புதன், 16 ஆகஸ்ட், 2017

ஜல் சாகர் (Music Room)

யாழ்ப்பாண நூலகத்தின் குவிமாடக் கேட்போர் கூடத்திற்குச்  செல்லும் படிக்கட்டில் நாங்கள் ஏறிக் கொண்டிருந்தபோது நேரம் பி.ப. 2.45. வழமையாக நூலகத்திற்குள் செருப்புக்கள் அணிந்து செல்ல முடியாது. நூலகத்தின் முன்றலில் உள்ள பாதணிப் பாதுகாப்பிடத்தில் அவற்றைக் கழற்றி வைத்து விட்டே செல்ல வேண்டும். ஆனால் குவிமாடக் கேட்போர் கூடத்திற்குச் செல்வதானால், மண்டபம் வரை சென்று, அதன் வாசல் உப்பரிகையில் செருப்புக்களைக் கழற்றினால் போதுமானது. போன தடவை இதே வழமையின் பிரகாரம் செருப்புக்களுடன் படியேற முற்பட்ட போது வாசலில் இருந்த நூலக ஊழியர் செருப்புக்களைப் பாதுகாப்பிடத்தில் விட்டுச் செல்லுமாறு கோரினார். இன்றைக்கும் அவர்தான் கடமையில் இருந்தார். செருப்புகளைக் கழற்றிக் கையளிக்க முனந்தபோது, தேவையில்லை, நீங்கள் செருப்புக்களை மேலே சென்று கழற்றலாம் என்றார். மாறும் என்ற விதி மட்டும் மாறாது, மற்றெல்லாம் மாறும்.

குவிமாட கேட்போர் கூடம் நூலகத்தின் இரண்டாவது மேற்றளத்திலே, முன்புறமாக இருக்கிறது. அப்படி ஒரு இடம் இருப்பதே அண்மையில் தான் எனக்குத் தெரிய வந்தது. வழமையாக நூலகத்தின் கேட்போர் கூடம் என்றால், முதலாவது மேற்றளத்திலே இருக்கும் பெரிய கேட்போர் கூடத்தைத்தான் குறிக்கும். பொதுவாக யாழ் நூல் நிலையத்தில் நிகழும் பகிரங்க நிகழ்வுகள் இங்குதான் நடக்கும். கோட்டை முனியப்பர் கோவில் பக்கமாக உள்ள பின்புற வாசலால் வந்தால் பெரிய கேட்போர் கூடத்தை அடைவது சுலபம். இன்னுமொரு குட்டிக் கேட்போர் கூடம் இருப்பது பிறகுதான் தெரிந்தது.

யேசுராசா அண்ணரின் முகப் புத்தகத்தில் தான் குவிமாடக் கேட்போர் கூடம் என்ற பிரயோகத்தை முதலில் கண்டேன். யாழ்ப்பாணப் பொது நூலக வாசகர் வட்டத்தின் பகிரங்க நிகழ்வுகள் இங்குதான் நடை பெற்று வருகின்றன. நூலக வாசகர் வட்டம் ஒவ்வொரு மாதத்தினதும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் திரைப்படக் காட்சியொன்றையும், நான்காவது ஞாயிற்றுக் கிழமைகளில் உரை நிகழ்வொன்றையும் கிரமமாக நடாத்தி வருகின்றது.

மே மாதம் நிகழ்ந்த முதலாவது திரையிடலுக்கு நான் செல்லவில்லை. அன்று இஸ்ரேலியத் திரைப்படமான Lemon Tree திரையிடப் பட்டது. பின்பு நடந்த இரண்டு திரைப்படக் காட்சிகளுக்கும் நான் போனேன். குரு தத்தின் ‘பியாசா’, அடூரின் ‘எலிப் பத்தாயம்’ என்பவை பின்னர் திரையிடப் பட்டன.

இன்றைக்கு சத்யஜித் ரேயின் ‘ஜல்சாகர்’ என்ற திரைப் படம் திரையிடப் படுவதாக இருந்தது. அதற்காகத் தான் படியேறிக் கொண்டிருந்தோம். முதலாவது தளத்திலிருந்து இரண்டாவதற்குச் செல்லும் படிக்கட்டின் வாசல் தற்காலிகத் தடுப்பொன்றினால் மூடப் பட்டிருந்தது. படக் காட்சி நடைபெறுவதாகவிருந்தால் இந்த நேரம் யேசுராசா அண்ணர் வந்து எல்லா முன்னாயத்தங்களையும் செய்து விட்டுப் பார்வையாளர்களுக்காகக் காத்திருப்பார். கடைசி நிமிடத்தில் ஓடி வந்து ‘ஆத்துப் பறந்து’ வேலை செய்யும் வழக்கம் அவரிடம் கிடையாது. எல்லாம் ஒழுங்காகவும், நேரத்துடனும் நடைபெற வேண்டுமென்று, மிகச் சிரத்தையுடன் அனைத்தையும் ஒழுங்குபடுத்தியிருப்பார். படிக்கட்டுத் தடுக்கப் பட்டிருப்பதால், படக் காட்சி இடம் மாறியிருக்க வேண்டும் அல்லது இரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும். செருப்பைக் கழற்றி விட முயன்ற போது கீழே இருந்த ஊழியர் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

என்னுடன் சேர்ந்து படியேறிக் கொண்டிருந்த மீராபாரதியும், சிறீஸ்கந்தராசா அண்ணரும் என்ன செய்வோம் என்று கேட்ட பொழுது, இன்னுமொரு நூலக ஊழியர் வந்தார். முதல் நாட் பெய்த மழையினால் சாளரங்களினூடாக மழை நீர் குவிமாட அரங்கிற்குள் வந்து விட்டதால் இன்று அதனைப் பாவிக்க முடியாதிருப்பதாகவும், திரைப்படக் காட்சி பிரதான கேட்போர் கூடத்திற்கு மாற்றப் பட்டுள்ளதாகவும் சொன்னார். அவர் பின்னால் பிரதான கேட்போர் கூடத்திற்குச் சென்றோம். முன்னாயத்தங்களை முடித்து விட்டு யேசுராசா அண்ணர் வழமை போலக் காத்திருந்தார்.

இந்த முறை எண்ணிக்கையில் குறைவானோரே வந்திருந்தனர். பதினைந்து இருக்கலாம். குருதத்தின் பியாசா படத்திற்கும் ஏறத்தாள இவ்வளவு பேரே வந்திருந்தனர். ஆனால் அடூரின் எலிப்பத்தாயத்திற்கு முப்பதுக்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். டொக்டர் முருகானந்தம், ஓவியர் இராசையா, கலாநிதி கந்தையா ஶ்ரீகணேசன் போன்றோர் ஏற்கனவே வந்திருந்தனர். வழமையாக வரும் கேதாரநாதன், கணபதி சர்வானந்தா போன்றோரை இம்முறை காணவில்லை.

பிற மொழிப் படங்கள் திரையிடப் படுவதானால் ஆங்கிலத்தில் sub-title இருக்கும் பிரதிகளையே திரையிடலுக்காகத் தெரிவு செய்வார்கள். என்றாலும் ஆங்கில மொழியில் பரிச்சயம் குறைவானவர்களின் நன்மைக்காகத் திரையிடப் படவுள்ள படம் தொடர்பான பின்னணித் தகவல்கள் உள்ளிட்ட ஒரு அறிமுகத்தை யேசுராசா அண்ணர் வழங்குவது வழமை. அது திரைப்படம் குறித்த புரிதலுக்கும், இரசனைக்கும் மிகவும் உதவியாக இருப்பது எனது அனுபவம்.



ஜல்சாகர் ஒரு சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்ட உன்னதமான திரைப்படம். 1958ம் ஆண்டு வெளிவந்ததாக அறிமுகவுரையில் சொல்லப்பட்டது. அதுகாலவரை கோலோச்சிய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் உடைவையும், எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த உள்ளூர் சிறு முதலாளிகளின் வெற்றியையும், இரண்டு மனிதர்களின் கதையின் ஊடாக மிகவும் கலை நேர்த்தியுடன் வெளிக்கொணர்கிறது, ஜல்சாகர்.

பிஸ்வம்பர் ரோய் தன் அரண்மனையின் உப்பரிகையில் தனிமையிலும், முதுமையிலும் கழித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பெரிய நிலப் பிரபு. தூரத்தே ஒரு இயந்திரத்தின் ஒலி. அது என்னவென எஞ்சியிருக்கும் இரண்டு அரண்மனைப் பணியாளர்களில் ஒருவனிடம் வினவுகிறார். அது ஒரு மின் பிறப்பாக்கியின் ஒலி எனவும், ஒப்பந்தகாரர் மஹிம் கங்குலியின் மகனின் உபனயனம் நடந்து கொண்டிருப்பதாகவும் அவன் சொல்கிறான். மஹிம் கங்குலி இப்பொழுது பெரும் செல்வந்தன். ரோயின் நினைவு அவரது ஒரே மகனினது உபனயன நிகழ்வு நோக்கிப் பறக்கிறது. அது ஒரு மிகப் பெரும் நிகழ்வு. மிகுந்த பொருட்செலவுடன் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று. அவரின் குடும்பப் பெருமைகளை வெளிச் சொல்லும் வகையிலானதான் ஒன்று. அந்த நிகழ்வின் உச்சம் அவர் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்வுதான். உன்னதமான இசைக் கலைஞர்களை அழைத்து அதனை அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர் இசைக்கு அடிமை. அதன் பரம இரசிகன். தனது அரண்மனையில் ஒரு இசை அறையை (Music Room/ஜல்சாகர்) அதற்காகவே அவர் அமைத்திருந்தார். அங்கே இசை நிகழ்வுகளை நடத்தித் தன் நண்பர்களுடன் சேர்ந்து இரசிப்பது அவருக்கு மகிழ்வு தரும் ஒன்று. அது அவரது பெருமையை வெளிக்கொணரும் ஒரு வழிமுறையும் கூடத்தான். அவரது மனைவிக்கோ இது பிடிப்பதில்லை. அந்தக் குடும்பத்தின் செல்வத் தேட்டம் கரைந்து வருவதை அவள் நன்குணர்ந்திருந்தாள். அவரது நில புலன்களை வெள்ளப் பெருக்கும், செல்வத்தை படோடோபமான வாழ்வும் அரித்து வருவது அவளுக்குக் கவலை.

மகனின் உபனயன நிகழ்விற்குப் பிறகு அவர் ஒழுங்கு செய்த மிகப் பெரும் இசை நிகழ்வு ஒரு வருடப் பிறப்புத் தினத்தன்று நிகழ்ந்தது. அன்று தான் மஹிம் கங்குலி தனது புதிய வீட்டின் புது மனைப் புகு விழாவை ஏற்பாடு செய்திருந்தான். அதற்கு பிஸ்வம்பர் றோயையும் அழைத்திருந்தான். அந்த நிகழ்வுக்குச் செல்லாமல் இருப்பதற்காகவும், அதற்குப் போட்டியாகவுமே அதே நாளில் தனது ஜல்சாகரில் இந்த நிகழ்வை அவர் ஏற்பாடு செய்தார். ஒரே ஒரு வித்தியாசம். தனது பெட்டகத்தில் இருந்த பரம்பரை நகைகளை அடகு வைத்தே அந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய அவரால் முடிந்தது. தனது பிறந்த வீட்டிற்குச் சென்றிருந்த மனைவியையும், ஒரே மகனையும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அவர் மீள அழைத்திருந்தார். அன்றுதான் அவர் வாழ்வின் மிகப் பெரும் துயரம் நிகழ்ந்தது. வரும் வழியில் அவர் குடும்பம் பயணித்த படகைப் புயல் தின்று விட்டது.

இப்பொழுது எல்லாம் முடிந்து விட்டது. அவர் தனித்திருந்தார். அவரது நிலங்களை ஒன்றில் ஆற்று வெள்ளம் அரித்துச் சென்றுவிட்டது அல்லது பெற்ற கடனிற்காக வங்கி ஏலத்தில் விற்று விட்டது. நகைகளையும், தளபாடங்களையும் தான். தனது குடும்பத்தின் இழப்பிற்குப் பின்னால், உப்பரிகையை விட்டுக் கீழேயிறங்க அவர் மறுத்து விட்டார். மேலே தான் வாழ்க்கை. 

மஹிம் கங்குலியின் மகனது உபனயன நிகழ்வு அவரது பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. எஞ்சியிருந்த எல்லாவற்றையும் அவர் பார்க்க விரும்பினார். அவரது வெண்ணிறக் குதிரை. அவரது யானை.அவரது இசை அறை. எல்லாவற்றையும் தான். 

அவரது இசை அறை தூசி மண்டிப் போய்க் கிடந்தது. அவரது மூதாதையர்களுடைய படங்களும் தான். அவற்றைப் பார்த்த அந்தக் கணத்தில் அவர் மூன்றாவதும், இறுதியானதுமான ஒரு இசை நிகழ்வை ஏற்பாடு செய்ய மனம் கொண்டார். சொத்துக்களை விற்ற பின் எஞ்சியிருந்த ஒரு சிறு தொகைப் பணத்தைத் திரட்டி அந்த நிகழ்வை அவர் ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்வுக்கு மஹிம் கங்குலியையும் அழைத்திருந்தார். 

நிகழ்வின் இறுதி. இசைக் கலைஞர்களுக்கு பணமுடிப்புக் கொடுக்க வேண்டிய தருணம். மஹிம் கங்குலி இப்போது தனவந்தன். அவர்களுக்கான கௌரவத்தையும், பணமுடிப்பையும் கொடுக்க முனைந்தான். தனது கைத் தடியால் பணமுடிப்பை வழங்க நீண்ட அவனது கரங்களைக் கொளுவித் தடுத்தார் பிஸ்வந்தர் ரோய். தனது பெட்டகத்தில், இறுதியாக எஞ்சிய நாணயங்களைப் பணமுடிப்பாக்கி வழங்கினார் அவர்.

மஹிம் கங்குலியைத் தடுத்துத் தானே பணமுடிப்பை வழங்கியதை அவர் தனது பெரு வெற்றியாகக் கருதினார். கலைஞர்களைப் போஷிப்பது அவர் குடும்பத்தின் பாரம்பரியம். எத்தனை கீர்த்தி மிக்க பாரம்பரியம் அது. அவரது தந்தை, பாட்டன், முப்பாட்டன் என்று தலை முறை தலை முறையாக வரும் உரிமைப் பாரம்பரியம். மஹிம் கங்குலி இப்பொழுது வந்த பணக்காரன். பிஸ்வந்தர் ரோயின் பாரம்பரியம் என்ன? மஹிம் கங்குலியின் பாரம்பரியம் என்ன? பணம் மட்டும் பாரம்பரியத்தைக் கொண்டு வருமா?

அந்த வெற்றி, மஹிம் கங்குலி மீதான குறியீட்டு வெற்றி, தந்த களிபேருவகையினாலும், நம்பிக்கையாலும், நீண்ட நாட்கள் ஏறாதிருந்த அவரின் பிரியத்திற்குரிய குதிரை மீதேறிக் கம்பீரமாக அவர் சவாரி செய்தார். சில நிமிடங்கள் தான். அவரது குதிரையே அவரைத் தூக்கியெறிந்தது. நிலத்தில் விழுந்தவர் பின்னர் எழவேயில்லை.

1958 ஆம் ஆண்டு வெளிவந்த படம். தொழில் நுட்பச் சாத்தியங்கள் மிகக் குறைவான காலம். என்றாலும் கமரா கவிதையொன்றை எழிலுற எழுதிச் செல்கிறது. 

நினைவுகள் கிளறப் பட்டமையால் அவரிடம் எஞ்சியிருந்தவற்றைப் பார்க்க விரும்பி உப்பரிகையிலிருந்து கீழே வருகிறார், பிஸ்வந்தர் ரோய். குதிரையைப் பார்த்தாகி விட்டது. இப்பொழுது யானையைப் பார்க்க வேண்டும். யானை சற்றுத் தொலைவில் நிற்கிறது. அவர் யானையைப் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில், ஒரு வாகனம் யானைக்கு அருகாக எங்கோ செல்கிறது. புழுதியைக் கிளப்பியபடி. அந்தப் புழுதியில் யானை முற்றாக மறைந்து விட்டது. வாகனம் ‘கங்குலி அன் கோ’ என்ற பெயர் தாங்கியபடி உறுமி நகர்ந்து கொண்டிருக்கிறது.

மூன்றாவதும் இறுதியானதுமான இசை நிகழ்வின் முடிவு. மஹிம் கங்குலியைப் பணமுடிப்புக் கொடுப்பதிலிருந்து அவர் தடுத்து விட்டார். அந்த வெற்றிக் களிப்பில் அவர் மதுக் கிண்ணத்தை ஏந்தியிருக்கிறார். அந்த மதுவில் அவரது ஜல்சாகரின் தொங்கு விளக்கினது பிம்பம் தெரிகிறது. அதில் ஏற்றப் பட்டுள்ள மெழுகு திரிகள் முற்றாய் உருகி அணையும் தறுவாயிலுள்ளன. அவரது வாழ்வைப் போல. அவரது செல்வல் போல. அவரது பெருமை போல. அவர் கிலேசமுறுகிறார்.

பிஸ்வம்பர் ரோயின் அரண்மனையிலேயே படமாக்கல் நிகழ்ந்திருக்கிறது. காட்சிப் புலங்கள் அரண்மனையும், அரண்மனையிலிருந்து நோக்கப் படும் இடங்களும் மட்டும் தான். நடிகர்கள் மிகக் குறைவு. வசனங்கள் சிக்கனம். இசை கதையுடன் கவனமாகப் பின்னப் பட்டிருக்கிறது. மின் பிறப்பாக்கியின் சத்தம். நாயின் குரைப்பு, நடன மாதுவின் காற்சதங்கை ஒலி என எல்லாமே கதையுடன் பின்னிப் பிணைந்தவை.

சத்யஜித் ரே என்ற திரைப் பட மேதைமையின் செதுக்கல் இது.

திரையிடலைப்  போலவே அதற்கு முன்னால் நிகழும் அறிமுகக் குறிப்புக்களும், அதன் முடிவில் 30 நிமிடங்கள் நிகழும் கருத்துப் பரிமாற்றங்களும் மிக முக்கியமானவை. சினிமா எனும் மொழியைப் புரிந்து கொள்ள, இரசனையின் ஆழத்தை அதிகமாக்க இவற்றின் வகிபாகம் காத்திரமானது.

உரையாடல் நேரத்தில் பேசப்பட்ட இரண்டு விடயங்கள் மனதில் பதிந்தன.

ஒன்று: சத்யஜித் ரே இப்படத்தை நிலப் பிரபுத்துவத்தின் வீழ்ச்சியைச் சொல்வதற்காக எடுக்கவில்லை. அந்த சமூக அமைப்புடன் இணைந்திருந்த கலைகளையும், கலைஞர்களையும் ஆதரிக்கும் போக்கு, புரவலர் பாரம்பரியம், அற்றுப் போவதைக் கவலையுடன் பதிவு செய்வதாக அவர் தனது பேட்டியொன்றில் கூறியது. ஒரு சமூகச் சூழ்னிலையை நேர்மையாகவும், கலாபூர்வமாகவும் கலைஞன் வெளிக் கொணரும் போது, அதன் வாசகர்கள் தத்தமது நோக்கு நிலைக்கேற்ப, அந்த வெளிப்பாட்டிலிருந்து பலவற்றைப் புரிந்து கொள்கிறார்கள். கலைஞன் நீ இவ்வாறுதான் இப் படைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கோருவதில்லை. அவன் தன்னுடைய நுண்மையான அவதானத்தைக் கலாபூர்வமாக வெளிக் கொணருகிறான். அவ்வளவே.

இரண்டு: கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கூறியதாகப் பகிரப் பட்ட ஒரு அருமையான ஒப்புமை. ஒரு மனைவி விறகு ஈரமாக இருக்கிறது, நெருப்பெரியவில்லை, ஒரே புகை, கண்ணெல்லாம் எரிகிறது என்று புறு புறுத்துக் கொண்டால், ஒரு நல்ல கணவன் கோடாலியைத் தூக்கிக் கொண்டு காய்ந்த விறகு வெட்டப் போவான். மனைவி கணவனை விறகு வெட்டக் கோருவதில்லை. தன்னுடைய யதார்த்தம் குறித்துப் புறு புறுப்பதே அவளது வேலை.

ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் (செப்ரெம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை சனிக்கிழமையாகிவிடும்) இவ்வாறான திரைப்படங்களைப் பார்வையிடலாம். நல்ல கலைத் துவமான படைப்புக்கள் எங்கள் பிரக்ஞையை அகலமாகும்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

பாம்பு தின்ற சிறுமியின் உடன் பிறந்தோர்


அவள் முடி சுருண்டிருந்தது. கண்களில் குழந்தமை தெரிந்தது. மிகவும் யௌவனமாகவிருந்தாள். ஆறு வயதிருக்கலாம். மோனா லிசா போன்றதொரு- பல்வரிசை தெரியாத, உதடுகள் விரியாத - ஆனாலும் சிரிப்பதான முகம். என்றாலும் அவள் புகைப்படமாகவே இருந்தாள். காலம் தன் தழும்புகளைப் பதித்துக் கொண்டிருக்கும் புகைப் படம். சற்றே நடுங்கும் கைகளால் அந்தப் புகைப்படச் சிறுமியை எங்களிடம் தந்தார் கருப்பையா அண்ணன்.

சாந்த புரம். இரணைமடுக் குளத்திற்கும், கனகாம்பிகைக் குளத்திற்கும் இடையே இருக்கும் கிராமம். கிராமத்தின் வரலாறு 1993ம் ஆண்டுதான் தொடங்குகிறது. அதுவரை அது ‘காடு’. ‘பொடியள்’ உருவாக்கிய குடியேற்றம். திருவையாறு, வட்டக்கச்சிப் பகுதிகளில் பண்ணைக் கூலிகளாகவிருந்த, நிலமற்ற மனிதர்களுக்கான குடியேற்றம். இப்பொழுது 1300 குடும்பங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

நாங்கள் கருப்பையா அண்ணருடன் சேர்ந்து பொங்கல் செய்து கொண்டிருந்தோம். உந்துருளி விபத்தில் உயிர் பறிக்கப் பட்ட எமது சகபாடி துரேந்திராவின் நினைவாக, கருப்பையா அண்ணரின் குடும்பத்திற்கு ஒரு கிணற்றைக் கட்டி முடித்திருந்தார்கள் அவனது கிளைச் சகாக்கள். அந்தக் கிணறு தோண்டப் பட்டுப் பல காலமாகியும், கட்டப் படாமையால், அன்றுவரை அந்தக் கிணற்றில் கருப்பையா அண்ணரின் குடும்பம் நீரருந்தியிருக்கவில்லை. இனிமேல் அவர்களால் அந்தக் கிணற்று நீரையே அருந்த முடியும். அன்றுதான் கட்டப் பட்ட கிணற்றைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கவிருந்தோம். அதற்காகவே பொங்கல்.




இப்பொழுது கருப்பையா அண்ணரின் குடும்பத்தில் மூன்று பேர்கள். அண்ணர், அவர் மனைவி, ஒரு மகள். 

பொங்கல் முடியும் தறுவாயில் அண்ணர் சொன்னார் ‘எங்கடை முழுக் குடும்பத்தையும் நீங்கள் எல்லாரும் ஒருக்காப் பாக்க வேணும்”.

‘எங்கடை வீட்டில சாமி அறை இல்லை. குசினிக்குப் பின்னாலை இறக்கியிருக்கிற சாய்ப்பிலை தான் எங்கடை குடும்பம், சாமியள் எல்லாத்தையும் வைச்சிருக்கிறன்’. 

கருப்பையா அண்ணர் அந்தச் சாய்ப்புக்குள் நுழைந்தார்.

அந்தப் புகைப்படச் சிறுமி அவரின் மகள். பாம்பு தின்ற அவரின் கனவு. ‘இந்த இடத்துக்கு முதலில வந்தாக்களில நானும் ஒராள். காடு வெட்டித்தான் வந்தனாங்கள். அப்ப இவவுக்கு ஆறு வயசு. பாம்பு கடிச்சு….”  கருப்பையா அண்ணரின் குரல் தழு தழுத்தது.

தீர்க்கமான பார்வையுடன் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் மற்றவன். புகைப்படத்தில் தான். “இவன் ஏ.எல் எடுத்துப் போட்டு இருந்தவன். வயர்லெஸ்ஸடியில அவங்கடை ஒலிபரப்பு நிலையத்தில வேலை செய்தவன். கிபிரடியிலை……”

மூன்றாமவனும் புகைப் படத்திலிருந்தே சிரித்தான். "தமையன் செத்தவுடனை இவனும் படிப்பைக் குழப்பிப் போட்டுப் போட்டான். முள்ளி வாய்க்காலிலை………”

“இளையவளின்ரை படத்தைக் கொண்டு வாங்கோ”. வீட்டுக்குள் இருந்து கொண்டு வரப்பட்ட அல்பத்திலிருந்து ஒரு படத்தை மெதுவாக வெளியே எடுத்தார். புன்னகைத்தபடி இருக்கும் ஒரு இள நங்கையின் புகைப்படம். சேலை உடுத்திருந்தாள். தோட் பட்டை வரை மட்டும் நீண்டிருந்தது கூந்தல். போரோய்வுக் காலத்தில் வீட்டுக்கு வந்திருந்த போது எடுக்கப் பட்ட படமாக இருக்க வேண்டும். “முள்ளி வாய்க்காலிலை மே பதினாலாம் திகதி மட்டும் நிண்டவள். கண்டனாங்கள். அதுக்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியாது. எல்லா இடமும் தேடினம். முறைப்பாடு செய்தம். கடிதம் கொடுத்தம். இன்னும் தெரியேல்லை”

அவளுடைய படத்தைச் ‘சாமியறைக்குள்’ வைக்க அண்ணருக்கு மனமில்லை. அல்பத்த்திலையே விட்டு விட்டார். வரக் கூடும் என்று நம்புகிறார். ‘அவள் நல்லாப் படமெடுப்பாள்’ அண்ணர் பெருமூச்செறிந்தார்.




இனி அந்தக் கிணற்றில் தண்ணீர் குடிக்க மூன்று பேர் மட்டுந்தான். கருப்பையா அண்ணர், இழப்புகளின் வலியில் ‘சித்தம் அழகியர்’ ஆகிய அவர் மனைவி, கார்மென்ஸில் வேலை பார்க்கும் ஒரு மகள். அல்பத்தில் இருப்பவள் வரலாம். வரவேண்டும் என்று மனதிற்குள் பிரார்த்தித்தோம். பாம்பு தின்றவளும், யுத்தம் தின்றவர்களும் அந்தக் கிணற்று நீரை அருந்தாமலேயே போய் விட்டார்கள். 

சாய்ப்புக்குள் இருந்து வெளியே கால் வைத்தோம். நிலம் கொதித்துக் கொண்டிருந்தது. சூரியன் உச்சியில் இருந்தான். கால் வைக்க முடியாத அளவு கொதிப்பு.