ஞாயிறு, 26 நவம்பர், 2023

நோக்கு நிலை வறுமை

வளங்களின் வறுமை  

கைத்தொழிற் புரட்சிக்குப் பின்னரான காலகட்டத்தில் பௌதிக வளங்களின் போதாமை முன்னிலைக்கு வந்தது. கைத்தொழிற் புரட்சி ஏற்படுத்திய உற்பத்திச் சாத்தியங்களை அடையத் தேவையான பௌதிக வழங்களைப் பெற்றுக் கொள்வதற்காக தத்தமது நாடுகளின் எல்லைகளைத் தாண்டி மேற்கு நாடுகள் படையெடத்தன. குடியேற்றவாதம் தோன்றுவதற்கான காரணங்களில் வளங்களின் பற்றாக்குறையும் ஒன்று.



நேரத்தின் வறுமை 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலகட்டம், கைத்தொழிற் புரட்சியின் பலாபலன்கள் பரந்துபட்ட மக்களை, முக்கியமாக, உருவாகிக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தினரைச் சென்றடைந்த காலகட்டமாகும். சௌகரியமான வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் நுகர்வதற்கு, எழுந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்கம் வேணவாக் கொண்டிருந்தது. இவற்றை நுகர்வதற்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இக் கால கட்டத்தின் பிரதான பற்றாக்குறையாக 'நேரம்' உணரப்பட்டது. தனிமனித வாதத்தின் எழுச்சியும்,  சமுக மேம்பாட்டிற்காக முன்வந்து உழைப்பதும் அருகிப் போக ஆரம்பித்தது. சமுக முன்னேற்றத்திற்காக உழைப்பதுவும், சம்பள அடிப்படையில் மேற் கொள்ளப் பட வேண்டிய 'தொழில்' ஆக மாறியது.

கவனக் குவிப்பின் வறுமை 

தகவற் தொழில் நுட்பப் புரட்சியின் பின்னர், தகவல்களைப் பெற்றுக் கொள்ளல் மிக இலகுவானதாக ஆகியது. தமது பொருட்களையும் சேவைகளையும் விற்பதற்குத் தேவையான தகவல்களை வழங்கி, நுகர்வோரின் கவனத்தை ஈர்க்க அனைவரும் முயன்றனர். மிகையான தகவல்களால் நுகர்வோர் திக்குமுக்காடத் தொடங்கினர். தமது கவனத்தை எங்கே செலுத்துவது என்பது பாரிய பிரச்சனை ஆகியது. எதனையும் ஆழமாகக் கிரகிக்க முடியாமல், தொடு திரையை உருட்டும் போக்கு உருவாகியது. தகவல்களை அர்த்தப் படுத்த முடியாது போயிற்று. கவனக் குவிப்புப் பற்றாக்குறையின் யுகம் உருவாகியது. 


நோக்குநிலை வறுமை 

நேரத்தினதும் கவனக் குவிப்பினதும் பற்றாக்குறைகளின் ஒருமித்த விளைவாக, தகவல்களை அவற்றின் பின்னணி தொடர்பான புரிதல் இன்றி நுகரும் நிலை உருவானது. தொட்டம் தொட்டமான புரிதல் உருவாகியது. ஒரு பகுதி குறித்து மட்டும் அறிந்த அப்பகுதி உள்ளடங்கியுள்ள முழுமை குறித்த புரிதல் அற்ற 'யானை பார்த்த குருடர்கள்' பெருமளவில் உருவானார்கள். முழுமையான கண்ணோட்டம் மிகப் பற்றாக் குறையான பொருளாகியது.


அரசியல், சமூக விளைவுகள் 

இவற்றின் சமூக, அரசியல் விளைவுகள் மிக ஆபத்தானவை. மானிட நலன்களுக்கும், இயற்கைக்கும் எதிரானவர்கள், மக்கள் வேண்டி நிற்கும், ஒரு சிறு மாற்றத்தை வழங்குவதற்குப் போராடும் தரப்பாகத் தம்மை முற்படுத்தி, மக்களின் ஆதரவை வெல்லும் நிலை காணப் படுகிறது. 

பெருவணிக நிறுவனங்களின் நலன்களுக்காகப் பொது மனித நலன்களைப் பலியிடத் தயாராக உள்ளவர்கள், ஏனைய இனங்கள், மதங்கள் தொடர்பான காழ்ப்புணர்வு உள்ளவர்கள், இனப் படுகொலை புரிபவர்கள், இயற்கையைச் சூறையாடுபவர்கள் என எல்லோரும், ஊழலை ஒழிப்போம், அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்போம், பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வருவோம், எனும் மினுமினுப்பான கோஷங்களுடன் மக்கள் ஆதரவைப் பெறுகிறார்கள். 

துண்டு துண்டான புரிதல்களை மட்டும் கொண்ட மக்களினால் அவர்களின் போலிமையை இனங்கண்டு கொள்ள முடிவதில்லை. 

டொனால்ட் ட்ரம்ப், போரிஸ் ஜோன்சன், நரேந்திர மோடி, ஜாவியர் மிலெய், இலங்கையின் ஒட்டு மொத்த அரசியல் வாதிகளின் கூட்டம்  தொடக்கம் அண்ணாமலை, அருண் சித்தார்த் வரை இதுவரை அரசியற் களத்தில் இருப்பதற்குக் காரணம் இந்த நோக்கு நிலை வறுமையே.