ஞாயிறு, 17 நவம்பர், 2019

அல்லல் சொன்னக்கால், வாழாங்கிருப்பீர்! வாழ்ந்து போதீரே.

மிகவும் புரிந்துணர்வுடனும், பரிவுடனும், ஒரு வகையில் துயரத்துடனும் இதனை எழுதுகிறேன். 
 
தேர்தல் முடிவுகளின் திசை தெரிந்து விட்டது. ஒருவகையில் தமிழர் தரப்பின் தோல்வி காலக் கோட்டில் முன் தள்ளப் பட்டிருக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், தேர்தலில் மறு தரப்பு வென்றிருந்தால் தமிழர் தரப்பின் தோல்வி வெளித்தெரியும் காலம் சற்றுப் பின்னே தள்ளப் பட்டிருக்கும். அவ்வளவே.
 


ஆனால் இந்தத் தேர்தலில் எமக்குள் நடந்த உரையாடலின் தரம் தான் என்னையும் என் போன்றவர்களையும் துயரத்தில் ஆழ்த்துகிறது. எனையொத்தவர்களின் தலைமுறை வயதளவில் அரை நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தலைமுறை. தமிழர் பிரச்சனையினைப் பாராளுமன்ற முறைமையினூடாக அணுகுவதன் தோல்வியை எங்கள் பதின்ம வயதுகளில் நேரடியாகத் தரிசித்தவர்கள். அதே காலத்தில் முகிழ்த்த போராட்ட வழியையும் அதன் மழலைப் பருவத்தையும், சிறுவப் பருவத்தையும், பின் அது தன் பின்னிளமைக் காலத்தில் அகாலமானதையும் கூட நாங்கள் தரிசித்தோம். எங்களது தலைமுறை விட்ட தவறுகளின் பங்காளர்களாகவும் சாட்சிகளாகவும் இருந்தோம். ஆனால் வேறு வழியில்லை. எங்களுக்கு எந்த முன்னுதாரணங்களும் இருக்கவில்லை. நாங்களே சிந்தித்து, நாங்களே எமக்குச் சரியெனப் பட்டதைச் செய்து, அது பிழைத்தால் அதிலிருந்து கற்று, முன் செல்ல வேண்டியிருந்த அல்லது முற்றுப் புள்ளி வைக்க வேண்டியிருந்த தலை முறை.

ஆனால் உங்களது தலை முறைக்கு ஒரு பெரு வாய்ப்பு  இருக்கின்றது.  எங்களின் தலைமுறை பெற்ற பட்டறிவிலிருந்து முன் செல்வது தான் அது.

  1. அரசியலை அறிவு பூர்வமாக அணுகுங்கள். ஆழமாக அணுகுங்கள். உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, மேலோட்டமான சிந்தனைகளின் பின் சென்று விடாதீர்கள். அரசு வேறு, அரசாங்கம் வேறு. நாடு வேறு, தேசம் வேறு. சிறுபான்மையினம் வேறு, தேசிய இனம் வேறு. இராஜதந்திரம் வேறு, பூகோள அரசியல் வேறு. கொள்கை வேறு, கோரிக்கை வேறு. பகை முரண் வேறு, சிநேக முரண் வேறு. எது எது என்பதைப் பிரித்தறியுங்கள். மிகுந்த தேடலுடன் அரசியலை அணுகுங்கள். வாசியுங்கள், உரையாடுங்கள்.
  2. கண்ணியமாக உரையாடுங்கள். சுத்துமாத்து மந்திரன், சொம்புகள், சைக்கிள் தம்பிகள், குபீர் குமார் போன்ற விளிப்புகள், அதன் பின் இருக்கும் மனநிலை உங்கள் கருத்தை மற்றவர் நோக்கி இம்மியளவும் கொண்டு செல்லப் போவதில்லை. கருத்துக்கள் வார்த்தையளவிலேயே நிராகரிக்கப் பட்டு விடும். மற்றவரை விட நீங்கள் புத்திசாலி என்று நிரூபிப்பதா, அல்லது உங்கள் தரப்புக் கருத்திலுள்ள உண்மைகளையும் கருத்தில் எடுக்கச் சொல்வதா உங்கள் உரையாடலின் நோக்கம்? மீண்டும் கவனியுங்கள்: பகை முரண் வேறு, சிநேக முரண் வேறு. சில வேளைகளில் பார்க்கும் போது நீங்கள் பகை முரணைக் கண்ணியத்துடனும், சிநேக முரணை வக்கிரத்துடனும் அணுகுவது போல் தெரிகிறது.
  3. எமது பிரச்சனையின் தீர்வைத் தேர்தல் அரசியலுக்குள் தேடாதீர்கள். தேர்தல்கள் மூலோபயாக் கூறுகளும் இல்லை, தந்திரோபாயக் கூறுகளும் இல்லை, ஏன் உத்திக் கூறுகளும் இல்லை. அவை வெறும் உசாத் துணைகளே. எண்ணிக்கை அடிப்படையிலான சனநாயச் சட்டகத்துள், இன முரண் துருவமயப் பட்ட நாடுகளில், தேர்தல்கள் தீர்வை நோக்கி நகர்த்தா. அவற்றை நிராகரிக்கத் தேவையில்லை, ஆனால் அவை எமக்கான மையப் புள்ளிகள் அல்ல.
  4. எங்கள் வெற்றி, எமது கூட்டுப் பிரக்ஞை உருவாக்கம், திரளாக்கம், அறவழி, நேரடி சனநாயச் செயற்பாட்டு வடிவங்கள் என்பவற்றில் தங்கியிருக்கிறது. எமது போராட்டத்தின் உரிமையாளர்கள் நாங்கள் மட்டும் தான். பங்கீடுபாட்டாளர்கள் புலம் பெயர் மக்கள், தமிழக மக்கள், முற்போக்கு/விரிபடு  சிந்தனையுள்ள சிங்கள மக்கள், பிராந்திய/ சர்வதேச சமூகம் என்பவை தான். இவற்றில் ஒவ்வொரு தரப்புடனும் ஊடாட்டம் செய்யத் தேவையான தெளிவான வேலைத் திட்டம் எமக்குத் தேவை. புலம் பெயர் செம்புகள், பூகோள அரசியல் வகுப்பெடுக்கும் கோஷ்டி, இந்தியக் கைக்கூலி என்ற சொல்லாடல்களும், நிராகரிப்புகளும் எம்மை ஒரு அங்குலம் கூட முன்னகர்த்தா.
  5. எமது பேரம் பேசும் பலம் சந்தேகத்துக்கிடமற்ற எமது கூட்டுணர்விலும், அணிதிரளலிலும், எமது நியாயங்களை எமது பங்கீடுபாட்டுத் தரப்பினர் மறுக்கவியாலா வகையில் முன் கொண்டு செல்வதிலும் தான் தங்கியிருக்கிறது.
  6. நேரடிச் சனநாயகம் (Direct Democracy), சமூக இயக்கங்கள் (Social Movements), அறவழிப் போராட்ட வழிமுறைகள் (Ways of Non-Violent Struggle) என்பன பற்றி மிகப் பரந்து பட்ட வாசிப்பும், அறிமுகமும், பரிச்சயமும் எம் அனைவருக்கும் தேவை. தேடுங்கள்.

உலகில் அணுகுமுறைகள் தொடர்பாக இரண்டு தெரிவுகள் உள்ளன: விரைவான, எளிமையான ஆனால் பிழையான அணுகுமுறைகள் (Quick and Simple, but Wrong Approaches); மெதுவான, சிக்கலான ஆனால் சரியான அணுகுமுறைகள் (Slow and Complex, but Right Approaches). தெரிவு உங்களது.

என்னையும் ஒரு சொம்புத் தம்பியாக அல்லது சைக்கிள் தம்பியாகக் கருதுவீர்களாயின், "ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக் கால், வாழங்கிருப்பீர் திருவாரூரில் வாழ்ந்து போதீரே” என்று சுந்தரர் வாழ்த்தியதைப் போல வாழ்த்தி விட்டுக் கடந்து செல்வேன். துயரங்களுடன்.

சனி, 19 அக்டோபர், 2019

நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே!


பேசப் பெரிதும் இனியாய் நீயே (பாடல் ஒன்று)

நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே (பாடல் எட்டு)

திருநாவுக்கரசர் தேவாரம், ஆறாம் திருமுறை, திருவையாற்றுத் திருப்பதிகம்.

தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதி. யாழ்ப்பாணப் பல்களைக் கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீடத்தில் நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலம். பேராசான் சிவத்தம்பி  கொழும்புப் பயணத்தின் போது எமது பீடத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தார். 

நாங்கள் (விவசாய பீட மாணவர் ஒன்றியம்) கேட்டுக் கொண்டதற்கிணங்க ’70 ஆண்டு சமதர்ம ஆட்சியின் பின் சோவியத்தின் உடைவு: நாங்கள் கற்க வேண்டியவை’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலை எங்களுடன் நிகழ்த்தினார். 

அதன் பின்னர், நாங்கள் ஒரு சிலர் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, சிரேஸ்ட ஆசிரியர்கள் அறைக்கு (Senior Common Room) எங்களை அழைத்து உரையாடினார். அப்போது அங்கிருந்த வேறு பேராசிரியர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் சக பேராசிரியரைப் பார்த்து நட்பார்ந்த தொனியில் சிவத்தம்பி சொன்னார், ‘உன்னிலை இருக்கிற பிரச்சனை என்னெண்டால், நீ கடைசியாப் படிச்ச புத்தகத்தில உள்ளது தான் சரி எண்டு நம்பிறது தான். எங்களுக்கெண்டு ஒரு நோக்கு நிலை இருக்க வேணும். அது மாறலாம். ஆனால் ஒண்டைவிட்ட ஒரு நாளுக்கு ஒருக்கா அது மாறக் கூடாது. அப்பிடி மாறினால் அது நோக்கு நிலை இல்லை. எங்கடை சொந்த நோக்கு நிலையிலிருந்து, உலக நடப்புகளை விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேணும். அதுகளை விளங்கிக் கொள்ள, விளங்கப் படுத்த முடியேல்லை என்றால், நோக்கு நிலையை இன்னமும் ஆழமாக்க வேணும், அகலமாக்க வேணும்’.

இன்றைய உரையாடல் வெளிகளைப் பார்க்கும் பொழுது, நோக்கு நிலையற்ற ஒரு பெரும் கூட்டமே உருவாகி, உலா வருவது துலாம்பரமாகத் தெரிகிறது. எந்த விடயம் குறித்தும் எந்த விதமான ஆழமான, அறிவு பூர்வமான பார்வை இல்லாது வெறுமனே கருத்துச் சொல்லும் முனைப்பு பீறிட்டுத் தெரிகிறது. வார்த்தையாடல்களில் வன்முறை கொட்டிக் கிடக்கிறது. 
 
‘வா எரும’, ‘அடே வெண்ண’, ‘உன்ரை அளப்பறை’, ‘பொத்திக்கினு கிட’ என்பதெல்லாம் மாற்றுக் கருத்தாளர்களை நோக்கிய சொல்லடிகள். சார்பான கருத்துக்களுக்கு, ‘செம’, ‘மாஸ்’, ‘தூள் கிளப்பிட்ட தல’ என்ற சொல்லாடல்கள். KFC சாப்பாடும், Coca Cola கொப்பளிப்பும் என்ற ‘Life Style’. 
 
இரவல் மொழி, இரவற் சொல்லாடல்கள், இரவல் வாழ்முறை, இரவற் சிந்தனை!

உலக மயமாதலின் மினுங்கற் கலாச்சாரத்தால் சலவை செய்யப் பட்ட மூளையிலிருந்து வரும் மலட்டுச் சிந்தனைகள். தங்களுடைய அறியாமைகளையே தங்களின் பதாகைகளாக உயர்த்திப் பிடிக்கும் அப்பாவித்தனம். சுய சிந்தனையிலிருந்து காயடிக்கப் பட்ட கல்விமுறையும், ஊடகக் கருத்தியல் ஆக்கிரமிப்பும் விளவித்த பரிதாபச் சந்ததி. ‘நுனிப்புல் மேய்வதறிவு’, ‘மின்னுவதெல்லாம் பொன்னே காண்’ இரைந்த படியே (கல்)சொல்லெடுக்கிறது!

நோக்கு நிலை தொலைத்த உலகத்தில், செவிகளைப் பொத்தி, விலகிச் செல்வதை விட வேறென்ன செய்யலாம்?

திங்கள், 7 அக்டோபர், 2019

இல்லாத கறுப்புப் பூனையை இருட்டறைக்குள் தேடுவது


 
இல்லாத கறுப்புப் பூனையை இருட்டறைக்குள் தேடுபவர்களைக் கண்டிருக்கிறீர்களா? 

நாங்கள் தினமும் காண்கிறோம்.

பாராளுமன்ற, தேர்தல் வரையறைகளுக்குள் தீர்வைத் தேடுபவர்கள், சனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிப்பதுதான் தமிழ் மக்களின் முன்னுரிமைகளில் முதன்மையானது என்ற எண்ணப்பாடு கொண்டவர்கள் எனப் பல வடிவங்களிலே இந்தப் பூனை தேடிகளைக் காணலாம்.

இந்தத் தீவின் அரசியல் அடிப்படை குறித்து, வரலாற்றில் இருந்தோ, நடைமுறை யதார்த்ததில் இருந்தோ, சுய புத்தியிலிருந்தோ புரிய முடியவில்லை என்றால் இவர்களை எவ்வாறு வர்ணிப்பது?

தென்னிலங்கைத் தேர்தற் களங்களில், நாங்கள் ஆதரவளித்து வெற்றி வாகை சூடியவர்களும், எங்கள் ஆதரவில்லாமலேயே வெற்றி வாகை சூடியவர்களும் செய்தது ஒன்றே ஒன்றுதான்: பேரினவாத நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் வழுவாது முன்னெடுத்துச் சென்றது தான் அது.

ஜே. ஆரில் இருந்து சந்திரிகாவூடாக மைத்திரி வரை கண்ட அனுபவம் இது.

ஆகவே, நாங்கள் செய்ய வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான்: எங்கள் மக்களைப், பட்டி தொட்டியெங்கும் சென்று, அரசியல் விழிப்புணர்வுள்ளவர்களாக்கி, நாங்கள் எவருமே எண்ணிக்கையடிப்படையிலான 'பெரும்பான்மைச்' சனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை, சரி நிகர் சமானமாக வாழத் தேவையான நிறுவன ஏற்பாடுகள் ஏற்படும் வரை, உங்களால் ஆளப்படுவதற்கு எமது தார்மீகச் சம்மதத்தைத் தர்ப் போவதுமில்லை என்று முரசறைந்து சொல்வது மட்டும் தான்.

இதற்கு அடிப்படைகள் மூன்று: கருத்துருவாக்கம்- கூட்டுப் பிரக்ஞை-திரளாக்கம்

இவற்றிற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதே,மிழ் மக்கள் இத் தீவிலே சரி நிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற வேணவாவுடன், உணர்ச்சிகளுக்கு அறிவுக் கடிவாளம் இட்டு உணர்வுகளாய் மடை மாற்றி, மக்களின் பங்கேற்புடன் ஒரு சமூக அரசியலியக்கத்தைக் கட்டியெழுப்பும் நம்பிக்கையுடன் செயற்பட விழையும் கருத்துருவாக்கிகளினதும், செயற்பாட்டாளர்களினதும் முன்னுள்ள பணி.

ஆகவே தான் சொல்கிறோம், இன்றைய முன்னுரிமை சனாதிபதித்  தேர்தலில் வாக்களிப்பது தொடர்பானதல்ல, மக்களிடம் செல்வதும் அவர்களி அணிதிரட்டுவதுமாகும். 

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்றான் பொய்யா மொழிப் புலவன்.

இது கொல்லாமை குறித்த குறளாயினும், இதன் பின்னால் உள்ள அறம் பன்மைத்துவத்தைக் குறித்து நிற்கிறது, வேண்டி நிற்கிறது.

ஒரு பெரிய மக்கட் திரளினுள் இருக்கக் கூடிய பல உப பிரிவுகள் குறித்தும், அம் மக்கட் திரள் வாழ்ந்து வரும் உயிர்ச் சூழல் குறித்தும், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ அறவொழுக்கத்தைப் பேணல் அம் மக்கட் கூட்டத்தைத் திரளாகப் பேணுவதற்கான முன் நிபந்தனையாகும்.

வேறு வகையிற் கூறுவதானால், ஒரு மக்கட் கூட்டத்தின் அகச் சூழலின் சனநாயத் தன்மையும், பன்மைத்துவத் தன்மையும், அந்தக் கூட்டத்தின் கூட்டுப் பிரக்ஞையை, கூட்டுணர்வை, திரளாக்கத்தை தீர்மானிக்கும் தீர்க்கமான அம்சங்களாகும்.

எனவே, மதம் சார்ந்த, சமூகத் தட்டடுக்குச் சார்ந்த, பொருளாதாரத் தட்டடுக்குச் சார்ந்த, பிரதேசம் சார்ந்த, பாலினம் சார்ந்த எந்தவொரு உப பிரிவும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ அற அடிப்படையிலேயே நோக்கப் பட வேண்டும்.

இது தமிழ் மக்கள் இத் தீவிலே சரி நிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற வேணவாவுடன், உணர்ச்சிகளுக்கு அறிவுக் கடிவாளம் இட்டு உணர்வுகளாய் மடை மாற்றி, மக்களின் பங்கேற்புடன் ஒரு சமூக அரசியலியக்கத்தைக் கட்டியெழுப்பும் நம்பிக்கையுடன் செயற்பட விழையும் கருத்துருவாக்கிகளினதும், செயற்பாட்டாளர்களினதும் முன்னுள்ள பெரும் பணியாகும்.

வியாழன், 6 ஜூன், 2019

அம்ம நாம் அஞ்சும் மாறே


 
திருவாசகத்திலே ‘அச்சப் பத்து’ எனும் பதிகம் உள்ளது. மாணிக்கவாசகர், வெளிப்படையாக எல்லாரும் பயப் படும் விடயங்களில் இரண்டை, ஒவ்வொரு பாடலின் தொடக்கத்திலும் கூறி, அவற்றுக்குத் தாம் அஞ்சவில்லை என வெளிப்படுத்துவார்.

பின்னரான அடிகளில், அவர் முதன்மையானதாகக் கருதும் சில விடயங்களைக் கூறி, அவற்றை உதாசீனம் செய்பவர்களைக் கண்டே அஞ்சுகிறேன் என விளம்புவார்.

தறிசெறி களிறும் அஞ்சேன்
    தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன்
    விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்க ளேத்திச்
    சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால்
    அம்மநாம் அஞ்சு மாறே.  

கட்டுத்தறியிலே பொருந்தியிருக்கும் ஆண் யானைக்கும் அஞ்சமாட்டேன். நெருப்புப் போன்ற கண்களையுடைய புலிக்கும் அஞ்சமாட்டேன்.

மணம் வீசுகின்ற சடையையுடையவனும் தந்தையுமாகிய இறைவனது, தேவர்களாலும் அடைய முடியாத நெருங்கிய கழலணிந்த திருவடிகளைத் துதித்துச் சிறப்புற்று, இன்பமாக இருக்க மாட்டாத அறிவிலிகளைக் காணின்; ஐயோ! நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று. 
 

 

எமது சமூக, அரசியற் சூழ்நிலைகளிலும் நாம் பொதுவாக அஞ்சுகின்ற, வெளிப்படையான அடக்கு முறைகளுக்கு மேலாக, சூட்சுமமாகப் பன்மைத்துவத்துவத்தையும், சரி நிகர் சமானமான சமூக இருப்பையும் கருவறுக்கும் பல நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

அவற்றைக் காணும் பொழுது தோன்றுவது: அம்ம நாம் அஞ்சும் மாறே!