சனி, 23 ஏப்ரல், 2022

பையவே சென்று பாண்டியற்கு ஆகவே?

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!
 
இத் தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும்,
ஆதலால் இத் தீ பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக 
 
-திருக்கடைக் காப்பு, மூன்றாம் பதிகம்- 



 
இன்று இலங்கை ஒரு மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்பினை எதிர்கொண்டிருக்கிறது. இந்த அரசியல் கொந்தளிப்பின் உடனடிக் காரணங்களாகப் பொருளாதாரக் காரணங்களே அடையாளப்படுத்தப்படுகின்றன. சமையல் எரிவாயு, பெற்றோல், மண்ணெண்ணை, டீசல் உட்பட்ட பெற்றோலியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்கள், வாகனங்கள், மற்றும் இன்னோரன்ன நுகர் பொருட்கள் என்பவற்றிற்கான பற்றாக்குறையும், அதனால் இவற்றைப் பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலையும், இவற்றிற்கான விலைகளில் ஏற்பட்ட அதீத அதிகரிப்பும், மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக மோசமாகப் பாதித்து உள்ளன. இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நியச் செலவாணியைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை அரசு பலத்த சிரமங்களை எதிர்கொள்கிறது.

 

இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், அந்நியச் செலாவணியை இலங்கைக்கு ஈட்டித்தரும் பிரதான மூலங்களாக இருந்தவை விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஏற்றுமதி பொருட்களும் சில தொழிற்துறைகளும் மட்டுமே. ஆரம்பத்தில், பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியூடாக இலங்கைக்குப் பெருமளவிலான அந்நியச் செலாவணி கிடைத்து வந்தது. பின்னர் பெருந்தோட்டத் துறையின் முக்கியத்துவம் குறைந்து, தைத்த ஆடைகள் ஏற்றுமதி உட்பட்ட ஏனைய சிறிய அளவிலான பல்வேறு பொருட்களின் ஏற்றுமதியூடாகக் குறிப்பிடத்தக்க அளவு அந்நியச் செலாவணி கிடைக்கப் பெற்று வந்தது. இவற்றிற்கு மேலதிகமாக ஏற்றுமதி அல்லாத துறைகளின் மூலமாகவும் அந்நியச் செலாவணி ஈட்டப் பட்டது. உதாரணமாக சுற்றுலாத்துறை, வெளிநாடுகளில் இலங்கையர்கள் பணிபுரிந்து உள்நாட்டை நோக்கி அனுப்பும் காசு (Remittance Money) என்பவற்றைக் குறிப்பிடலாம்.

 

இதே வேளை, இலங்கை தனக்குத் தேவையான பல்வேறு பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது. அந்த இறக்குமதிப் பட்டியல் மிக நீண்டது. உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், கல்வித்துறைக்குத் தேவைப்படும் பொருட்கள், போக்குவரத்துத் துறைக்குத் தேவைப்படும் பொருட்கள், உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான பொருட்கள், பல்வேறு நுகர்வுப் பொருட்கள், அனைத்துத் துறைகளுக்கும், முக்கியமாகக் கைத்தொழில் துறைக்கு தேவையான மூலதனப் பொருட்கள், இவற்றுக்கெல்லாம் தேவையான எரிபொருட்கள் என இப் பட்டியல் நீளும்.

 

வழமையாகவே ஏற்றுமதியால் இலங்கைக்குக் கிடைக்கும் அந்நிய செலாவணியை விட இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணி அதிகமாகவிருக்கும் நிலையில் தான் இலங்கையின் பொருளதாரம் இருந்து வந்துள்ளது. இந்தப் பற்றாக்குறையை, அதாவது மேலதிகமாக இலங்கைக்குத் தேவைப்படும் அந்நிய செலாவணியை, இந்த நாடு, ஒரு காலத்திலே வெளிநாட்டு உதவிகளின் ஊடாகவும், பின்னர் வெளிநாட்டுக் கடன்களின் ஊடாகவும் பெற்று வந்துள்ளது. இப்பொழுது இந்த வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. கடன்களை மீளச் செலுத்தும் போது அதற்குப் பாரிய அளவிலான அந்நியச் செலவாணி தேவைப்படுவதால், காலம் காலமாக இந்த நாடு இறக்குமதி செய்து வந்த பொருட்களைத் தொடர்ந்து இறக்குமதி செய்வதற்கு அதனிடம் அந்நியச் செலாவணி இல்லை.

 

பிரச்சனைகளின் அடி வேர்கள்

 

இன்றைய நெருக்கடிகளின் காரணங்களை ஆழமாக நோக்கும் போது, அந்நியச் செலவாணிப் பிரச்சனையினுடைய தோற்றுவாய்களாக, பிரதானமாக மூன்று விடயங்களைக் கோடி காட்டலாம். முதலாவது பண்பாட்டுக் காரணங்கள், இரண்டாவது பொருளாதாரக் காரணங்கள், மூன்றாவது அரசியற் கலாசாரக் காரணங்கள்.

 

பண்பாட்டுக் காரணங்கள்

 

பண்பாட்டு அடிப்படையில் நோக்கினால், இலங்கை மக்கள் ஒரு மிகை நுகர்வு மன நிலைக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்டது பிரதான அம்சமாக இருக்கும். மேற்கத்தைய ஊடகங்களினதும், மேற்கத்தைய பண்பாட்டுச் சாதனங்களினதும் செல்வாக்கிற்கு உட்பட்டு பெருமளவிலான இலங்கையர்கள் வரையறையற்ற நுகர்வு சாத்தியம் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். எல்லாவற்றையும் நுகர வேண்டும் என்கின்ற அளவுக்கு மீறிய ஆசைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். இவற்றின் விளைவாக இலங்கை மக்கள் மிகை நுகர் மனப்பாங்கிலேயே இருந்து வருகின்றனர். இதனையொட்டி, மிகை நுகர்வுக்குத் தீனி போடுவதற்கு ஏற்றவாறு தமது தொழில் முயற்சிகளைக் கட்டமைத்து, தமக்கான இலாபங்களை ஏற்படுத்த இலங்கையினுடைய வர்த்தகர்களும் தொழில் முனைவோரும் முயன்றனர். இதன் காரணமாக, உற்பத்தி சார்ந்த துறைகளில் அதிக கவனம் செலுத்தாமல், வாங்கி விற்கும் அல்லது வர்த்தகம் செய்து இலாபத்தை சுலபமாக ஈட்டிக் கொள்ளும் அடிப்படையிலும், உடல் நோகாது உழைக்கக் கூடிய சேவைத் துறை சார்ந்துமே இலங்கையரது தொழில் முயற்சிகளும் அமைந்திருந்தன. ஆகவே இவை இரண்டும், மிகை நுகர் பண்பாடும் அந்த மிகை நுகர்வுக்குத் தீனி போடுவதன் ஊடாக இலாபம் சம்பாதிக்க அவாவிய வர்த்தகச் செயற்பாடுகளும், இலங்கையின் பொருளாதாரம் இவ்வாறு கட்டமைக்கப்படுவதற்குக் காரணங்களாக அமைந்தன. இதனால், ஏற்றுமதியினூடாகக் கிடைக்கும் அந்நிய செலவாணியை விடவும் இறக்குமதிக்குத் தேவையான அந்நிய செலவாணி மிகவும் அதிகமாகக் காணப்படும் பொருளாதரக் கட்டமைப்பை இலங்கை அடைந்தது.

பொருளாதாரக் காரணங்கள்

 

பொருளாதாரக் அடிப்படையில் நோக்கினால், இலங்கைக்குக் கிடைத்திருக்கக் கூடிய கடன்களை அந்நிய செலவாணியை ஈட்டித் தரக்கூடிய தொழில் துறைகளில் அல்லது இறக்குமதியைப் பிரதியீடு செய்து உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய தொழில் துறைகளில் முதலிடாமை துலக்கமாகத் தெரியும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவான துறைகளில் முதலிடுவதற்குப் பதிலாக, கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைக்குக் கிடைத்த கடன்கள், யுத்தத்திற்காகவே பிரதானமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இராணுவக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, ஒரு உள்நாட்டு யுத்தத்தைக் கொண்டு செல்வதற்கு, அதற்குத் தேவையான ஆயுதங்களை வாங்குவதற்கு, யுத்தத்தை நியாயப் படுத்தும் கருத்தியல்/பிரச்சார நடவடிக்கைகளுக்கு என யுத்தம் சார்ந்து மிகப் பாரிய தொகை செலவு செய்யப் பட்டிருக்கிறது. ஆகவே இவ்வாறு செலவு செய்யப்பட்ட தொகை காரணமாக எங்களுடைய பொருளாதாரத்திலே எந்த விதமான அபிவிருத்தியும் ஏற்படவில்லை.

 

இவற்றிற்கு மேலதிகமாக, இலங்கையின் அரசியல்வாதிகள், தமக்காக வாக்குகளை அறுவடை செய்யக் கூடிய முறைகளிலேயே இந்த வெளிநாட்டுக் கடன்கள் ஊடாக பெறப்பட்ட நிதியைச் செலவு செய்திருந்ததும் கவனத்திற் கொள்ளப்படத் தக்கது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள், வேலைவாய்ப்பு இன்மையால் வரக்கூடிய சமூகக் குழப்பங்களைச் சமாளிப்பதற்காகவும், வாக்காளர்களைக் கவர்வதற்காகவும், பாரிய அளவில் அரச நிர்வாகத் துறையை வளர்த்து அதற்குள் சனத்தொகையில் கணிசமானோரை உள்ளீர்த்துக் கொண்டன. இதனை விட, வாக்குக் கவர்ச்சிக்காகப் பல்வேறு விடயங்களுக்காக மானியங்கள் வழங்கப்பட்டன. பொருளாதார யதார்த்தங்களை மறைத்து, மக்களின் மனங்களைக் கவர்ந்து, அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதற்கு ஏதுவாக இவ்வாறான விடயங்களைத் தூரநோக்கற்று ஆட்சியாளர்கள் வழங்கி கொண்டு `வந்திருப்பது இந்நாட்டின் வழமையாகி விட்டது. இவற்றை விட மேலதிகமாக, அரச நிதியைக் கையாளும் போது, ஊழல், லஞ்சம் போன்றவை நிறுவனமயப்படுத்தப்பட்ட ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில், அரச நிதி, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கோ, அடிப்படையான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த வல்ல நடவடிக்கைகளுக்கோ பயன்படுத்தப் படாமல், தனிப்பட்டவர்களின் சொத்துக்களை வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.

 

சுருங்கக் கூறின், அறிவு பூர்வமாக, பொருளாதாரத்திற்குப் பங்களிக்கக் கூடிய வகையில் முதலிடுவதற்கு பதிலாக, மிக முட்டாள்த்தனமாக இவ்வெளிநாட்டுக் கடன்களைப் பயன்படுத்தியது இன்றைய நெருக்கடிக்கான இன்னுமொரு மூலகாரணமாக அமைந்திருக்கிறது.

 

அரசியற் கலாச்சாரக் காரணங்கள்

 

இறுதியாக, இவற்றிலிருந்து உருவான அரசியற் கலாச்சாரமும், அரச இயந்திரத்தின் குணாம்சங்களும், இந்நெருக்கடிகள் உருவாகி, வளர்ந்து, முற்றி வெடிப்பதற்கு ஏதுவான சூழமைவை வழங்கி வந்துள்ளன. 'சுதந்திர' இலங்கையின் அரசியலமைப்புகளும் பின் வந்த அரசியலமைப்புத் திருத்தங்களும் சிங்கள பௌத்தர்களல்லாத தேசத்தவர்களையும், சமூகங்களையும் ஒடுக்குவதைப் பிரதான நோக்கங்களிலொன்றாகக் கொண்டே வடிவமைக்கப் பட்டிருந்தன. ஒடுக்குமுறைகளை விரைவாகவும், திறனாகவும் செய்வதற்கு ஏதுவாக, மையப் படுத்தப் பட்ட அதிகாரக் குவிப்பு அரசமைப்பில் உள்ளடக்கப் பட்டது. அரசியலமைப்பின் அடிப்படையிலே அரசும் சிங்கள பௌத்த மேலாதிக்கக் குணாம்சத்தைப் பெற்றுக் கொண்டது. அரசின் பொருளாதரக் கொள்கைகளும், பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் கொள்கைகளும், நடைமுறைத் தீர்மானங்களும், இவ்வரசியலமைப்புகளின் பின் புலத்திலும் பலத்திலுமே மேற்கொள்ளப் பட்டன.
 
மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப் பட்டமை, தனிச் சிங்களச் சட்டம், தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொள்ளப் பட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள், தரப் படுத்தல், குறிப்பிட்ட காலங்களுக்கொருமுறை நிகழ்ந்த இனக் கலவரங்கள்,தமிழர்களுக்கெதிராகப் மிகப் பெரும் பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் என எல்லாவகையான அரசியல் நோக்கங்களைக் கொண்ட நடவடிக்கைகளுக்கும் பொருளாதார விளைவுகளும் இருந்தன.

 

நீடித்து நிலைத்து நிற்க முடியாத பொருளாதார முறைமை குறித்த விடயங்களை மூடி மறைப்பதற்காக அல்லது உரு மறைப்புச் செய்வதற்காக ஆட்சியாளர்கள், இனத்துவ அரசியலை, சரியாகச் சொல்லப் போனால், இனத் துவேச அரசியலைப் பயன்படுத்தினர். மக்களுக்கு உண்மையிலேயே தங்களது பொருளாதாரத்திற்கு என்ன நிகழ்கின்றது என்ற விடயம் தெரியவராமல், அது பேசு பொருளாக இல்லாது இருப்பதற்குத் தேவையான கவனக் கலைப்பானாக இனத்துவேச அரசியல் பயன் படுத்தப் பட்டது. இன்னொரு இனம் சார்ந்த பயத்தை உருவாக்கி அந்த பயத்தை கையாள்வதின் ஊடாக அரசியல் செய்யும் ஒரு இனத்துவ மையப்பட்ட ஒரு அரசியல் கலாச்சாரம், அதற்கு ஏதுவான அரசு என்பவை உருவாக்கப் பட்டன. அரசும் ஆட்சியாளர்களும் ஒரு குறிப்பிட்ட இனத்தினதும், மதத்தினதும் காவலாகவும், காவலர்களாகவும் உருவகிக்கப் படுகின்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது. அரசில் வந்தமர்கின்ற ஆட்சியாளர்கள் மிகப் புனிதமானவர்களாக அல்லது கதாநாயகர்களாக உருவகிக்கப்பட்டு, அவர்கள் செய்கின்ற எந்த நடவடிக்கைகளும் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட முடியாத உளவியலும், அரசியற் கலாச்சாரம் உருவாக்கப்பட்டன. சதாரண மக்கள் இந்த மாயைகளின் பின்னால் இழுபட்டுக் கொண்டு அடிப்படையிலே அமந்துள்ள பொருளாதார முரண்களையும், முறைகேடுகளையும் முற்று முழுதாகக் கவனிக்கத் தவறியது, இந்த நிலை தொடர்ந்து நிலை நிறுத்தப் பட்டு, முன்னெடுத்துச் செல்லப்படுவதற்குப் பிரதான கருத்தியற் பின்புலத்தை வழங்கியது.

 

இன்றைய நிலையும் போராட்டங்களும்: சில யதார்த்தங்கள்

சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்தும் உத்தி

இப்பொழுது ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது போல அல்லது ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது போல அரசும், ஆட்சியாளர்களும் தாங்கள் செய்தவற்றின் பலன்களை அனுபவிக்கும் காலம் வந்துள்ளது. பொருளாதாரப் பிரச்சனை காரணமாக எழுந்த அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் - எல்லாவற்றிற்கும் பற்றாக்குறை, பணவீக்கம், விலையுயர்வு எல்லாவற்றுக்கும் வரிசையில் நின்று பெற வேண்டிய சிரமம், இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து - மக்களைக் கோபம் கொள்ள வைத்திருக்கின்றன. அந்தக் கோபத்தை மக்கள் ஆட்சியாளர்கள் மீது காட்டுகின்றார்கள். அந்தக் கோபம் இந்த ஆட்சியாளர்களை, இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிபுரிந்த முறையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. அவர்கள் இந்த ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோஷம் எழுப்புகின்றார்கள். ஒரு மாற்றம் வர வேண்டும் என்று கோஷம் எழுப்புகின்றார்கள்.

இந்த கோபத்தின் பின்னால் சில புரிதல்களும் இருக்கின்றன. இனத்துவேச அரசியல் அல்லது பிரித்தாளும் அரசியல் காரணமாகவே தாங்கள் இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டதாக ஒருசிலர் உணர்கின்றார்கள். இந்தப் புரிதல் மெதுவாக சிலரிடம் உருவாகியிருக்கின்றது. ஆனால் இது சிலரிடம் மட்டும் தான் உருவாகியிருக்கின்றது என்பதையும் நாங்கள் கவனிக்க வேண்டும். சுட்டிப்பாகக் கூறினால், இந்தக் கோபமும், போராட்டங்களும், அரசாங்கத்திற்கு மட்டுமே எதிரானவை. அரசுக்கு எதிரானவை அல்ல. ஆனால், அரசும் அதன் கட்டமைப்பும், குணாம்சங்களுமே இன்றைய நெருக்கடிகளின் தோற்றுவாய்கள். எனினும் அது குறித்த புரிதல் வீதியில் இறங்கியிருக்கும் மக்களிடம் இல்லை.

 

இந்த மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. இன்றைய ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டும், ஒரு மாற்றம் உருவாக வேண்டும், அந்த மாற்றத்தின் ஊடாக உடனடியாகத் தங்களது வாழ்வியற் பிரச்சனைகளான பணவீக்கம், விலையுயர்வு, பொருட் பற்றாக்குறை, நீண்ட வரிசைகளில் நிற்றல் போன்ற விடயங்கள் உடனடியாக அற்றுப் போக வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புகளே இவர்களிடம் முன்னிற்கின்றன.

 

ஆனால் யதார்த்தம் என்னவெனில் இந்த எதிர்பார்ப்புகள் உடனடியாக பூர்த்தி செய்யப்பட முடியாதவை. யார் பதவிக்கு வந்தாலும், யார் கையில் ஆட்சி போனாலும், சர்வதேச நிறுவனங்களிடமிருந்தோ அல்லது நாடுகளிடமிருந்தோ கடன்களைப் பெற்றாலும் இந்த நிலமைகளை உடனடியாகவும், நிரந்தரமாகவும் மாற்ற முடியாது. அவ்வாறு புதிதாகப் பெறும் கடன் உதவிகளை, இந்த உடனடிப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தினால், அந்த கடனுதவிகளின் வழி கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி முடிந்த பின்னர், மீண்டும் இதே நிலமைக்கு தான் நாடு செல்ல வேண்டி வரும். ஆகவே பெறுகின்ற கடனுதவிகளை நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டமைப்பதற்கு - அதாவது ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தி மேலதிக அந்நிய செலவாணியை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பதுடன், இறக்குமதியைக் குறைத்து, இறக்குமதிக்குப் பிரதியீடாக பல பொருட்களை உள்ளுரிலேயே உற்பத்தி செய்வதனூடாக இறக்குமதியின் அளவினைக் குறைத்து, வெளிச் செல்லும் அந்நிய செலவாணியை குறைக்கின்ற வகையில் - இந்தக் கடன்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் நிலவுகிறது. இன்னுமொரு வகையிற் கூறினால், புதிதாகப் பெறக்கூடிய கடன்களை கொண்டு அடிப்படையான பொருளாதார மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு கால அவகாசத்தை, மூச்சு விடும் இடை வெளியை மட்டுமே எந்தக் கடனுதவிகளும் தரும்.

 

சர்வதேச நாணய நிதியமோ வேறு எந்த நாடோ இலங்கைக்கு வழங்க முன்வரும் கடன்களை, இவ்வாறு தான் பயன்படுத்த வேண்டுமே தவிர உடனடியாக நுகர்வுக்கு அவற்றை பயன்படுத்த முடியாது. அவ்வாறு நிகழ்ந்தால் மீண்டும் இலங்கை அதே புள்ளியில் வந்து நிற்கும் நிலைமையே உருவாகும். ஆனால் மக்களிடம் இன்று இருக்கும் கோபமும், எதிர்பார்ப்பும் இவை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்கின்ற வகையிலேயே இருக்கின்றது. ஆகவே அது ஒரு இக்கட்டான நிலமைக்குப் புதிய ஆட்சியாளர்களை (ஆட்சிமாற்றம் நடந்தால் கூட) இட்டுச் செல்லப் போகின்றது என்பதனையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் நோக்கு நிலையும் சில விதந்துரைப்புகளும்

இவற்றின் பின்புலத்தில், ஏனைய தேசிய இனங்கள், முக்கியமாகத் தமிழ்த் தேசிய இனம் எவ்வாறான நோக்கு நிலையில் இருந்து இந்த விடயங்களைப் பார்ப்பது, ஏற்பட்டிருக்கின்ற கொந்தளிப்பை எவ்வாறு கையாள்வது, இது தொடர்பாக எந்த நிலைப்பாடு எடுப்பது, ஆட்சி மாற்றம் தொடர்பாக என்ன நிலைப்பாடு எடுப்பது என்பவை மிக அவதானமாகவும், சாதுரியமாகவும் கையாளப்பட வேண்டிய விடயங்களாகவே இருக்கின்றன.

 

முதலாவதாக சிங்களப் பொது மக்கள் இன்றைக்கு கோபமுற்றிருக்கின்றார்கள். அவர்கள் அரசாங்கத்தில் (அரசில் அல்ல) மாற்றத்தை வேண்டுகின்றார்கள். அவர்களிடையே சில புரிதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ் பேசும் மக்கள் தொடர்பாக, அரசு செய்த விடயங்கள் தொடர்பாக ஆகக்குறைந்தது ஒரு குறிப்பிட்ட தரப்பினரிடமாவது சிறு புரிதல் ஏற்படத் தொடங்கியிருக்கின்றது. ஆகவே நாங்கள் இந்த போராட்டத்திற்கான உணர்வு தோழமையை வழங்க வேண்டியதும் அவர்களுடன் ஒத்துணர்வு கொண்டு செயற்பட வேண்டியதும் அவசியம். ஆனால் அவை நிபந்தனையற்றவை அல்ல. சிங்கள மக்களின் கோபமும், அதனால் அவர்களிற் சிலரில் ஏற்பட்டிருக்கக் கூடிய நோக்கு நிலை மாற்றங்களும், போதுமானவையாகவும், நிரந்தரமானவையாகவும் கற்பிதம் செய்யக் கூடியவையல்ல. பழையனவற்றை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு இப்பொழுது புதிதாக ஒன்று தொடங்கியிருக்கின்றது, முற்று முழுதாக அவர்களுடைய சிந்தனைப் போக்குகள் மாறிவிட்டன, அவர்களின் மனங்களிலே காலங் காலமாக் கட்டமைக்கப்பட்ட விடயங்கள் எல்லாம் அடியோடு அழிந்து விட்டன என்ற கற்பிதங்களை நாங்கள் செய்யாது அவதானமாக இருக்க வேண்டிய சூழலும் இருக்கின்றது.

 

முதற் பகுதியில் எடுத்துக் கூறப்பட்டவற்றின் அடிப்படையில், பிரச்சனைகளுக்கெல்லாம் அடிப்படையான காரணமாக அமைந்தவை - அதாவது ஆட்சியாளர்கள் ஒட்டுமொத்தனமான மக்களது நலன்களுக்கு மாறாக செயற்பட்டு, ஒரு வர்க்கத்தினதோ, சமூக அடுக்கினதோ, ஒரு குடும்பத்தினதோ தனிப்பட்ட நலன்களை, ஒட்டு மொத்த மக்களினது நலன்களிற்கு மேலாகத் தூக்கிப் பிடிப்பதற்கு ஏதுவாக அமைந்தவை - மற்றைய தேசிய இனங்கள் தொடர்பாக விதைக்கப் பட்ட அச்சமும், அதற்கு தீனி போடும் வகையிலான அரசியல் யாப்பும் அரசுக் கட்டமைப்புகளுமே. ஏனைய தேசிய இனங்கள் சார்ந்த பெரும்பான்மை மக்களினுடைய கற்பிதங்கள் மீளக் கட்டமைக்கப்பட வேண்டும், அவை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் அவை தொடர்பாக உரையாடப்பட வேண்டும். அதற்கேற்ப அரசியல் யாப்பும், அரசுக் கட்டமைப்பும், மாற்றியமைக்கப் பட வேண்டும். அந்த விடயங்களிலே மாற்றம் ஏற்படாது வருகின்ற எந்த மாற்றமும், பொருளாதாரத்தை மட்டும் மையப்படுத்திய எந்த மாற்றமும் நிலைபேறானவை அல்ல. ஏனென்றால் இவை பழைய நிலமைகளை, பழைய தந்திரோபாயங்களை, பழைய உத்திகளை மீளச் சாத்தியமாக்கும். ஆகவே இவை பேசப்பட வேண்டும். இவற்றுக்கான பொருத்தமான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பொழுது ‘இந்தப் படகினை இப்பொழுது ஆட்ட வேண்டாம்’ (Don’t rock the boat now) என்கின்ற ஒரு கோசத்துடன் எங்களுக்கு தேவையான அரசியலமைப்பு மாற்றம் குறித்தோ, இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்தோ, அப்பொழுது எங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தியவர்கள், நேர்மையான முன்முயற்சி எதனையும் எடுக்கவில்லை. அவர்கள் ஆட்சியிலே பங்காளிகளாக இருந்த பொழுது, ஆட்சியைத் தக்க வைக்கத் தேவையானவற்றை முதன்மைப் படுத்தினார்களே தவிர, தம்மைத் தெரிவு செய்தனுப்பிய மக்களின் பிரச்சனைகள் குறித்து அவர்கள் நேர்மையான எந்த முன்முயற்சிகளையும் எடுக்கவில்லை. அதே போன்ற ஒரு நிலைப் பாட்டை இந்தமுறையும் கையாள்ளவது பொருத்தமற்றது மட்டுமன்றிப் பாதகமுமானது. பெரும்பான்மை மக்களை இனப் பிரச்சனை தொடர்பான மாயக் கற்பித மனநிலையில் வைத்திருக்க உதவுவது, அவர்கள் தொடர்பாகவும், அரசியல் முறைமை, அரசு என்பவை தொடர்பாகவும் மற்றைய தேசிய இனங்களின் நேர்மையான விமர்சனங்களை மறைத்துப், போலி முகங்களைக் காட்டுவதும் அறத்தின் பாற்பட்டதும் அன்று. அது இறுதியில் சிங்கள மக்களையும் வரலாற்றின் புதை குழியில் தள்ளும்.

 

இனத்துவம் சார்ந்த, இன முரண்பாடுகள் சார்ந்த விடயங்கள் பேசப்பட்டு அவற்றிற்கு உரிய தீர்வுகள் அடையப்பட வேண்டும். சமாந்தரமாகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் அடையப்பட வேண்டும். சம நேரத்தில் இந்த இரு விடயங்களும் பேசப்பட வேண்டும். இந்த விடயங்களுக்கான தீர்வுகளும் அடையப்பட வேண்டும். இவற்றைப் புறமொதுக்கி வைத்துவிட்டுப் பொருளாதாரக் காரணிகளை மட்டும் பேசுவது என்பது வரலாறு மீள நிகழ்வதைத் தான் உறுதிப்படுத்தும். ஆகவே தமிழ் அரசியல் தரப்பினர் இதனை மிகசாதுரியமாகவும், நேர்மையாகவும் கையாள வேண்டும்.

 

சிங்கள மக்களுடன் உணர்வுத் தோழமையுடனும், ஒத்துணர்வுடனும் செயற்படும் அதே நேரம் அவர்களில் சிலரிடம் ஏற்பட்டிருக்க கூடிய இந்தப் புரிதல்களைச் சாதகமாகப் பயன்படுத்தி இது தொடர்பான ஒரு தொடர்பான ஒரு உரையாடலை வளர்த்து, எமக்குத் தேவையானவற்றை அழுத்திக் கோரி, புதிய அரசியல் கலாச்சரத்திற்கான ஒரு வழிமுறையை உருவாக்குதல் வேண்டும். அது மிக முக்கியமானது.
 
இதே போல தான் இந்த நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை அரசாங்கத்தை மீட்டெடுக்க உதவி செய்ய விளையும் அரசுகளும், நிறுவனங்களும், இனப்பிரச்சனை சார்ந்த விடயங்கள் அவை சாத்தியமாக்கிய விடயங்களான ஊழல், லஞ்சம், பொறுப்புக்கூறாமை, வெளிப் படைத் தன்மையற்ற நடைமுறைகள், மனித உரிமை மீறல்கள் (பிற தேசிய இனங்கள் சார்ந்த பயத்தின் நிமிர்த்தம் அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை இன்னொரு தேசிய இனம் ஏற்றுக் கொள்ளும் மன நிலையை உருவாக்குதல் ஊடாக) போன்ற விடயங்கள இனப்பிரச்சனையின் தொடர்ச்சியான இருப்பே சாத்தியமாக்கியது என்பதனைக் கவனத்திற் கொண்டு, சமாந்தரமான அணுகுமுறைகளினூடாகப் பொருளதார பிரச்சனைகளையும் அரசியற் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கன முன் முயற்சிகளை அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்பதனையே தான் தமிழ் தேசிய இனம் எதிர்பாக்கின்றது.

 

திங்கள், 18 ஏப்ரல், 2022

சிவில் சமூகம் என்றால் என்ன?


 


தனி மனிதர்களால் உருவாக்கப் படும் அடிப்படையான நிறுவன வடிவங்களாகக் குடும்பங்கள் அமைகின்றன. பல குடும்பங்கள் ஒத்திசைவாக வாழும் போது சமூகம் உருவாகிறது. எனினும் தனி மனிதர்களும் குடும்பங்களும் தத்தமது நலன்களை உச்சப் படுத்தி வாழ முனையும் போது அது மற்றைய தனி நபர்களையும், குடும்பங்களையும் பாதிக்கின்றது. அவ்வாறு நிகழும் போது ஒத்திசைவான சமூக வாழ்வு நெருக்கடிக்குள்ளாகிறது. எனவே தனி மனித, குடும்ப நலன்களையும் கூட்டான, சமூகப் பொது நலனையும் ஏதோ ஒரு வகையில் சீர்ப்படுத்தி, சமநிலைப் படுத்த ஒரு ஏற்பாடு தேவைப்படுகிறது. வரலாற்றின் பாதையில் இந்த ஏற்பாடு அரசு என்ற வடிவத்தைப் பெற்றது. அதன் உருவாக்க நோக்கத்திலும், தொழிற்பாட்டிலும், அரசு சமூக நலன்களைப் பேணும், சமூக நலன்களைத் தனி நபர் நலன்களை விட முன்னுரிமைப் படுத்தும் ஏற்பாடாகவே தோற்றமளிக்கிறது. சனநாயக முறைமையின் கீழ், இந்த ஏற்பாட்டைச் செயன் முறைப் படுத்த சமூகத்திலிருந்து ஒரு தரப்பினரை நாம் தேர்ந்தெடுக்கிறோம். அத் தரப்பினரை நாம் அரசாங்கம் என்கிறோம்.

நவீன அரசுகள் தமது ஆளுகையைச் சாத்தியமாக்க இரு பிரதான வழிமுறைகளைக் கையாள்கின்றன. முதலாவது வழிமுறை நிர்ப்பந்தம் சார்ந்தது. இரண்டாவது வழிமுறை சம்மதம் சார்ந்தது. நிர்ப்பந்தம் சார்ந்த ஆளுகைக் கூறுகளாக அரசியலமைப்பாக்க நிறுவனம், சட்டத் துறை, காவற்றுறை, முப் படைகள் என்பன அமைகின்றன. நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ இவையனத்துக்கும் கட்டுப்பட்டாக வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் மீறுபவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் தார்மீக உரிமையை அரசுக்குச் சமூகம் வழங்கியிருக்கிறது.

சம்மதம் சார்ந்த ஆளுகைக் கூறுகளாக கல்வியும், அனைத்து வகையான பண்பாட்டு, தொடர்பாடற் செயற்பாடுகளும் அமைகின்றன. இவற்றுக்கூடாக, தொடரறாது அரசு என்ற ஏற்பாட்டின் அவசியம், அதன் ஆளுகைக்கு உட்பட வேண்டிய அவசியம், அரசு கையிலெடுத்திருக்கும் வன்முறைக்கான அங்கீகாரம் என்பவற்றிற்கான சம்மதத்தை மனித மனங்களில் உருவாக்கும் செயற்பாடு மேற்கொள்ளப் படுகிறது. இன்னொரு வகையில் கூறினால் சமூகம் தனது இறைமையை அரசிடம் பாராதீனப் படுத்துவதற்குத் தேவையான கருத்தியல் தொடர்ந்து உருவாக்கப் படுகிறது.

ஏற்கனவே குறிப்பிட்ட படி,பிரதிநிதித்துவ சனநாயகம் கைக்கொள்ளப்படும் நாடுகளில், அரசு என்ற ஏற்பாட்டைத் தொழிற்படச் செய்வதற்கு மக்கள் அரசாங்கம் ஒன்றைத் தெரிவு செய்கின்றனர். ஆனால் தெரிவு செய்யப்படும் அரசாங்கம், அரசு என்ற ஏற்பாடு உருவாக்கப் பட அடிப்படையாகவிருந்த - சமூக நலன்களை முன்னிலைப் படுத்தல்- என்ற ஆணையைக் கிடப்பில் போடும் போது அதனை உடனடியாகத் தடுப்பதற்கு சனநாயக முறைமையில் ஏற்பாடுகள் குறைவு.

நவீன அரசுகளின் கடந்த கால அனுபவங்களை ஆய்வு செய்தால், தெரிவு செய்யப் படும் அரசாங்கங்கள் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் அரசாங்கங்களாகவே இருந்து வருகின்றன. அந்தத் தரப்பு ஒரு குறிப்பிட்ட வர்க்கமாக, அல்லது இனக் குழுவாக, நிறக் குழுவாக, அல்லது ஏதாவதொரு பொதுத் தன்மை கொண்ட குழுவாக இருக்கிறது. ஒட்டு மொத்த சமூகத்திற்குமான அரசு என்பது பெரும்பான்மையான நாடுகளின் அனுபவத்தில், இதுவரை கனவாகவே இருந்து வருகிறது. ஆக, பிரதிநிதித்துவ சனநாயக நாடுகளில், அரசாங்கத்தினூடாகத் தமது நலன்களை முன்னிலைப் படுத்தும் தரப்பு (The Center), அத்தகைய நலன்களால் பாதிக்கப் படும் மறு தரப்பு (The Other), இவ்விரு தரப்பினரின் நலன்களுக்கு வெளியிலான குரலற்றவர்களின் தரப்பு (The Subaltern) என சமூகம் வேறுபட்டுக் கிடக்கிறது.


அதாவது அலாவுதீனின் விளக்கிலிருந்து புறப்பட்ட பூதம் இப்பொழுது அலாவுதீனின் கட்டுப்பாட்டில் இல்லை.
 

இந்த நிலையில் தான், மக்கள் கூட்டத்தை ஒற்றைப் படையாகச் சமூகம் என்று நோக்காமல், பொறுப்புக்களின் அடிப்படையிலும், தொழிற்பாட்டின் அடிப்படையிலும், சமூகத்தை வகை பிரித்து நோக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. நிர்ப்பந்த வழிவந்த அரசின் ஆளுகை இயந்திரங்களான, அரசியலமைப்பாக்க நிறுவனம், சட்டத் துறை, காவற்றுறை, முப் படைகள் சார்ந்தவர்களையும், அரசைத் தொழிற்படுத்தும் அரசங்கத்தை உருவாக்கத் தேர்தல்களிற் போட்டியிடும் அரசியற் கட்சிகளையும் அரசியற் சமூகம் எனவும், மேற்குறிப்பிட்ட வகைகளில் அரசுடன் தொடர்புபடாது, தம்மால் வாக்களிக்கப்பட்டு, அதிகாரம் அளிக்கப் பட்ட அரசுகள் பொதுவான சமூக நலன்களிற்கு எதிராகச் செயற்படும் போது பாதிப்பிற்குள்ளாகிக் கையறு நிலையில் நிற்க வேண்டிய நிலையிலுள்ளோரைச் சிவில் சமூகம்/ பொது நிலைச் சமூகம் எனவும் வேறு படுத்தி நோக்க வேண்டிய நிலைமை உருவாகிறது.

தமக்குள்ளே தொடர்புகளை ஏற்படுத்தி, அணி திரண்டு, குரலெழப்பவும், செயற்படவும் தயாராகவுள்ள சிவில்/ பொதுநிலைச் சமூகம், அரசுகள் எதேச்சாதிகாரப் பாதையில் பயணிப்பதைத் தடுக்க அவசியமானது. ஒரு சிவில் சமூகக் குழு, அரசியற் கட்சியொன்றின் கூறாகவோ, அதன் செல்வாக்கிற்குட்படதாகவோ இருக்க முடியாது. ஆனால், அது சுயாதீனமாக, விரிந்த சமூக நலன்களைப் பேணுவதற்காக அரசியற் கட்சிகளுடன் ஊடாட்டங்களை மேற்கொண்டு அவற்றைத் திசைப்படுத்தும் வல்லமை மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது, சிவில்/ பொதுநிலைச் சமூகம் அரசியற் கட்சிகளினூடாகவே சமூகத்தின் விரிந்த நலன்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் சிவில்/ பொதுநிலைச் சமூகம் அரசியற் கட்சியாக முடியாது. அவ்வாறு நேரும் போது அது அரசியற் சமூகமாக மாறிவிடும்.

சனநாயகமும், பன்மைத்துவமும் கொண்ட அரசுகள் உருவாவதற்கு உறுதியான சிவில்/ பொதுநிலைச் சமூகத்தின் நிலவுகை ஒரு முன் நிபந்தனையாகும். அதனாற்றான், எதேச்சாதிகார அரசுகளின் முதற் பலியாக சிவில்/ பொதுநிலைச் சமூக வெளி அமைந்து வருகிறது.

(தமிழ் சிவில் சமூக அமையத்தின் இரு திங்கள் இதழான புலரி இதழின், நவம்பர்-டிசம்பர் 2021 பதிப்பில் வெளிவந்த எழுத்துரு)