வெள்ளி, 28 மே, 2021

இன்றைய மனிதனின் கதை

அவர் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தார். நித்திரை வரவில்லை. மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தார். அதிகாலை ஐந்து மணி. அவருடைய தொழிற்சாலையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் குழம்பிய நித்திரை மீண்டும் வருவதாயில்லை. இந்த மூன்று மாத காலத்தில், தனக்கு ஒருவரும் அழைப்பெடுக்கக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தாலும், 'செட்டி மூட்டையைக் கைவிட்டாலும், மூட்டை செட்டியை விடாது' என்பது போல அழைப்புகள் அவரை விடுவதாக இல்லை. மீண்டும் மனம் பதகளிக்க ஆரம்பித்ததைக் கவனித்தார். கடற்கரையில் சற்றுக் காலாற நடக்கலாம் என்றெண்ணி படுக்கையை விட்டெழும்பி வெளியில் வந்தார் அவர்.

'அவர்' சாதாரண மனிதர் இல்லை. தொழிற் துறையின் முக்கிய புள்ளி. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி. எல்லாம் அவர் சம்பாதித்தது. கடும் உழைப்பு. ஊணுறக்கமின்றி, ஓடி ஓடி உழைத்ததால் எப்பொழுதுமே ஒருவித பதட்டம் அவர் வாழ்க்கையில். அண்மைக்காலமாக பதட்டம், பதகளிப்பு, மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து அவரை ஓரிடத்தில் அமைதியாக இருக்க விடவில்லை. ஏற்கனவே பல 'செல்வந்த நோய்களுக்கு' அவர் சொந்தக்காரர். இப்பொழுதெல்லாம் அவரால் உடல், உளத் தொல்லைகளைச் சமாளிக்க முடியவில்லை.


வைத்தியரிடம் போனார். 'பிரச்சனை உடம்பிலை இல்லை, மனசிலை தான். அது தான் பிறகு உடம்பையும் விடுகுதில்லை. எல்லாத்தையும் ஆரிட்டையும் பாரம் குடுத்திட்டு, மூண்டு மாதமாவது ஓய்வெடுக்க வேணும். இல்லையெண்டால், பிறகு ஒரு மருந்தாலையும் உங்களைத் திரும்ப எடுக்கேலாது' என்று சொல்லிவிட்டார்.

அவரால் அதைக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியவில்லை. என்றாலும் சுவர் இருந்தால் தானே சித்திரம் என்பதுவும் அவருக்குத் தெரியும். எல்லாவற்றையும் நம்பிக்கைக்குரியவர்களிடம் பொறுப்புக் கொடுத்தார். மூன்று மாதங்களுக்குத் தன்னைத் தொலைபேசியில் கூட அழைக்கக் கூடாது என்று சொன்னார். ஒரு குட்டித் தீவின் உல்லாச விடுதியில் இடமெடுத்தார். எந்தவொரு வெளித்தொல்லையும் இல்லாமல் அமைதியாக இருப்பதற்காக வந்துவிட்டார்.  ஆனால் மூட்டையோ செட்டியை விடுவதாயில்லை.

விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில், கடலின், காற்றின் அமைதியையும், குளிர்மையையும், அனுபவிக்க முயன்று கொண்டு, கடற்கரை மணலில் கால் புதைய நடந்தார். சற்றுத் தொலைவில், ஒரு புகையோவியமாக ஒரு மனிதன் தன் கட்டு மரத்திலிருந்து கறையிறங்கிக் கொண்டிருப்பதையும் அவர் கண்டார். ஒரு கிராமத்து மனிதனுடன் பேச்சுக் கொடுப்பது சிலவேளை தன் சொந்தப் பதட்டங்களிலிருந்து தப்ப உதவக் கூடும் என நினத்தார். அவனை நோக்கி நடந்தார். கிட்ட வரும்போது, அவன் தான் பிடித்த மீன்களை ஒரு பனையோலைக் கூடைக்குள் போட்டுக் கொண்டிருந்தான்.


"தம்பிக்கு இண்டைக்கு நல்ல பிடி போலை? ச்சா.., நல்ல பெரிய மீன்கள், என்ன?

"ஓமையா. வழமையாவும் இப்பிடித்தான். இந்தக் கடலின்ரை புண்ணியத்திலை, எனக்கு ஒவ்வொரு நாளும் பிழையில்லாத பிடிதான்"

"எத்தினை மணிக்குக் கடலுக்கை போனனியப்பு?"

"ஒரு மூண்டு மணித்தியாலம் கடலுக்கை நிண்டனான் ஐயா"

"இந்த மீனை இண்டைக்கு என்ன செய்யப் போறாய்?"

"ஊருக்கை ஒரு சந்தை இருக்கு. அங்கை விப்பன். பிறகு மளிகைச் சாமான்கள், வேறை ஏதாவது தேவையெண்டால் அதுகள் எல்லாத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டை போவன்"

"பிறகு?"

"பிறகென்ன? மனிசி சமைக்கும். பிள்ளையள் பள்ளிக் கூடத்தாலை வருவாங்கள். எல்லாரும் இருந்து சாப்பிடுவம்"

"பிறகு?"

"எல்லாரும் ஒரு சின்ன நித்திரையடிப்பம். பின்னேரம் எழும்பித் தேத்தண்ணி குடிப்பம். பிள்ளையள் விளையாடப் போவாங்கள். நானும் மனிசியும் இன சனம் வீட்டை போவம். சிலவேளை கோயிலிலை ஏதாவது வேலையிருக்கும். எல்லாரும் சேந்து செய்வம். சில வேளை பள்ளிக்கூடத்திலை சிரமதானம் மாதிரி ஏதாவது இருக்கும். ஊருக்குள்ளை கலியாணம் கார்த்திகை எண்டால், போய்ப் பந்தல் போடுவம். பலகாரம் சுடுவம். ஒரு நாளைக்கு ஒரு மாதிரி. சிலவேளை அண்ணாவியாரிட்டைப் போய்க் கூத்துப் பழகுவன். திருவிழாக் காலமெண்டால் வருசா வருசம் கூத்துப் போடுவம். சீசனுக்கு ஒரு மாதிரி."

"டவுன் சந்தையில மீனைக் கொண்டு போய்க் குடுத்தால் கூட விலைக்குக் குடுக்கலாம் தானே?"

" ஓம் ஐயா. கொஞ்சம் கூடக் காசு கிடைக்கும். ஆனா என்ரை குடும்பத்துக்கு இது காணும். அது வீண் அலைச்சல். அங்கை போட்டு வந்தால், பின்னேரம் ஒண்டும் செய்யேலாது."

"அங்கைதான் நீ பிழை விடுறாய் தம்பி. நான் சொல்லுறதைக் கேள்"

"சொல்லுங்கோ ஐயா"

""நாளேலையிருந்து நீ டவுன் சந்தைக்குப் போ. கூடக் காசு கிடைக்கும். அதை மிச்சம் பிடி. கொஞ்ச நாளிலை இந்தக் கட்டு மரத்தை விட்டிட்டு ஒரு போட் வாங்கு. இன்னும் நிறைய மீன் படும். இன்னும் காசு வரும். அதையும் மிச்சம் பிடி. நலைஞ்சு போட் வாங்கு. அள்ளு கொள்ளையா மீன் படும். மீனைச் சும்மா கொண்டு போய் விக்காமல், ரின் மீனாக்க ஒரு கொம்பனி போடு. எல்லா இடமும் அனுப்பு. ஒவ்வொரு டவுனிலையும் ரின் மீன் கடை போடு. நிறையக் காசு வரும். டவுனிலை ஒரு மாடி வீட்டைக் கட்டு. கார் வாங்கு"

"இதுக்கெல்லாம் எவ்வளவு காலமையா செல்லும்?"

"ஒரு முப்பது வரியம். இன்னும் கொஞ்சம் சோறு தண்ணி பாராமல் உழைச்சால், இருபத்தைஞ்சு வரியம்"

"அதுக்குப் பிறகையா?"

"அதுக்குப் பிறகுதான் சங்கதியே இருக்கு. உன்ரை கொம்பனியை பங்குச் சந்தையிலை போடு. பங்குகளை வில். கோடி கோடியாக் காசு வரும். அதை பாங்கில போடு. ஊருக்கு வா. வாழ்க்கையை நிம்மதியா அனுபவி"

"எப்பிடி ஐயா அனுபவிக்கிறது?"

"நீயும மனிசியும் இன சனம் வீட்டை போகலாம்....... கோயிலிலை ஏதாவது வேலையிருந்தால், எல்லாரும் சேந்து செய்யலாம்........பள்ளிக்கூடத்திலை சிரமதானம் செய்யலாம்........ ஊருக்குள்ளை கலியாணம் கார்த்திகை எண்டால், போய்ப் பந்தல் போடலாம்.......... பலகாரம் சுடலாம்......... அண்ணாவியாரிட்டைப் போய்க் கூத்துப் பழகலாம்......... திருவிழாக் காலமெண்டால் வருசா வருசம்......."

((மகிழ்வை நாடித் திரவியம் தேடி, திரவியத் தேடலில் மகிழ்வைத் தொலைத்த இன்றைய மனிதர்களின் கதை. திமொதி பெரிஸ் எழுதிய 'நான்கு மணி நேர வேலை வாரம்' (The 4 Hour Work Week by Tim Ferris) என்ற நூலில் எடுத்தாளப்பட்ட ஒரு கதை. மொழியாக்கமும், உள்ளூராக்கமும், கண்ணன் செங்கோடன்)


புதன், 19 மே, 2021

இலைகளின் நடனம் அல்லது அரசியலும் அப்பாவியும்


 

காற்று தன் வழி போக
இலையொதுக்கிப் போகிறது.

இலைகளின் நடனத்தை
இரசித்தேன் நான்.

காற்றை நான் கண்டிலேன்.

எவரும்.

நுகர்வு சூழ் உலகு


 


 

கவிஞ;
கவி நுகர்ந்தேன்,
நெக்குருகிப் போனேன்,
விழியோர நீர் துடைத்தேன்.

என்றாலும் சற்றே நில்.
அறிவாய் நீ,
இரு விடயம்
மட்டும் தான்.

ஒன்று;
சாதியிரண்டொழிய வேறில்லை
வாங்குவோர் பெரியோர்,
விற்போர் மிகப் பெரியோர்,
இப்பொழுதின் பட்டாங்கில் உள்ளபடி.

உன் 'பண்டம்' என்ன விலை?

இரண்டு;
"சொல்ல வெட்கமே;
எனினும் சொல்லாமலும் போக
ஒண்ணாதிருக்கிறது.
ஓம் அந்தப் 'பட்டாங்கில்'
உன்னாணை நானுமொரு
'கை நாட்டுப்' போட்டதுண்மை*.

* நீலாவணனின் 'பாவம் வாத்தியார்' கவிதை வரிகள். பெட்டிசம் பட்டாங்காகவும், கையெழுத்து கை நாட்டாகவும் மாற்றப் பட்டிருக்கிறது.


நீரோக்களால் நிறைந்திருக்கும் உலகு


 நீரோக்களால் நிறைந்திருக்கிறது உலகு
புதிய புதிய பிடில்கள்.
வாசித்து எறியப் பட்டுக்கொண்டிருக்கும்
பிடில்களின் குவியலுக்குள்ளிருந்தும்
கிளம்புகிறது நீரோக்களின் இசை.

கொரோணாபுரி எரிந்து கொண்டிருக்கிறது.

'உங்கள் மகிழ்ச்சியைப்
பின் போடாதீர்கள்,
கடன் பட்டும் நுகருங்கள்'
நுகர்வே நித்தியம், நுகர்வே இலட்சியம்'
வங்கியின் நீரோ இசைக்கிறான்
கழுத்துப் பட்டியைச்
சரி செய்தபடி.

கர்ப்பிணிப் பெண்களும்
பணியிடம் வந்தால் மட்டுமே
விற்பனை இலக்கு வசப்படும்
என்கிறான் கோர்ப்பரேட் நீரோ.

'இந்த மாத இலாப இலக்கை அடைந்தவர்
பெரியோர்; அற்றார் இழிந்தோர்'
புலனத்தில் கணந்தொறும்
இசைக்கிறான் இன்னொருவன்.
கரவொலித்துக் கொண்டிருந்தார்கள்
பணியாளர்.

உயிர்க் குமிழியில் சுற்றுலாவலாம்
என்கிறான் ஒருவன்.

பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லை;
முடக்கம் இல்லை அமைச்சரே,
என்கிறான் அரச நீரோ.

வைத்தியசாலைக் கட்டிலின்
விளிம்பில் நீரோக்களின் இசைக்குத்
தன்னை மறந்து தாளம் இடுகிறான்
மூச்சுக்குப் போராடும் ஒருவன்.

தன்னிலை அறியா
மனிதரின் தேசத்தில்
நீரோக்களின் இசை
தேசிய கீதமாக்கப் படுகிறது.





கண்ணீரின் உப்பு

 


 
மின்னழுத்தப் பட்ட சீருடை
அடங்க மறுக்கும் தொந்தி
தடுப்பரணில் கையூன்றி நிற்கிறான்
காக்கி அணிந்தவன்.
 
கனவுகளையும் உறவுகளையும்
தொலைத்த மண்ணில்
ஒரு சொட்டுக் கண்ணீர் விடவும்
முடியாதெனச் சொல்கிறான் அவன்.
 
அவன் கண்ணீர்த் துளிகளை அஞ்சினான்.
குவேனியின் சாபமாய் அவை துரத்தும் என,
ஒரு நாள் அவை வெடிக்கும் என,
அவன் அஞ்சினான்.
அவை அவனைப் பயமூட்டின.
பயம் வெறுப்பை விதைக்கிறது.
 
கண்ணீரை நிறுத்தக்
கைத்துப்பாக்கி போதும் எனவும்
அவன் நம்பினான்.
 
குந்தியழுத மனிதரின் கண்ணீர்
மண் வீழ்கிறது, தடுப்பரணின் அப்புறத்தில்.
யுகங்களாய் வீழும் கண்ணீரில்
உப்புக் கரிக்கிறது மண்.
 
ஒரு புன்னகையின் அல்லது நேசக் கரத்தின்
ஈரத்தில் கரையும் உப்புத்தான்.
என்றாலும் ஈரமிருக்கவில்லை.
 
சப்பாத்துக் கால்களின் கீழ்
ஈரமிலாத் தணலெறிவில்
கொதித்துக் கிடக்கிறது மண்.
 
கரைவதற்கு விதியற்று
நிலச் சூட்டில்
வெடிப்பதற்காய் வீழ்கிறது
கண்ணீரின் உப்பு.

இருளேந்தி நினைவேந்தல்

 






இருண்மையின் புதல்வர்கள்
சுடருக்கஞ்சித் தெருவெங்கும்
துவக்கோடு திரிந்தனர்,
ஆயிரமாய்.
 
'கடல் மணலைப் போல
சிதறடிக்கப் பட்ட தலைமுறை'
வீழ்ந்த முற்றமெங்கும்
கங்குல் கிழித்துச்
சுடரெழுந்தது.
 
மனங்களில் விதைக்கப்பட்டது
நினைவுகளும், ஒளியும்,
அழிக்கப் பட்ட கனவுகளும்.

ஆறு மனமே ஆறு

 

தமிழ் மக்களின் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள்: Universe is Actually a 'Multiverse'

1. தமிழ் மக்களுக்குப் பிரச்சனையே இல்லை. சிங்கள மக்களுக்குத் தான் மற்றைய இனத்தவர்களால் பிரச்சனை. சிங்கள மக்களுக்கு இவ்வுலகில் இலங்கை மட்டும் தான் நாடு. 'மற்றவர்களுக்குப்' போகப் பல நாடுகள் உண்டு. தமிழ் மக்கள் பேசுவது 'இனவாதம்'
 
2. தமிழ் மக்களுக்கெனத் தனியான பிரச்சனைகள் இங்கு இல்லை. எல்லா இனச் சமூகங்களினதும் அடித்தட்டு மக்களுக்குத்தான் பிரச்சனை. எனவே இனத்துவம் சார்ந்து போராடாது வர்க்கம் சார்ந்து பேராட வேண்டும். இதனை மறுப்பவர்கள் 'இனவாதிகள்'
 
3. தமிழ் மக்களுக்கெனத் தனியான பிரச்சனைகள் இங்கு இல்லை. இன அடையாளம் நவீன உலகில் தேவையற்றது. மனிதம் எனும் ஒரு புள்ளியில் இணந்து, இருக்கின்ற கட்டமைப்புகளுக்குள்ளேயே பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
4. தமிழ் மக்களுக்குப் பிரச்சனைகள் உண்டு. அவை அபிவிருத்திப் பிரச்சனைகளே. சிங்களத் தரப்போடு முரண்பட்டால் அவர்கள் 'எங்களை அபிவிருத்தி செய்ய' மாட்டார்கள். எனவே, அவர்களுடன் முரண்படாமல், அவர்களைப் புண்படுத்தாமல் 'அவர்கள் எங்களை அபிவிருத்தி செய்ய' இணைந்து பயணிப்போம். ஆளுபவர்கள் எவரானாலும் நாங்கள் அவர்கள் பக்கம் நிற்பதே 'செயப்படு பொருள்'.
 
5. தமிழ் மக்களுக்கு இனத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனைகள் உண்டு. அவற்றை நாங்கள் பக்குவமாகக் கையாண்டு தீர்த்து வைக்கிறோம். எங்களைத் தெரிவு செய்து விடுவதுடன் மக்களின் பணி முடிந்தது. நாங்கள் பாரளுமன்றம், நீதி மன்றம் எனப் பல இடங்களிலும் 'பேசிப் பறைந்து' சிங்கள மக்களையும், அரசையும் புண்படுத்தும் என நாங்கள் கருதும் எவற்றையும் சொல்லாமல் ஒழித்து வைத்து இதைச் செய்வோம். கடந்தகால வரலாற்றையும் எமது நிலைப்பாட்டிற்கமையப் 'பொருள் கோடல்' செய்வோம். 'மக்களை உசுப்பேத்த வேண்டாம்'. அரசியல் என்பது சாணக்கியர்களதும், ஜாம்பவான்களதும் தொழில். அதனை எங்களிடம் விட்டு விடுங்கள்.
 
6. தமிழ் மக்களுக்கு இனத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனைகள் உண்டு. அப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தார்மீகப் பலத்தைத் தருவது மக்களின் ஆதரவும், நேரடி அரசியற் பங்களிப்பும். மக்களை அரசியல் மயப்படுத்தி (கட்சி மயப் படுத்தி அல்ல), அணி திரட்டி, கொள்கைகளையும் கோரிக்கைகளையும் தெளிவாக உயர்த்திப் பிடித்து அதனூடாக வரும் தார்மீகப் பலத்தில் நீதியான தீர்வைக் கோருவதே எமக்கான வழி.
 
இந்த நிலைப்பாடுகளைக் கொண்டவர்களில், நிலைப்பாடுகள் 1-3 ஐ நம்புபவர்கள் தங்களைத் தமிழ்த் தேசியவாதம் சார்ந்து அடையாளப் படுத்துவது இல்லை.
 
நிலைப்பாடுகள் 4-5 ஐ நம்புபவர்கள், தங்களை (தங்களை மட்டும் தான்) தமிழ்த் தேசியத்தின் காவலர்களாகக் கருதிக் கொள்கின்றனர். 
 
ஆறாவது நிலைப்பாடு இன்று வரை மிகக் குறைந்தளவு நடைமுறைப் படுத்தலுடன், ஏனைய அனைத்து நிலைப்பாடு உள்ளவர்களினதும் மூர்க்கத்தனமான எதிர்ப்புடன், உயிர் பிழைத்திருக்கிறது.

எதை எழுதுவது?


ஒவ்வொரு கணமும் இலட்சக் கணக்கான எழுத்துக்கள் எழுதப் படுகின்றன. வார்த்தைகள் பேசப் படுகின்றன. காண்பியங்கள் படைக்கப் படுகின்றன. எல்லாம் மிகையாகவே நிகழ்வதாகத் தோன்றுகிறது. எழுதப் படுபவை எல்லாம் வாசிக்கப் படுகின்றனவா? பேசப்படுபவைகள் எல்லாம் கேட்கப் படுகின்றனவா? படைக்கப் படுபவை எல்லாம் பார்க்கப் படுகின்றனவா? சிந்திக்கப்படுபவை, வெளிப்படுத்தப் படுபவை எல்லாம் குரல்களாய் (Voice) பரிணமிக்கின்றனவா? அல்லது இரைச்சல்களாய் (Noise) அசௌகரியப் படுத்துகின்றனவா? இவற்றால் அறிதலும், புரிதலும், தெளிதலும், தேர்தலும் நிகழ்கின்றனவா? இல்லையென்றால் எவற்றைச் சிந்திப்பது, எவற்றைத் தெரிவிப்பது, எழுதுவது? பேசுவது?

எமது தேசத்தின் சமகாலத் தமிழ் ஊடக வெளியை நோக்கும் போது இவ்வாறான கேள்விகள் மனதில் எழுவது தவிர்க்க முடியாததாகிறது. அச்சு, ஒலி, ஒளி, சமூக, மின்னியல், மெய்நிகர் ஊடகங்கள் உள்ளடங்கிய ஒட்டு மொத்தத் தமிழ் ஊடகப் பரப்பின் இன்றைய நிலையும் குரல்களால் அன்றி இரச்சல்களால் நிரம்பியிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.


*    *    *

"பத்திரிகை என்பது ஒரு கூட்டுப் பிரசாரகனும், கூட்டுக் கிளர்ச்சியாளனும் மட்டுமல்ல, அது ஒரு கூட்டான அமைப்பாளனுமாகும். இவ்விடயத்தில் கட்டப் பட்டு வரும் ஒரு கட்டடத்தைச் சுற்றி எழுப்பப்படும் சாரக் கட்டுக்கு (Scaffolding) அதை ஒப்பிடலாம். அது கட்டடத்தின் உருவரைகளைக் காடுகிறது. கட்டுமானத் தொழிலாளர்களிடையே தொடர்பிற்கு வசதி செய்கிறது. வேலைகளைப் பங்கிட்டுக் கொடுக்கவும், தமது ஒழுங்கமைந்த உழைப்பால் சாதிக்கப் பட்ட பொதுவான விளைவுகளைப் பார்க்கவும் இடமளிக்கிறது." இந்த மேற்கோள் சோவியத் புரட்சிக் காலத்திலே, புரட்சிப் பாவலன் லெனினால் கூறப் பட்டது. ஒரு கட்சிப் பத்திரிகையின் வகி பாகம் குறித்த உரையாடலின் ஒரு பகுதியாக அது அமைந்திருப்பினும், தன்னை ஒழுங்கமைத்து, புத்தி பூர்வமாகச் செயற்பட வேண்டிய நிலையிலுள்ள ஒரு சமூகத்திற்கும் அது சாலப் பெருத்தமாய் அமைந்திருக்கிறது.


*    *    *

எமது சமூகம் தனது செல்நெறியைத் தீர்மானிக்க வேண்டிய, வரலாற்றின் தீர்மனகரமான சந்தியில் இன்று நிற்கிறது. ஆனால் அது தீர்மனகரமானதாக அன்றித், திகைத்து நிற்கும் நிலையிலேயே இன்றிருக்கிறது. அதனுள்ளிருந்து அறிவார்ந்த, ஞானமிக்க, திசை காட்டும் குரல்கள் எழவில்லை. மாறாக உளறல்களும், ஊளையிடலும் கலந்த இரைச்சல்களே அதனுள்ளிருந்து எழுகின்றன. இந்தச் சமூகம், தீர்மானகரமான வரலாற்றுச் சந்தியில், தனது சவக் குழியைத் தானே தோண்டத் தூண்டும் ஒரு பாதையில் செல்ல வேண்டும் என்று விரும்பும் குரல்கள் எதிர் முகாம்களிலிருந்து தெளிவாகவும் தீர்மானகரமாகவும் ஒலிக்கின்றன. அவற்றின் எதிரொலி, இந்தச் சமூகத்தின் இருட்டறைகளின் சுவர்களில் பட்டுத் தெறித்து, உள்ளொலி போல இரச்சல்களை மீறி ஒலிக்கிறது. அந்தப் பாதையும், மலர் வனங்கள் அணி செய்ய, கனத்த உருளையிட்டுச் செப்பனிட்ட 'காப்பற்' வீதி போல உருமறைந்து காத்திருக்கிறது.


*    *    *

எமது சமூகம் இப்பொழுது எவ்வகையான சூழமைவுகளின் பின்னணியில் இருக்கிறது?

அதன் உடனடுத்த புறச் சூழ்நிலை இனத்துவ முரண்பாடுக் கூர்மை காரணமாகத் துருவமயப் பட்டுப் பகை நிலையடந்த, அரசியல்-சமூக-பொருளாதார ஏற்பாடுகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதிலிருந்து எமது நிலம்/ஆள்புலம்-பொருளாதாரம்-ஒருமித்த மனவுணர்வு என்ற மூன்று பிரதான தளங்களைக் குறிவத்து தொடர்ச்சியான சிதைப்பு நடவடிக்கைகள் ஏவிவிடப் படுகின்றன. அரசியலமைப்பு-சட்டம்-அரச நிர்வாகம்- முப்படைச் செயற்பாடுகள்-ஊடக/கருத்தியற் செயற்பாடுகள் எனச் சகலவிதமான வழிமுறைகளினூடாகவும், இந்த மூன்று இலக்குப் பகுதிகளும் தொடர்ச்சியாகத் தாக்கப் பட்டு வருகின்றன.

அதனையடுத்த புறச் சூழ்நிலை, பூகோள அரசியற் போட்டிகளால் கடமைக்கப் பட்டுள்ளது. எமக்கான தெரிவுகள் மட்டுப் படுத்தப் பட்டு, பூகோள அரசியற் போட்டியில் எதாவதொரு தரப்பின் பகடைக் காய்களாக மட்டும் இருப்பது அல்லது முற்றாகப் புறமொதுக்கப் பட்டு, குரலற்றதொன்றாய் நசுங்கிக் கிடப்பது என இரு தெரிவுகள் மட்டும் முன் தெரியும் ஆபத்தான இன்னுமொரு புறச்சூழற் பரிமாணமும் எம்மைச் சூழ்ந்துள்ளது.

எமது அகச் சூழலோ, புறச் சூழலை விட மிகவும் அபாயகரமானதாகத் தெரிகிறது. சமூகம்-பொருளாதரம்-அரசியல்-பண்பாடு என அனைத்து வாழ்வியற் தளங்களிலும், அறம் பிறழ்ந்த, நெறிமுறை தவறிய, 'நாட்டு மிராண்டிகளாய்' படிப்படியாக, ஆனால் உறுதியாக நாங்கள் மாறிவருகிறோம்.எங்களிற் பெரும்பான்மையோர் இந்தத் தற்சிதைவில் ஈடுபடுபவர்களாகவோ, ஊக்கமளிப்பவர்களாவோ மாறி வருகின்றனர். இன்னுமொரு வகுதியினர், இது குறித்த எதுவிதக் கரிசனையுமற்று, தனித்துத் தப்பித்தல் அல்லது புறமொதுங்கல் எனும் உத்திகளைக் கைக்கொள்ளும் தரப்பினராகவுள்ளனர். சமூக நலன் குறித்துக் கரிசனை கொள்பவர்களைப் 'பிழைக்கத் தெரியாதவர்கள்' என நகைத்தபடி முத்திரை குத்திச் செல்கிறது இந்தக் 'கெட்டிக்காரத் தரப்பு'.

*    *    *

இந்தப் பேரவலமான நிலையிலிருந்து தன்னை விடுவித்துத் திகைப்பிலிருந்து மீண்டு தீர்மானகரத்தை நோக்கிச் செல்ல வேண்டுமெனின் எமது சமூகத்திற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது. தன்னைச் சூழ நிகழ்பவற்றைப் பூரணமாக அறிதல், அவற்றின் அர்த்தங்களையும், விளைவுகளையும் தெளிவாகப் புரிதல், தான் எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தெளிதல், அங்கு செல்வதற்கு இருக்கும் வழிகளைச் சீர்தூக்கிப் பார்த்துப் பொருத்தமானதைத் தெரிதல், தெரிந்தெடுத்த பாதையில் தன்னைத் திரட்டிப் பயணித்தல், என்பது தான் அது.


இதன் பின்னணியில் எமது ஊடகங்களின் பணி எவ்வாறானதாக அமைய வேண்டும்?

ஒரு சமூகத்தைப் பாதிக்கும், அதன் வாழ்வியலில் செல்வாக்குச் செலுத்தும் அனைத்துத் தளங்களிலும் நிகழும் சிந்தனைகளையும், உரையாடல்களையும், செயற்பாடுகளையும் தெளிவாக வெளிக்கொணர்ந்து அறிக்கையிடல் ஊடகங்களின் முதலாவது பணி. ஒரு சமூகம் தன்னைச் சூழ நிகழும் அனைத்தையும் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும். காய்தல் உவத்தல் இன்றி, ஊடக அறத்தின் பால் நின்று, தெளிவாகவும் சரியாகவும் அறிக்கையிடல் ஊடகங்களின் ஆரம்பப் பணி, அடிப்படைப் பணி.


அறிக்கையிடலுக்கு அடுத்த படி சென்று, அவற்றின் அர்த்தங்கள் என்ன? அவை சமூகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும் என்பவை குறித்த உரையாடல்களுக்குக் களம் அமைப்பதுவும், அவற்றின் வெளிப்பாடுகளைப் பரவலாக்கம் செய்வதும் ஊடகங்களின் இரண்டாவது பணி. செய்திகளை வெறும் தகவல்களாகக் (Information) குறுக்காது அவற்றைத் தொகுத்தும் பகுத்தும் ஆய்வு செய்து உள்ளொளி (Insight) வழங்கும் கண்ணோட்டங்களை உருவாக்குவதும் ஊடகங்களின் பணிதான்.


ஒரு சமூகம் தன்னை எவ்வாறதானதாய் மாற்றிக் கொள்ள விரும்புகிறது? இங்கிருந்து எங்கே செல்ல விரும்புகிறது? அது அடைய விரும்பும் மாற்றத்திலும், அதற்கான பயணத்திலும், அந்தச் சமூகத்தினுள்ளும், அதனை சூழவும் நிகழ்பவை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? சாதகமான தாக்கங்களை எவ்வாறு பயன்படுத்துக் கொள்வது? பாதகமானவற்றை எவ்வாறு தவிர்ப்பது? மாற்றம் நோக்கிப் பயணிப்பதற்கு எவ்வாறான தெரிவுகள் உள்ளன? அவை விரும்பத் தக்கவையா? அவ்வாறாயின் சாத்தியப் படுத்தத் தக்கவையா? எனபவை குறித்து ஒரு சமூகம் சதா சர்வ காலமும் உரையாட வேண்டும். உரையாடல்களின் அடிப்படையில், தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காகத் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கான உந்து சக்தியாகவும், களமாகவும் தளமாகவும் ஊடகங்களே இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதுதான் ஊடகங்களின் மூன்றாவது பணி.


தனது உரையாடல்களின் வழி மேற்கொள்ளப் பட்ட தெரிவுகளின் அடிப்படையில் ஒரு சமூகம் செயற்படவும் வேண்டும். தான் அடைய விரும்பும் மாற்றத்திற்கான செயற்பாடுகளிலும் சமூகம் இடையறாது ஈடுபட வேண்டும். அவ்வகையான செயற்பாடுகளுக்கு உந்துதலாகவும், செயற்பாடுகள் குறித்து வெகுசனங்களுக்கு விளக்கமளிக்கும் களமாகவும், அவை குறித்த வெகுசனங்களின் பிரதிபலிப்புகள், பின்னூட்டங்களை வெளிப்படுத்தும் ஊடகங்களாகச் செயற்படுவதும் ஊடகங்களின் நான்காவது பணி.


*    *    *

வரலாற்றின் பெருஞ்சந்தியில் திகைத்து நிற்கும் ஒரு சமூகம் தீர்மானகரமானதான ஒன்றாக மாற வேண்டுமெனின் அச் சமூகத்திற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. **தன்னைச் சூழ நிகழ்பவற்றைப் பூரணமாக அறிதல், அவற்றின் அர்த்தங்களையும், விளைவுகளையும் தெளிவாகப் புரிதல், தான் எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தெளிதல், அங்கு செல்வதற்கு இருக்கும் வழிகளைச் சீர்தூக்கிப் பார்த்துப் பொருத்தமானதைத் தெரிதல், தெரிந்தெடுத்த பாதையில் தன்னைத் திரட்டிப் பயணித்தல்** என்பதுதான் அது. அச் சமூகம் அவ்வழியிற் செல்வதற்குத் தேவையான அறிவு-புரிவு-தெளிவு-தேர்வு என்பவற்றை அடைவதற்குக் களமமைத்து, உந்துதலையும், ஆற்றுப் படுத்தலையும் வழங்கி கட்டுமானச் சாரங்களாக (Scaffolding) விளங்கும் வரலாற்றுக் கடமை ஊடகங்களுக்கு உண்டு. ஊடகங்களும், ஊடகர்களும் எதை எழுதுவது? என்பதைத் தீர்மானிக்கட்டும்.  

 

(தமிழ் சிவில் சமூக அமையத்தின் இரு திங்கள் இதழான புலரி இதழின், மார்ச்-ஏப்பிரல் 2021 பதிப்பில் வெளிவந்த எழுத்துரு)

பிச்சா பாத்திரம்

 

பிச்சா பாத்திரம்
 
அவர்கள் வந்தார்கள்
நாங்கள் அழையாமல்.
 
செந்நெல் மா
தெங்கின் வெண் துருவல்
சேர்ந்தவிந்த வாசத்தில்
நிறைந்திருந்தன எமது
பாத்திரங்கள்.
 
பறித்தெறிந்து,
'பிச்சா' பாத்திரத்தைக்
கை திணித்த பின்னர்
பிரகடனம் செய்தார்கள்
'நாங்களே உங்கள் மீட்பர்கள்'
 
(யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொறுபதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ, நவீனம் தெரியாமல் பிட்டு மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தவர்களுக்கு தாங்களே 'பிஸா' (Pizza) உணவை அறிமுகப் படுத்தியதாக நீதிமன்றில் சொல்லியிருந்தார்)