சனி, 15 ஆகஸ்ட், 2015

வாயடைத்துப் போனேன், வராதாம் ஒரு சொல்லும்: சிறுபான்மை-அதிகாரப் பரவலாக்கம் எதிர் தேசம், தாயகம், சுய நிர்ணய உரிமை



அருகருகே இருந்தன எங்கள் வீடுகள். எனது வீடும் பழமையானது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும், அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இதே வீட்டில் தான். என் அயலவனின் வீடும் அவ்வாறானதே. என் குடும்பம் சிறியது. என் அயலவனின் குடும்பமோ மிகப் பெரியது. இரண்டு குடும்பங்களும் நட்புடனேயே, காலா காலமாய் வாழ்ந்து வந்தன. இப்பொழுது அது இறந்த கால நினைவாயிற்று.

திடீரென ஒரு நாள் என் அயலவன் வந்தான். என் வீடும் தன்னதே என்றான். தன் வீட்டிலுள்ள மஹாவம்சத் தோம்பு அப்படித்தான் சொல்கிறதென்றான். தனக்கோ உலகில் வேறெங்கும் வீடுகளில்லை என்றான். எனக்கெனில் ஆறு தாண்டி அடுத்த தெரு சென்றால் உறவுகள் உள்ளனவென்றான். என் வீட்டின் கொல்லையில் தான் சங்கமித்தை குடியிருந்ததாகக் கூறினான்.

நான் மறுத்தேன். பொத்து வாய் என்றான். தன் பெருங்குடும்ப மல்லர்களைத் தடியோடு என் வீட்டைச் சூழ நிறுத்தினான். வாய் திறந்த ஒவ்வொரு பொழுதும் அடி விழுந்தது. 1958, 1977, 1981, 1983….. 

நான் மற்றவர்களை உதவிக்கழைத்தேன். நியாயம் வழங்கக் கேட்டேன். நீ மெலிந்தோன். அவன் வலியோன். மெல்ல மெல்ல உரிமைகளைக் கேள். உன் வீட்டில் நீ இருக்க அவனிடம் அனுமதி கேள். உன் கிணற்றில் கொஞ்சம் தண்ணீர் அள்ளவும் தயவாய்க் கேள். வீட்டு மாமரத்துக் காய்களை அவனுக்குப் பறித்துக் கொடுத்து விட்டு, அவன் சந்தோசமாய் இருக்கும் போது உனக்கும் இரண்டு கேள். நாய் வளர்க்கும் அனுமதி வேண்டாம். அவனைக் கோபப் படுத்தும் என்றார்கள்.

நான் இவற்றை ஏன் கேட்க வேண்டும்? வீடு எனது. கிணறும் எனது. ஆண்டாண்டு காலம் நிழல் பரப்பும் மாமரம் எனது. என் வீட்டை எனக்கே தரவேண்டும். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும், அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இதே வீட்டில் தான். இது என் உடைமை. இது என் உடைமை என்ற படியால், என் உரிமைகளை யாரிடமும் இரந்து பெறத் தேவையில்லை, என்றேன் நான். முதலில் என் உடைமைப் பாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள், என்றேன் உரத்து.

மிதமாக… மிதமாக.. என்றார்கள். 

இந்த வீட்டில் இருக்கும் உரிமையை, தண்ணீர் அள்ளூம் உரிமையை, கனி பறிக்கும் உரிமையை, நாய் வளர்க்கும் உரிமையை, நான் அவனிடம் கேட்டால் அவனே இவ் வீட்டின் சொந்தக்காரன் என்று நானே ஏற்றுக் கொள்வது போலாகுமே? 

வீடே எனது. கிணறும் எனது. கிணற்றின் புனலெனது. மரமெனது, மரத்தின் கனியெனது. என்றேன் மீண்டும் உரத்து.

அவர்கள் என்னத் தீவிரவாதி என்றார்கள். வரட்டுக் கோஷம் போடுகிறேன் என்றார்கள். என் கோரிக்கை வடமொழியில் உள்ளதாகவும் சிலர் சொன்னார்கள். வீடு எனதில்லை என்றார்கள். எனது உரிமைகளைத் தாங்கள் பெற்றுத் தருவதாகச் சொன்னார்கள். தமக்குச் சட்டம் தெரியும் என்றார்கள். என்னை வாய் பொத்தச் சொன்னார்கள். 

தங்கள் சின்னம் வீடு என்றார்கள்.

வாயடைத்துப் போனேன். வராதாம் ஒரு சொல்லும்…..