திங்கள், 15 ஜனவரி, 2018

காலத் துயர்

முரசம் அதிர்ந்தது.

மகா சனங்களே...

முரசறைவோன் சேதி சொல்லத் தொடங்கினான். ஆலமரத் தலைவனின் செய்தி.


____________________________________________________________________________

ஆல மரமோவெனின் ஒரு முது மரம். கீர்த்தி மிகு தரு.

நூற்றிருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, வேரோடிக், கிளை பரப்பி, விழுதெறிந்த பெரு மரம்.

அண்ணல் யானை, அணி தேர் புரவி, ஆட் பெரும் படையுடன் மன்னர்க்கிருக்க நிழலாக வல்ல தரு.

தெண்ணீர்க் கயத்துச் சிறு மீன் சினையினும் நுண்ணிதேயான அதன் விதைகள், ஒன்றே கால் நூற்றாண்டுகளாய் உலகெங்கும் பரவியிருந்தன.

ஆல மரமோவெனின் ஒரு முது மரம். கீர்த்தி மிகு தரு.

#கலை பயில் தரு#, #கலைமலி தரு#, #தமிழர் தலை நிமிர் தரு#.
_____________________________________________________________________________

முரசறைவோன் சேதி சொல்லத் தொடங்கினான். ஆலமரத் தலைவனின் செய்தி.

இத்தால் சகலருமறியத் தருவதாவது....

எங்கள் தலைவர் தனக்கு உறுதுணையாய் இருக்க ஒரு உப தலைவரை நியமிக்கச் சித்தம் கொண்டுள்ளார்.

அவருக்கான தகுதிகளாவன.................

அவர் ஆசிரியராக இருக்க வேண்டும், ஆனால் வகுப்புகளுக்குச் சென்றிருக்கக் கூடாது...

டும். டும். டும். டும்.

சேவைக் காலத்தின் பெரும் பகுதியைச் சிற்றுண்டிச் சாலையிலே செலவிட்டிருக்க

வேண் டும், டும், டும், டும்.

பிரதான தொடர்பாடல் மொழியாக, இன்னாச் சொல் மற்றும் தூஷண வார்த்தைகளைப், பொது வெளியிலும், மைதானத்திலும் மாணவர்களுக்கு பிரயோக மூலம் கற்பிக்கும் ஆற்றல் மிகுந்தவராக இருக்க

வேண் டும், டும், டும், டும்.

புரட்சிகர ஆயுதங்களான, நோட்டீஸ் ஒட்டுதல், வெடி கொளுத்திப் போடுதல், போத்தல் உடைத்தல், யன்னல் கண்ணாடிகளை உடைத்தல் என்பவற்றை மாணவர்களுக்குப் பரிச்சயப் படுத்திய முன்னனுபவம் இருக்க

வேண் டும், டும், டும், டும்.

புரட்சிகர உந்துதலை வழங்கும், மது, பாக்கு, தூள், என்பவற்றின் தொடர்ச்சியான வழங்கலை உறுதிப் படுத்தலின் ஊடாக மாணவர்களின் புரட்சிகரச் சிந்தனையை தொடர்ந்து பேணக் கூடியவராக இருக்க

வேண் டும், டும், டும், டும்.

கடமை நேரத்தில், போதையின் பிடியில் உலா வருவதும், புகை பிடிப்பதும், மேலதிக தகைமைகளாகக் கொள்ளப்

படும், டும், டும், டும்.

மகா சனங்களிலே யாருக்காவது, இத் தகுதிகள் ஒரு சேர இருப்பின், இப் பதவிக்கான விண்ணப்பத்தை......
_____________________________________________________________________________


முரசொலி சடுதியாய் நின்று போனது.

முரசறைவோன் துயர் மிகுதியால் நெஞ்சு வெடித்து இறந்து வீழ்ந்தான்.

ஆல மரத்தின் கிளைகள் பாரிய ஒலியுடன் முறிந்து வீழ்ந்தன.

தன் தீரா முதுமையைத் புறமொதுக்கி, ஒரு தொன்மக் கிழவன் உரத்துச் சொல்லிச் செல்கிறான்..

'இது துர்ச் சகுனம் மக்காள்....'

'ஆல் முறிந்து விழக் கூடாது மக்காள்...'

'சந்ததிக்காகாது மக்காள்...'

அந்த முது குரலால், கல்லறையில் துயில் கொண்டோரின் தூக்கமும் தொலைந்தது.

'சந்ததிக்காகாது மக்காள்...'
_____________________________________________________________________________

அதிகாலைக் கனவு.

பலித்து விடுமோ?

என்னைத் துயர் தின்று தீர்க்க ஆரம்பித்தது.