந்த கலைகளையும், கலைஞர்களையும் ஆதரிக்கும் போக்கு, புரவலர் பாரம்பரியம், அற்றுப் போவதைக் கவலையுடன் பதிவு செய்வதாக அவர் தனது பேட்டியொன்றில் கூறியது. ஒரு சமூகச் சூழ்னிலையை நேர்மையாகவும், கலாபூர்வமாகவும் கலைஞன் வெளிக் கொணரும் போது, அதன் வாசகர்கள் தத்தமது நோக்கு நிலைக்கேற்ப, அந்த வெளிப்பாட்டிலிருந்து பலவற்றைப் புரிந்து கொள்கிறார்கள். கலைஞன் நீ இவ்வாறுதான் இப் படைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோருவதில்லை. அவன் தன்னுடைய நுண்மையான அவதானத்தைக் கலாபூர்வமாக வெளிக் கொணருகிறான். அவ்வளவே.

இரண்டு: கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கூறியதாகப் பகிரப் பட்ட ஒரு அருமையான ஒப்புமை. ஒரு மனைவி விறகு ஈரமாக இருக்கிறது, நெருப்பெரியவில்லை, ஒரே புகை, கண்ணெல்லாம் எரிகிறது என்று புறு புறுத்துக் கொண்டால், ஒரு நல்ல கணவன் கோடாலியைத் தூக்கிக் கொண்டு காய்ந்த விறகு வெட்டப் போவான். மனைவி கணவனை விறகு வெட்டக் கோருவதில்லை. தன்னுடைய யதார்த்தம் குறித்துப் புறு புறுப்பதே அவளது வேலை.

ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் (செப்ரெம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை சனிக்கிழமையாகிவிடும்) இவ்வாறான திரைப்படங்களைப் பார்வையிடலாம். நல்ல கலைத் துவமான படைப்புக்கள் எங்கள் பிரக்ஞையை அகலமாகும்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

பாம்பு தின்ற சிறுமியின் உடன் பிறந்தோர்


அவள் முடி சுருண்டிருந்தது. கண்களில் குழந்தமை தெரிந்தது. மிகவும் யௌவனமாகவிருந்தாள். ஆறு வயதிருக்கலாம். மோனா லிசா போன்றதொரு- பல்வரிசை தெரியாத, உதடுகள் விரியாத - ஆனாலும் சிரிப்பதான முகம். என்றாலும் அவள் புகைப்படமாகவே இருந்தாள். காலம் தன் தழும்புகளைப் பதித்துக் கொண்டிருக்கும் புகைப் படம். சற்றே நடுங்கும் கைகளால் அந்தப் புகைப்படச் சிறுமியை எங்களிடம் தந்தார் கருப்பையா அண்ணன்.

சாந்த புரம். இரணைமடுக் குளத்திற்கும், கனகாம்பிகைக் குளத்திற்கும் இடையே இருக்கும் கிராமம். கிராமத்தின் வரலாறு 1993ம் ஆண்டுதான் தொடங்குகிறது. அதுவரை அது ‘காடு’. ‘பொடியள்’ உருவாக்கிய குடியேற்றம். திருவையாறு, வட்டக்கச்சிப் பகுதிகளில் பண்ணைக் கூலிகளாகவிருந்த, நிலமற்ற மனிதர்களுக்கான குடியேற்றம். இப்பொழுது 1300 குடும்பங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

நாங்கள் கருப்பையா அண்ணருடன் சேர்ந்து பொங்கல் செய்து கொண்டிருந்தோம். உந்துருளி விபத்தில் உயிர் பறிக்கப் பட்ட எமது சகபாடி துரேந்திராவின் நினைவாக, கருப்பையா அண்ணரின் குடும்பத்திற்கு ஒரு கிணற்றைக் கட்டி முடித்திருந்தார்கள் அவனது கிளைச் சகாக்கள். அந்தக் கிணறு தோண்டப் பட்டுப் பல காலமாகியும், கட்டப் படாமையால், அன்றுவரை அந்தக் கிணற்றில் கருப்பையா அண்ணரின் குடும்பம் நீரருந்தியிருக்கவில்லை. இனிமேல் அவர்களால் அந்தக் கிணற்று நீரையே அருந்த முடியும். அன்றுதான் கட்டப் பட்ட கிணற்றைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கவிருந்தோம். அதற்காகவே பொங்கல்.




இப்பொழுது கருப்பையா அண்ணரின் குடும்பத்தில் மூன்று பேர்கள். அண்ணர், அவர் மனைவி, ஒரு மகள். 

பொங்கல் முடியும் தறுவாயில் அண்ணர் சொன்னார் ‘எங்கடை முழுக் குடும்பத்தையும் நீங்கள் எல்லாரும் ஒருக்காப் பாக்க வேணும்”.

‘எங்கடை வீட்டில சாமி அறை இல்லை. குசினிக்குப் பின்னாலை இறக்கியிருக்கிற சாய்ப்பிலை தான் எங்கடை குடும்பம், சாமியள் எல்லாத்தையும் வைச்சிருக்கிறன்’. 

கருப்பையா அண்ணர் அந்தச் சாய்ப்புக்குள் நுழைந்தார்.

அந்தப் புகைப்படச் சிறுமி அவரின் மகள். பாம்பு தின்ற அவரின் கனவு. ‘இந்த இடத்துக்கு முதலில வந்தாக்களில நானும் ஒராள். காடு வெட்டித்தான் வந்தனாங்கள். அப்ப இவவுக்கு ஆறு வயசு. பாம்பு கடிச்சு….”  கருப்பையா அண்ணரின் குரல் தழு தழுத்தது.

தீர்க்கமான பார்வையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் மற்றவன். புகைப்படத்தில் தான். “இவன் ஏ.எல் எடுத்துப் போட்டு இருந்தவன். வயர்லெஸ்ஸடியில அவங்கடை ஒலிபரப்பு நிலையத்தில வேலை செய்தவன். கிபிரடியிலை……”

மூன்றாமவனும் புகைப் படத்திலிருந்தே சிரித்தான். "தமையன் செத்தவுடனை இவனும் படிப்பைக் குழப்பிப் போட்டுப் போட்டான். முள்ளி வாய்க்காலிலை………”

“இளையவளின்ரை படத்தைக் கொண்டு வாங்கோ”. வீட்டுக்குள் இருந்து கொண்டு வரப்பட்ட அல்பத்திலிருந்து ஒரு படத்தை மெதுவாக வெளியே எடுத்தார். புன்னகைத்தபடி இருக்கும் ஒரு இள நங்கையின் புகைப்படம். சேலை உடுத்திருந்தாள். தோட் பட்டை வரை மட்டும் நீண்டிருந்தது கூந்தல். போரோய்வுக் காலத்தில் வீட்டுக்கு வந்திருந்த போது எடுக்கப் பட்ட படமாக இருக்க வேண்டும். “முள்ளி வாய்க்காலிலை மே பதினாலாம் திகதி மட்டும் நிண்டவள். கண்டனாங்கள். அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியாது. எல்லா இடமும் தேடினம். முறைப்பாடு செய்தம். கடிதம் கொடுத்தம். இன்னும் தெரியேல்லை”

அவளுடைய படத்தைச் ‘சாமியறைக்குள்’ வைக்க அண்ணருக்கு மனமில்லை. அல்பத்த்திலையே விட்டு விட்டார். வரக் கூடும் என்று நம்புகிறார். ‘அவள் நல்லாப் படமெடுப்பாள்’ அண்ணர் பெருமூச்செறிந்தார்.




இனி அந்தக் கிணற்றில் தண்ணீர் குடிக்க மூன்று பேர் மட்டுந்தான். கருப்பையா அண்ணர், இழப்புகளின் வலியில் ‘சித்தம் அழகியர்’ ஆகிய அவர் மனைவி, கார்மென்ஸில் வேலை பார்க்கும் ஒரு மகள். அல்பத்தில் இருப்பவள் வரலாம். வரவேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தித்தோம். பாம்பு தின்றவளும், யுத்தம் தின்றவர்களும் அந்தக் கிணற்று நீரை அருந்தாமலேயே போய் விட்டார்கள். 

சாய்ப்புக்குள் இருந்து வெளியே கால் வைத்தோம். நிலம் கொதித்துக் கொண்டிருந்தது. சூரியன் உச்சியில் இருந்தான். கால் வைக்க முடியாத அளவு கொதிப்பு.




சனி, 27 மே, 2017

புனலனர்த்தம்

உன் கையில் இருக்கும் பைபிளை என்னால் நிராகரிக்க முடியாது. அது காட்டும் அற விழுமியங்கள் என் ஆன்மாவிற்கும் அண்மித்தவைதான்.

ஆனால், உன் மறு கையில் நீ துப்பாக்கியை வைத்திருக்கிறாய்* என்பதையும் நான் மனதிருத்துகிறேன். நீ துப்பாக்கியை வைத்திருக்கிறாய் என்பதற்காக நான் பைபிளை நிராகரிக்கப் போவதில்லை. நீ துப்பாக்கி வைத்திருக்கிறாய் என்பதற்காக நான் பைபிளை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. அது என் ஆன்மாவிற்கு அண்மித்தது என்பதனால் மட்டுமே நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்.

அதை நான் ஏற்றுக் கொள்ளும் போதும், நீ மறு கையில் துப்பாக்கியை வைத்திருக்கிறாய் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதனை நான் உதாசீனப் படுத்த முடியாது. அதை நான் காணவில்லை என்பதாகப் பாவனை செய்யவும் முடியாது.

நாங்கள் எல்லோரும் எக்காளமிடுபவர்களும் இல்லை. 'நீளப் பகை நினைந்து’ வன்மமுறுபவர்களும் இல்லை. அநுராதபுரத்தில், கொழும்பில், காத்தான் குடியில், கெப்பிட்டிகொலாவையில் குருதி தோய்ந்த உடலங்களைக் கண்டு வெதும்பியவர்கள் தான் எம்மில் அதிகம். 

குமுதினிக்கும், கிளாலிக்கும், கொக்கட்டிச் சோலைக்கும், மக் கெய்சர் மைதானத்திற்கும், நவாலிக்கும், செஞ்சோலைக்கும் இன்னும் நீண்டு செல்லும் பட்டியலுக்கும் வெதும்பியவர்களை, என் கைவிரலளவுக்கு மேல் நான் கண்டதில்லை.

புனலனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட மனிதங்களை எண்ணி எம்மால் எக்காளமிட முடியாது. பாற் சோற்றையும், வெடியின் ஓசையினையும் பின் தள்ளி வைத்து விட்டு, நாங்கள் கலங்குகிறோம்.


என்றாலும், பாற் சோற்றையும், வெடியொலியையும் நிகழவே இல்லை என பாவனை செய்யவும் எங்களால் முடியாது.

‘இராசதந்திரப் பகை மறப்பு’, ‘இராசதந்திர எக்காளமின்மை’ என்பதற்கப்பால், பகையற்ற நட்பும், இழப்பின் போதான ஒத்துணர்வும் புற நடையற்று எல்லா மனங்களிலும் உருவாக வேண்டுமெனின், உன் மறு கையில் இருக்கும் துப்பாக்கியைத் தூர எறிந்து விடு. பாற் சோற்றையும், வெடிக் கட்டையையும் தான்.


(* ஒரு கையில் பைபிளுடனும், மறு கையில் வாளுடனும் போர்த்துக்கீசியர்கள் வந்தார்கள் எனச் சொல்வார்கள்) 

திங்கள், 24 ஏப்ரல், 2017

நிமிர்வு சஞ்சிகை ஆசிரியர் செல்வநாயகம் கிரிசாந் அவர்களுடனான நேர்காணல்


நிமிர்வு சஞ்சிகை ஆசிரியர் செல்வநாயகம் கிரிசாந் அவர்களுடனான நேர்காணல்

தமிழ் ஊடகத் திரட்டு (Tamil Media Collective) என்ற அமைப்பினரால் வெளியிடப் பட்டுவரும்நிமிர்வுஎனும் மாத சஞ்சிகையின்  மூன்றாவது இதழ் வெளிவந்துள்ளது.

அதன் ஆசிரியர் செ. கிரிசாந் அவர்களுடனான சுருக்கமான நேர்காணல்.





































சனி, 22 ஏப்ரல், 2017

கல்வி: மாற்றுச் சிந்தனைகள்

ஆயிரம் பூக்கள் மலரட்டும்.





சுகதா மித்ராவின் இந்தப் பரிசோதனை முயற்சி தொடர்கிறது.


ஆப்பிழுத்தல்

நாங்கள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் போக வேண்டிய பாதையில், ஒரு மணற்பாங்கான ஒழுங்கையைக் கடந்து செல்ல வேண்டும். நாங்களும் வாகனத்தை மணல் ஒழுங்கைக்குள் செலுத்துகிறோம். எல்லாம் நல்ல படியாகவே நடந்து கொண்டிருக்கின்றது

ஒழுங்கையின் மணற்தன்மை மிகவும் அதிகமான இடத்திற்கு வந்து விடுகிறோம். வாகனத்தை முன் நோக்கிச் செலுத்த முற்படும் போது சக்கரங்கள் மணலில் மாட்டிக் கொள்கின்றன. வாகனத்தை முன்னோக்கிச் செலுத்த முடியவில்லை. சக்கரங்கள் கணிசமான அளவு புதைந்து விட்டன. இப்பொழுது என்ன செய்வது?


 பொதுப் புத்தியின் படி செயற்பட்டால், மணலிலிருந்து ஒருவாறு வெளியே வரும் நோக்கில், நாங்கள் வாகனத்தின் விரைவாக்கியை மேலும் மேலும் ஊன்றி அழுத்துவோம். அழுத்த, அழுத்த வாகனத்தின் சக்கரங்கள் மேலும் மேலும் மண்ணுட் புதையும். நாங்கள் இதுவரை செய்தவற்றையே மீண்டும், மீண்டும் செய்தால், சக்கரங்கள் முழுமையாக மணலினுள் மாட்டிக் கொள்ளும்.

புதை மணலில் சிக்கும் பொழுது, சதுப்பு நிலத்தில் மாட்டிக் கொள்ளும் பொழுது, நீர்ச் சுழியில் அகப்படும் பொழுது, தப்பும் நோக்கில் நாம் செய்யும் பிரயத்தனங்கள், எம்மைத் தப்ப வைப்பதற்குப் பதிலாக, தப்பவே முடியாத நிலைமைக்கு இட்டுச் செல்லும்

இவ்வாறான சந்தர்ப்பங்களில், ‘மரபார்ந்த ஞானம்(Conventional Wisdom), பொருந்தி வராது. அதன்படி செயற்பட்டால், நாம் வழங்கும் தீர்வே பிரச்சனையை மென் மேலும் தீவிரமாக்கும் நிலைக்கு நாம் சென்று விடுவோம். ஒரு பிரச்சனையை, முழுமையாகவும், முறைமை சார்ந்தும் அணுகுபவர்கள் (Wholistic abd Systems Thinkers) இவ்வாறான் தோற்றப் பாட்டை ‘Fixes that Fail’ Archytype என்று வகைப் படுத்துவார்கள்

இப்படியான சந்தர்ப்பங்களில், Counterintuitive ஆன, உள்ளுணர்வு முரண் வாய்ந்த, அணுகு முறையே தேவை.
________________________________________________________________________________

எமது கல்வி நிலை தரம் தாழ்ந்து வருகிறது. பரீட்சை அடைவு மட்டம் குறைவடைகிறது. மாணவர்களின் கற்றற் திறன் குறைவடைகிறது. என்ன செய்ய வேண்டும்?

மேலதிக வகுப்புகளை வைக்க வேண்டும். மேலும் மேலும் கடுமையாகப் படிக்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று தனியார் வகுப்புகளுக்குப் போக வேண்டும். முன்னோடிப் பரீட்சைகள் பலவற்றை வைக்க வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், மணலில் சக்கரங்கள் புதைந்தால், வேக முடுக்கியை இன்னும் இன்னும் அழுத்த வேண்டும்!


_________________________________________________________________________________

ஆங்கிலத்தில் அருமையாகச் சொல்வார்கள் ‘If you find yourself in a hole, stop digging’. 


நீங்கள் கிடங்கொன்றில் மாட்டுப் பட்டால்மேலும் கிண்டுவதை நிறுத்துங்கள்!

புதன், 19 ஏப்ரல், 2017

வேண்டும் ஒரு புதிய சொல்

ஒரு புதிய சமூகத் தோற்றப்பாடு (New Social Phenomenon) உருவாகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியே அதன் மூலகாரணம். அது காலவரை சமூகத்தில் அந்தத் தோற்றப்பாடு இருந்ததில்லை. எனவே, அதனைக் குறிக்க மொழியில் வார்த்தைகள் கிடையாது. 
வேண்டும் ஒரு புதிய சொல். அவ்வாறானதொரு புதிய சொல் எவ்வாறு உருவாக்கப் படுகிறது?
ஒரு மொழிச் சமூகமாக எங்களுக்கு இந்தப்பிரச்சனை நிறையவே உள்ளது. 

சிந்திக்கத் தூண்டிய காணொளி இது. இதனை எனக்குத் தெரியப் படுத்திய Singaravelu Kumaravel அவர்களுக்கு நன்றி.


ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

ஹைக்கூக்களாலான காவியங்கள்

காவியங்கள் மிக நீண்டவை. கனதியானவை. அவற்றைப் படிப்பதற்கு நீண்ட நேரம், பொறுமை, குலையாத கருத்தூன்றல் என்பவை அவசியம்.

படிப்பதற்கே இவை தேவையானால், படைப்பதற்கு?



ஹைக்கூக்கள் குறுகியவை. என்றாலும் கருத்துச் செறிவு மிக்கவை. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் ஆற்றல் மிகுந்தவை. தமிழ் மரபின் ஹைக்கூக்களென வள்ளுவர் குறள்களைக் கூறலாம் எனத் தோன்றுகிறது. 



ஹைக்கூக்களாலான காவியங்கள் சாத்தியமானவையா? ஒவ்வொரு ஹைக்கூவும் தன்னளவில் நிறைவும், முழுமையும் கொண்ட செய்திகளைச் சொல்ல, அவற்றின் கூட்டு மிகப் பெரும் முழுமையாய், பெரும் கருத்தியலைச் சொல்ல வல்ல காவியமாய் ஆக முடியுமா?

ஜெயமோகனின் வார்த்தைகளில், 'உதிரிக் கண்டடைதல்களின் குவியல்களால்', 'பெரும் கருத்தியற் கட்டமைப்புகளை' உருவாக்க முடியுமா?

நான் உங்கள் காலத்தின் 'சம காலப் பயணி'. உங்களுடன் இப் பிரபஞ்சத்தில் சம நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவன். இந்தப் பயணம் என்னுள்ளே தோற்றுவிக்கும் எண்ணங்கள், சிந்தனைகள், உணர்வுகள் ஏராளம். இவற்றை நான் என் சக பயணிகளான உங்களுடன் பகிர விரும்புகிறேன். 



என்றாலும், நீண்ட பகிர்வுகளைச் செய்ய எனக்கு நேரமும் இல்லை. அவற்றைப் படிக்க ஏதுவான 'கருத்தூன்று எல்லை' (Attention Span) உங்களுக்கும் இல்லை.

எனவே தான் 'ஹைக்கூக்களாலான காவியங்கள்' பற்றிய சிந்தனை. எனது சிறு பரிசோதனை.

சனி, 8 ஏப்ரல், 2017

மெய்ப்பொருள் காண்பதறிவு

அப்பிள் பழம் என்றால் எனக்குப் பிடிக்கும். லண்டனிலை இருக்கிற என் நண்பனுக்கோ வாழைப் பழம் என்றால் உயிர். என் வீட்டின் கொல்லையிலே வாழை தானாய் வளரும். அவன் வீட்டின் கொல்லையிலே அப்பிள் தானாய் வளரும். நாங்கள் மாற்றி யோசித்தோம். என் வீட்டில் அப்பிளும், அவன் வீட்டில் வாழையும் நடுவதற்கு. அவரவருக்கு அவை தானே பிடிக்கிறது.

நல்லாய்த் தண்ணி விட வேணும், கொஞ்சம் பசளையும் போடோணும்.’ இது தான் இரண்டு பேருடையசிபார்சுசெய்யப் பட்ட வளர்ப்பு முறை.


 என் வீட்டுக் கொல்லையில் அப்பிள் மரம் நட்டாயிற்று. அவன் வீட்டுக் கொல்லையில் வாழை மரம் நட்டாயிற்று

நல்லாய்த் தண்ணியும், கொஞ்சம் பசளையும் போட்டும் அப்பிள் மரத்தை நானும், வாழை மரத்தை அவனும் இழக்க வேண்டியதாயிற்று.

நீங்கள் சிரிப்பீர்கள். ‘மறை கழண்டதுகள்’. விசர் முத்திப் போச்சு. இந்த வெக்கையுக்கை அப்பிள் வருமே? அந்தக் குளிருக்கை வாழை வருமே? எண்டு.

ஓம். நீங்கள் நினைக்கிறது சரி. வெறுமனே தண்ணியும் பசளையும் காணாது தானே? தண்ணியும் பசளையும் முக்கியம் தானெண்டாலும், சரியான சூழலும் தேவையெல்லோ? சூடு, குளிர், வெளிச்சம், இருட்டு, ஈரப்பதன், உலர் நிலை, எல்லாம் அந்தந்தப் பயிர்களுக்கு ஏற்ற மாதிரியிருந்தால் தான் அவை வளரும்.

இவை எல்லாவற்றினதும்சிறப்புக் கலவைஒவ்வொரு சூழலுக்கும் வேறுபடும். பல வேளைகளில் அத்தகைய வேறுபாடுகள் மிகத் தீவிரமாகவிருக்கும். ஒரு பாலை வனத்தில் நிலவும்சிறப்புக் கலவை’, குளிர் வலயத்தின்சிறப்புக் கலவையைவிட முற்றிலும் வேறுபட்டது. குளிர் வலயத்தின்சிறப்புக் கலவைஅயன வலயத்தின்சிறப்புக் கலவையைவிட வேறுபடும்.



எல்லாத் தாவரங்களுக்கும் தண்ணீரும், பசளையும் முக்கியமானவை தான். ஆனால் அவை மட்டும் போதுமானவையல்ல. சூழல் மிக முக்கியமானது. இதனை ஆங்கிலத்தில் ‘Ecosystem’ என்பார்கள்

எவ்வளவு படிப்பிச்சாலும் இவங்களுக்கு ஆங்கிலம் வருகுதில்லை

எத்தினை தரம் படிப்பிச்சாலும் கணிதம் ஏறுதில்லை

வட மாகாணம் தான் கல்வியிலை கடைசி. இந்த முறை . எல் றிசல்ற் படு மோசம்

எப்பிடி அட்வைஸ் பண்ணினாலும் டெக்னிகல் கோர்ஸ் ஒண்டுக்கும் போறாங்களில்லை

எங்கடை சனம் எப்பவும் யாவாரம் தான் செய்யும். புதுசா ஒரு தொழிலும் செய்யத் தெரியாது

எங்கடை அரசாங்க உத்தியோகத்தர்மார் ஒண்டும் செய்யிறாங்களில்லை

சும்மா அதிகாரம் வேணும், அதிகாரம் வேணுமெண்டு சிங்களவனோடை சண்டை பிடிக்கிறாங்கள், குடுத்த அதிகாரத்தை பாவிக்கத் தெரியேல்லை

கல்வி வீழ்ச்சிக்கு பேஸ் புக் தான் காரணம்

வாத்திமாருக்குப் படிப்பிக்கத் தெரியேல்லை

எங்களை நாங்களே குற்றம் சாட்டி, எங்களை நாங்களே மட்டம் தட்டி, ‘இது இருந்தால் இது நடக்கும்’ ‘இது இல்லாத படியால் தான் இது நடக்கேல்லைஎன்று ஒவ்வொன்றுக்கும்ஒரு பெரும் காரணத்தைநாங்கள் தேடுகிறோம்.

தண்ணியும் பசளையும் இருந்தால், இஞ்சை அப்பிளும் அங்கை வாழையும் வரும் எண்டு எதிர்பார்க்கிறது மாதிரி.

பிரச்சனைஒரு பெரும் காரணத்தால்மட்டும் ஏற்படும் என்று அனுமானிக்கிறோம். அதை அகற்றினால் தீர்வு வரும் என்றும் நம்புகிறோம்.



கல்வி வளர்ச்சிக்குஎக்ஸ்றா கிளாஸ்’, புதிதாய்த் தொழில் தொடங்கஎன்றப்றூனர்சிப் றெயினிங்’, டெக்னிகல் கோர்ஸுக்குப் போகச் செய்யகரியர் கைடன்ஸ்’, உத்தியோகத்தர்கள் ஒழுங்காக வேலை செய்யஆளுநர் சந்திரசிறி’, அதிகாரத்தைப் பிரயோகிக்கநியதிச் சட்டங்களை உருவாக்கல்’, மாணவர்களை ஒழுங்காக்கபேஸ் புக்கைத் தடை செய்தல்’, வாத்திமாரைப் படிப்பிக்கச் செய்யதண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றம்என எங்களிடம்ஒவ்வொரு பெரும் காரணத்திற்கும்’ ‘ஒவ்வொரு பெரும் தீர்வும்உள்ளது.

மறை கழண்டதுகள்’. விசர் முத்திப் போச்சு. இந்த வெக்கையுக்கை அப்பிள் வருமே? அந்தக் குளிருக்கை வாழை வருமே? என்று சொன்ன ஞானம், இதுகளைச் சொல்லும் போது எங்களிடம் இருப்பதில்லை.

பிரச்சனையும் தீர்வும்தண்ணியிலும் பசளையிலும்மட்டுமில்லையென்றால், ‘Ecosystem’ எப்பிடியிருக்குது என்பதை நோண்டத் தொடங்க வேணும். பொருத்தமான ‘Ecosystem’ இல்லையெண்டால் அதை முதலில் உருவாக்க வேணும். கஸ்டம் தான். ஆனா வேறை வழியில்லை.