திங்கள், 19 பிப்ரவரி, 2018

கேட்க ஒரு நாதி: பகுதி 2

ஒரு கருத்து நிலைக்கு அல்லது நடவடிக்கைக்கு அல்லது முறைமைக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வன்முறையற்ற, தார்மீக, சனநாயக நெறி சார்ந்த வடிவங்கள் பலவற்றுள் ஒன்றே, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். அவ்வாறான ஓர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தார்மீக உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.



இது போன்றதொரு அமைதி வழி நடவடிக்கையே, இம் மாதம் நான்காம் நாள், இலங்கையின் பிரித்தானியத் தூதரகத்தின் முன் நிகழ்ந்தது. அதையொட்டி நடை பெறும் வாதப் பிரதிவாதங்களில், ஒரு தரப்பினர் இவ்வாறான நடவடிக்கைகள் 'உசுப்பேத்தும்' வேலை என்ற வாதத்தையும், புலம் பெயர்ந்த மக்கள் கோழைகள் வேண்டுமென்றால் இங்கு வந்து ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தட்டும், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பது போன்ற வாதங்கள் முன் வைக்கப் படுகின்றன.

  1. இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்துவதால் தாயகத்திலுள்ள மக்களே பாதிப்படைவார்கள் என்பது பிரதான வாதம். இந்த வாதத்தை முன் வைப்பவர்கள் மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் உண்மை ஒன்றுள்ளது: 'தாயகத்தில் அடிப்படையான சனநாயகச் சூழ்நிலை இல்லை. அதனால் தான், எங்கோ நிகழும் ஒரு அற வழி எதிர்ப்புக்கு, இங்கே வன்முறை வழி பதிலடி கிடைக்கிறது அல்லது கிடைக்கும் ஏது நிலை உள்ளது.' அவ்வாறு நாம் அடக்கு முறையின் கீழ் இருக்கிறோம் என்றால், அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும், செயற்படுவதும் அதிலிருந்து விடுபட முனைவதும் தார்மீகமானதே. அதுவே மானிடத்தின் அடிப்படை இயல்பு. கட்டின்றி இருத்தல் ஒரு பெரும் மானிடக் கனவு.
  2. துணிவிருந்தால் இங்கே வந்து ஆர்ப்பாட்டம் நிகழ்த்துங்கள் என்பது அடுத்த வாதம். ஒரு மனிதக் கூட்டத்தினர் நேரடியாக அடக்கு முறைக்கு ஆளாகும் போது, நேரடி அடக்கு முறைக்கு ஆளாகாதோர், தமக்கு இருக்கும் சனநாயக வெளியைச் சாதகமாகப் பயன் படுத்தி, எதிர்ப்பைக் காட்டுவது வழமை. அதன் நோக்கங்கள் இரண்டு: ஒன்று- உலகின் மனச் சாட்சியைத் தட்டிக் கேட்பது. இரண்டு- அடக்கு முறைக்கு ஆளாகும் மக்களுக்குத் தமது தோழமையுணர்வை வெளிக்காட்டுவது. நீங்கள் தனியே இல்லை என்ற செய்தியைச் சொல்வது. இதே மண்ணில் நாங்கள், எண்பதுகளில் மண்டேலாவின் விடுதலைக்காகவும், பாலஸ்தீன விடுதலைக்காகவும் ஆர்ப்பாட்டங்கள் செய்தோம். ஆகவே இது துணிவு/ துணிவின்மைப் பிரச்சனை அல்ல. இருக்கும் சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தி அடக்கப் படும் மக்களுடன் தம்மை அடையாளப் படுத்துவது.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கிராம்சியைத் துயிலெழுப்புதல்

'எழுந்த ஞாயிறு விழுவதன் முன் கவி பாடியது எழு நூறே'

மிகப் பெரும் காப்பியமான இராமாயணத்தை, மிகக் குறுகிய காலத்திற்குள், கம்ப மகாகவி தமிழில் பாடினார் என்பதும், சூரியன் எழுந்து பின் விழுவதன் முன் எழுநூறு செய்யுட்களைப் பாடியே அவர் இதனை ஒப்பேற்றினார் என்பதுவும் ஐதீகம்.

இன்றைக்கும் அப்படித்தான். இலங்கைத் தேசிய இனப் பிரச்சனைக் களத்தின் தமிழ்ப் பக்கத்திற்கு, 'எழுந்த ஞாயிறு விழுவதன் முன்' பல்வேறு கருத்தாக்கங்கள் அசுர வேகத்தில் வந்துகொண்டிருக்கின்றன. கருத்தாக்கச் செயற்பாடு மிகத் தீவிரமாக நிகழ்கிறது.

எவ்வாறான கருத்தாக்கச் செயற்பாடு?

ஆளப் படுவதற்கும், அடங்கிக் கிடப்பதற்குமான சம்மதத்தை 'உற்பத்தி' செய்யும் கருத்தாக்கச் செயற்பாடு.

  1. தமிழ் மக்களுக்குப் பேரம் பேசும் சக்தி கிடையாது. இனிக் கிடைப்பதற்கான சாத்தியங்களும் இல்லை. எனவே 'தருவதை' வாங்கிக் கொள்வதே உசிதம்.
  2. முப்பது வருடப் போரினால் என்ன பயன்? இப்பொழுது எமக்குத் தேவை அபிவிருத்தியே. அரசுடன் இங்கிதமாக நடந்து கொள்வதுதான் அபிவிருத்திக்கு ஒரே வழி. சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்ற 'பாரிய அபிவிருத்திகள்' அரசுடன் இணைந்து நடந்தமையால் தான் எமக்குக் கிடைத்தன. ஏன் சிற்றூழியர் நியமனங்களும் தான். அபிவிருத்திக்கு அரசியல் ஆகாது. ஆகையினால் ஆள்பவர்களின் மனம் கோணாது நடக்கக் கடவீர்களாக.
  3. 'தீர்வு' பெறுவதும், 'அபிவிருத்தி' செய்வதும் கூட மக்கள் பொறுப்பல்ல. 'மெத்தப் படித்தவர்களை', 'யானைகளை' அல்லது 'வீணைகளை' தெரிவு செய்து விடுவோம். அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
  4. கொள்கை, இலட்சியம் எல்லாம் காலத்திற்கொவ்வாதவை. தனி மனித முன்னேற்றமே சுபீடசத்திற்கான வழி. 'கண்டறியாத' கொள்கைகளையும், இலட்சியங்களையும், தூக்கியெறிந்து விட்டு, கல்வியில், தொழிலில், வாழ்வில் முன்னேறி உச்சம் தொடுவோம். 'பொது வேலை' கறிக்குதவாது.
  5. எல்லாவற்றிற்கும் மேலாக 'உசுப்பேத்தக் கூடாது'. சரி/பிழை, நியாயம்/அநியாயம் பற்றியெல்லாம் கதைத்து, சனங்களின் மனங்களைக் குழப்ப வேண்டாம். 'அட்ஜஸ்ற்' பண்ணிக் கொண்டு, சமாளித்துக் கொண்டு போங்கோ.
பேச்சுக்களில், எழுத்துக்களில், நிலைப் பதிவுகளில், விவாதங்களில், உரையாடல்களில் என எல்லாத் தளங்களிலும் நிகழ்கிறது இந்தச் 'சம்மத உற்பத்தி' (Manufacturing Consent).

யாரிதைச் செய்கிறார்கள்?

இரண்டு தரப்பினர்.

ஒன்று: தெளிவான அரசியல் அட்டவணையுடன் இயங்குபவர்கள். உலகமயமாக்கல், தொழில்/வணிக விருத்தி, சந்தைகளின் விரிவு, வளச் சுரண்டல், என்பவற்றின் பிரதான எதிரிகள்: சமூக உணர்வு, வர்க்க உணர்வு, தேசிய உணர்வு. எனவே இவற்றை மக்கள் மனக்களிலிருந்து அகற்றி, மக்களை- அரசியல், சமூக, வர்க்க, தேசிய- 'நலமடித்து' விட வேண்டும் என்ற தெளிவான குறிக்கோளுடன் இயங்கும் 'அரசியற் சமுகம்' (Political Society). அரசு, ஆள்பவர் நலன் சார்ந்த அரசியற் கட்சிகள், அவர்கள் நலன் சார்ந்து இயங்கும் தொழில் முறைப் புலமையாளர்கள் (Traditinal Intellectuals).

இரண்டு: நாங்கள். நானும், நீயும், அயலவனும். இந்த உலகை, அரசியலை, சமூகத்தை, பண்பாட்டை, அறிவியலை, 'சனரஞ்சகமாகப்' புரிந்து கொண்டிருக்கும், நாங்கள். 'அவர் நல்லவர்', 'இவர் வல்லவர்' என்ற அடிப்படையில் தலைவர்களையும், 'வாழ் நாள் முழுமைக்கும் விசுவாசிப்பிற்கான கட்சி' என்ற அடிப்படையில் அரசியற் குழுக்களையும் மேலோட்டமாகப் புரிந்து கொண்டு, அந்தப் புரிதலின் அடிப்படையில் கருத்தாடுபவர்கள். சிவில் சமூகத்தினர் (Civil Society). வாழ்முறைப் புலமையாளர்கள் (Organic Intellectuals).

உலகம், சமூகம், பொருளியல், பண்பாடு, கல்வி, அறிவு என்பன குறித்த, ஆழமற்ற, 'சனரஞ்சகமான' புரிதல் தான் உலகெங்கிலுமுள்ள ஆள்பவர்களின் ஆயுதம். பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் என்பவற்றின் ஊடாக, 'நுனிப் புல் மேயும்' சமூக மனிதர்களை அவர்கள் உருவாக்குகின்றனர். அதன் விளை பொருட்களாகிய நாங்கள், எம்மையறியாமல், அவர்களின் கருத்தியலை மறு உற்பத்தி செய்கிறோம்.

"ஆனாலும்
கைவிரல்கள்
எதிரி முகாமில் எழுந்தொலிக்கும் பாடலுக்கு
றைபிள் துடுப்பில்
தம்மை மறந்து தாளங்கள் போட்டபடி" 
(வ.ஐ.ச ஜெயபாலன். பாலஸ்தீனத்தின் கண்ணீர்)

இன்றைய எமது தேவை, இந்த மட்டுப்பாடுகளைக் கடந்த, நீதியின் பால் நிற்கக் கூடிய, அற வழி சிந்திக்கக் கூடிய, புலமையாளர்கள் தான். அடக்கப் படும் சமூகம் தனக்கேயுரிய மரபுப் புலமையாளர்களையும், வாழ்முறைப் புலமையாளர்களையும் உருவாக்கி, விடுதலைக் கருத்தியலை மக்கள் மனங்களில் கட்டியெழுப்புவதுதான், தளைகளிலிருந்து மீள்வதற்கான வழி.

தார்மீக அடிப்படையில் வேரூன்றி, தர்க்கீக வெளியில் கிளையெறிந்து நிற்கக் கூடிய, நீதியின் பாற்பட்ட புலமை மரபொன்றை உருவாக்க வேண்டியது எனதும், உனதும் கடன்.

அந்தோனியோ கிராம்சியைத் துயிலெழுப்பி அவரிடமிருந்து கற்றுக் கொள்ளுவோம்.



(அந்தோனியோ கிராம்சி 1891-1937 ஒரு இத்தாலிய மார்க்சிசச் சிந்தனையாளர். ஆள்பவர்கள் வன்முறை, பலவந்தம் என்பவற்றிற்கு மேலாக, தமக்குச் சாதகமான, தமது ஆட்சியை ஏற்றுக் கொள்ளும் சம்மதத்தை மக்கள் மனங்களில் உற்பத்தி செய்கிறார்கள். அந்தக் கருத்தியல் மேலாதிக்கம் தான் (Ideological Hegemony) அவர்களின் பிரதான பலம். இந்த மேலாதிக்கம் உருவாவதற்கு, சிவில் சமூகத்தைச் சேர்ந்த, வாழ்வியற் புலமையாளர்களே பெரும் பங்கு வகிக்கின்றனர். ஆகவே மாற்றத்தை விரும்பும் எந்தச் சமூகமும், ஆள்பவர்களின் கருத்தியல் மேலாதிக்கத்துடன் இடைவினை புரிந்து, மாற்றுக் கருத்தியல் தளத்தை உருவாக்கக் கூடிய சிவில் சமூக, வாழ்வியற் புலமையாளர்களை தனக்கென உருவாக்க வேண்டும் எனக் கருதினார் கிராம்சி. அவரது சிந்தனைகள் பற்றிய விரிவான பதிவு பின்னர்)
 
 
 
 
 



வியாழன், 15 பிப்ரவரி, 2018

பேனாக்கள் மை சிந்தட்டும்

உறங்கப் புகும் பொழுதில், ஒரு தனி நுளம்பு காதருகில் ரீங்காரமிடுவதைப் போலத் தொல்லை தருகின்றன, தேர்தற் கால உரையாடல்கள். தேர்தல் மேடைகளில், பத்திரிகைப் பத்திகளில், சமூக வலைத்தள அக்கப் போர்களில் என அங்கிங்கெனாதபடி அறியாமையின் உடுக்கொலி ஓங்கி ஒலிக்கிறது. விரல் விட்டெண்ணக் கூடிய சில குரல்களைத் தவிர, மற்றவையெல்லாம், அறியாமையின் அல்லது அறிய விரும்பாமையின் பேரொலிகளாகவே இருந்தன.

நீரெனவும் நீரையும், பாலெனவும் நீரையும் அள்ளி வழங்கி விட்டு, பாலெது? நீரெது? எனப் பகுக்கும் அன்னப் பறவைகளின் வித்தை காலவதியாகி விட்டது என்று பிரகடனப் படுத்தியிருக்கிறார்கள் சில இணையத் தளப் 'புற்றீசல்' தத்துவ வித்தகர்கள்.

இந்தத் தத்துவ வித்தகர்கள் கூற விழைவது என்ன? 1940 களில் எழுதப் பட்ட ஜோர்ச் ஓர்வெல்லின் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து நான்கு என்ற நவீனத்தில் அவர் தீர்க்க தரிசனத்துடன், முரண் நகையாகக் கூறிய விடயங்கள் தான்.

யுத்தமே சமாதானம்
War is Peace
அடிமைத்தனமே சுதந்திரம்
Slavery is Freedom
அறியாமையே பலம்
Ignorance is Strength

முள்ளி வாய்க்கால் முடிவே சுபீட்சத்தின் பெரு வாசல். 'ஏக்கிய ராஜ்ஜிய' வே சரி நிகர் சமான வாழ்வு. யதார்த்தமே சாசுவதம்.


சனி, 10 பிப்ரவரி, 2018

யானை பார்த்தல்

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான, சமூக வலைத்தள உரையாடல்களை, தொடர்ந்து, மௌனமாக அவதானித்து வந்தேன். அந்த உரையாடல்கள் குறித்து வருத்தமும், ஏமாற்றமுமே இறுதியில் எஞ்சி நிற்கின்றன. ஏன் இப்படியானோம்?



இப்போதைக்கு இரண்டு காரணங்களை அடையாளம் காண முடிகிறது.

ஒன்று: சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகள், போக்குகள் குறித்த எமது சமூகத்தினதும், தனித்தவர்களினதும் புரிதல் மிக மேலோட்டமானதாக இருக்கிறது. அவற்றில் பொதிந்திருக்கும் ஆழமான அர்த்தங்கள், சிக்கலான இடைத்தொடர்புகள், அவற்றைப் பகுதிகளாக அன்றி முழுமையாக நோக்கும் முறைமை, என்பன தொடர்பாக நாம் நிதானித்துச் சிந்திக்கப் பழக்கப் படவில்லை. எமது கல்வி முறையும், ஊடகத் தரமும், இதற்குக் காரணமாக அமையலாம். இவ்வாறான, எளிமைப் படுத்தப் பட்ட, துண்டு துண்டான, நேர்கோட்டுப் புரிதலின் அடிப்படையிற்றான் எமது கருத்தாடல்கள் கட்டியெழுப்பப் படுகின்றன. விழியிழந்தோர் 'யானை பார்த்த' நிலைக்கு ஒப்பானதாக எமது நிலை ஆகி விடுகிறது.

இரண்டு: மேற்சொன்னது போன்ற பலவீனமான புரிதல்களின் அடிப்படையில் எமது விளக்கங்களைக் கட்டியெழுப்பும் போது, பலவற்றை விளக்க முடியாது போய்விடுகின்றது. என்றாலும், உரையாடல்களில் விவாதத் தன்மையும், அதில் வெல்லும் முனைப்பும் மேலோங்கும் போது, பரஸ்பர வசை பாடலில் உரையாடல் சென்று முடிகின்றது. உரையாடல்களினூடாக எய்தப் பட வேண்டிய பொதுப் புரிதலிற்கும் பதிலாக, விவாத வெற்றி முனைப்புக் காரணமான காழ்ப்புணர்வே எஞ்சுகின்றது.

தவிர்க்கப் பட முடியாத, நவீன உரையாடல் வெளியான சமூக வலைத் தளப் பரப்பில், காத்திரமாகக் கருத்தாடக் கூடிய சிலராவது எமக்கு இன்று அவசியம் தேவை.