சனி, 29 டிசம்பர், 2018

மாயமான்- சமூக மாற்றமும் வாழ்வியல் நோக்கும்


சமூக மாற்றம் புரட்சிகளால் சாத்தியப் படும் என்று ஆழமாக நம்பிய தலைமுறையினரில் நானும் ஒருவன். அக்டோபர் புரட்சி, சீனப் புரட்சி, கியூபப் புரட்சி என எல்லா வகையான புரட்சிகளினாலும் ஆகர்சிக்கப் பட்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன். புரட்சிகளால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. அதிகார மாற்றங்கள் நிகழ்ந்தன. கொள்கை மாற்றங்களும், கட்டமைப்பு மாற்றங்களும் நிகழ்ந்தன. ஆனால் சிந்தனை மாற்றமும், மன மாற்றமும் நிகழவில்லையோ எனப் பின் வந்த நிகழ்வுகள் எனக்குள் கேள்விகளை எழுப்புகின்றன. 

புரட்சிகளால் விழைந்த மாற்றங்கள் நீடித்து நிலைத்து நிற்க முடியாமைக்கு, எதிர்ப் புரட்சிக் கருத்துக்கள் விதைக்கப் படக் கூடிய தளம் ஒன்று உருவாவதற்கு, வாழ்வியல் தொடர்பான சிந்தனை, மனப்பாங்கு என்பவை மாற்றமடையாமல் இருந்தது காரணமாக இருக்கலாம் என நான் ஐயுறுகிறேன். மாற்று முறைமை எதுவும் சாத்தியமற்றது என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ள, உலக மயமான முதலாளித்துவக் கால கட்டத்தில், மாற்றுக் குறித்துச் சிந்திக்க விழையும் எவரும், வாழ்வு தொடர்பான எமது நோக்கு நிலையை, சிந்தனையை மறு பரிசீலனை செய்யாது, மாற்று முறைமை குறித்துச் சிந்திக்க முடியாது.

இன்று மேலோங்கியுள்ள வாழ்வியல் நோக்கு என்பது, வாழ்க்கையின் வெற்றியை அதிக நுகர்வு, அதிக உடைமை, அதிக முதலீடு என்பவற்றுடன் இறுகத் தொடர்பு படுத்தியுள்ளது. நாங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நுகர்கிறோமோ, எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவிக்கிறோமோ, முதலீடுகளை மேற்கொள்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நாங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக நம்பவைக்கப் படுகிறோம். அதிக நுகர்வையும், அதிக உடைமையையும், அதிக முதலீட்டையும் சாத்தியமாக்க, நாம் அதிக வருமானத்தை முதலில் பெறவேண்டும். அவ்வாறு அதிக வருமானம் பெற வேண்டுமானால், அதிகமதிகம் உழைக்க வேண்டும். இதற்காகக் கடின உழைப்பும், சாமர்த்திய உழைப்பும் விதந்துரைக்கப் படுகின்றன. 
 




எந்த அளவிற்குக் கடுமையாக உழைக்க வேண்டும்? எந்த அளவிற்குச் சாமர்த்தியமாக உழைக்க வேண்டும்? அதற்கென தனித்த அளவீடு இல்லை. தனித்த நியமங்கள் இல்லை. ஒப்பீட்டு அளவீடுகளும், நியமங்களும் தான் உண்டு. என்ன ஒப்பீடு? மற்றவர்களை விடக் கடுமையாக, மற்றவர்களை விடச் சாமர்த்தியமாக, உழைக்க வேண்டும். அவ்வளவுதான்.

ஆக நாங்கள் தனிமைப் படுத்தப் படுகிறோம். மற்றவர்களை விட நாங்கள் முதன்மையானவர்கள் என்ற நிலையைப் பெற, இந்தத் தனியனாகு முறைமை அவசியம். எனது தனிப்பட்ட திறன்கள், எனது தனிப்பட்ட அறிவு, எனது தனிப்பட்ட வல்லமை என்பவற்றை நான் மற்றவர்களுடன் பகிராது வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றைய மனிதனின் தோல்வியின் மீதே என் வெற்றிக்கான அத்திவாரம் இடப் படுகிறது. கல்வி பரீட்சைகள் மூலம் வெற்றியாளனை அடையாளம் காண்கிறது. நிறுவனங்கள் ‘செயற்பாட்டு மதிப்பாய்வு’ மூலம் வெற்றியாளனை அடையாளம் காண்கின்றன. கூட்டு மனநிலைக்கு இங்கு இடம் இல்லை. தனி மனித வெற்றியே அனைத்திற்குமான அடிப்படை என்ற கருத்தியல் எங்கள் மூளைகளுக்குள் செதுக்கப் பட்டு விட்டது. 
 
 

அதிக நுகர்வு, அதிக உடைமை, அதிக முதலீடு-இவற்றைச் சாத்தியமாக்குவதற்கான முன் நிபந்தனையான அதிக வருமானம், அந்த வருமானத்தை ஈட்டுவதற்கான உழைப்பு, மற்றவர்களை வெல்லும் முனப்பிலான உழைப்பு, இன்றைய வாழ்வை, இந்தக் கணத்தின் மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகிறது. மகிழ்வு எப்பொழுதுமே தொலைவில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இருப்பதாகவும் அனுமானித்து, அதனை நோக்கிய பதட்டமான ஓட்டத்தில், மற்றையவர்களை முந்திச் செல்லும் எத்தனிப்புடனான பதட்டமான ஓட்டத்தில், நிகழ்கால வாழ்வைத் தொலைத்து விடும் வாழ்முறையை நாம் வரித்துக் கொண்டுள்ளோம். அதனையே சாசுவதம் என ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இந்தக் கணம் எங்களுக்குத் தரக்கூடிய மகிழ்ச்சியை நாம் புறமொதுக்கி விட்டோம். எம் வீட்டு முற்றத்தில் இதழவிழும் மலரின் அழகு, எம் வீட்டுக் கொல்லையில் ஒலிக்கும் புள்ளினங்களின் ஒலி, ஒரு மழலையின் குமிண் சிரிப்பு, எம் வீட்டாரின் உடல் நலம், எம் வீட்டுக் கொடியில் விழைந்த காய், எம் வீட்டு மரத்தில் கனிந்த பழம், இவையெல்லாம் தரக் கூடிய மகிழ்வை மகிழ்வாகக் கருதக் கூடிய மன நிலையில் நாங்கள் இல்லை.  
 

இப்படியான வாழ்வியலை வரித்துக் கொண்டு, நாங்கள் மகிழ்வாகவும் இருக்க முடியாது, நேர்மையாகவும் இருக்க முடியாது. மாற்றம் குறித்துச் சிந்திக்கவும் முடியாது. சமூக மாற்றம் குறித்துக் கரிசனை கொண்ட எவரும், தம் சொந்த வாழ்வின் நோக்கு நிலையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். மகிழ்வான வாழ்வின் தரிசனத்தை, அதன் பூரணத்துவத்தை சுய வாழ்வில் உணராது, மற்றவர் வாழ்வில் மாற்றம் கொண்டுவருவது குறித்து எவரும் பேச முடியாது. 
 
 
 
எமக்கு இப்போ வேண்டுவதெல்லாம் ஒரு ஐந்தொகை. எமக்கான மகிழ் தருணங்களை உருவாக்கக் கூடிய மனிதர்கள் யார்? எவர் முகங்கள்? எவர் மனங்கள்? எவர் கரங்கள்? மகிழ் தருணங்களை உருவாக்கக் கூடிய ‘பல்லினங்கள்’ எவையெவை? நிற்பவை எவை? நடப்பவை எவை? ஊர்வன எவை? பறப்பவை எவை? நீந்துபவை எவை? மகிழ் தருணங்களை உருவாக்கும் இயற்கையின் இடங்கள் எவை? எந்த வனத்தின் தருக்கள்? எந்த நதியின் புனல்? எந்தக் குளத்தின் கரை? எந்தக் கடலின் அலை? எந்த வயலின் வெளி? மகிழ் தருணங்களை உருவாக்கும் செயல்கள் எவை? காலை நடையா? மண் விழும் வியர்வையா? கை கொடுக்கும் கரங்களா?
 
 
இவற்றைத் தேடித் தெளிந்து, வாழ்வின் மகிழ்வை, அர்த்தத்தை இந்தக் கணத்தில் அடையாளப் படுத்தாது, அது தொலைவில் தான் உள்ளது என்று நம்பி, ஓடுவதே வாழ்வு என்று வரித்துக் கொண்டால், மாற்றம் மாயமானாகவே இருந்துவிடப் போகிறது.