புதன், 16 டிசம்பர், 2015

விழுமிடத்தெமக்கோர் நடுகல் நிமிர்த்தி: டேவிட் அய்யாவிலிருந்து எங்கே?

டேவிட் அய்யாவினுடைய நினைவேந்தல் நிகழ்வொன்று கடந்த 06/12/2015 ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்தது. யாழ்ப்பாண முகமையாளர் அவையினரால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த இந்நிகழ்வு, யூரோவில் நிறுவனத் தலைவர், எந்திரி. இராமதாஸ் தலைமையில் அந்நிறுவன மாகாநாட்டு மண்டபத்தில் நடந்தது.

ஓய்வுநிலைப் பேராசிரியர் அ.நவரத்தினராசா, மறவன்புலவு அய். சச்சிதானந்தம் அய்யா, முன்னை நாள் வட-கிழக்கு முதல்வர் அ.வரதராசப் பெருமாள், த.தே.கூ. பா.உ. ஆபிரகாம் சுமந்திரன், முன்னை நாள் பா.உ. சுரேஷ் பிரேமச்சந்திரன், மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

 நிகழ்வின் முடிவில் நிகழ்ந்த கலந்துரையாடலில், மருத்துவர். சி. ஜமுனானந்தா, திரு. செல்வின், எந்திரி. தில்லைநாதன், திரு. சு. திவகலாலா, முன்னை நாள் துணை வேந்தர்களாகிய பேராசிரியர் மோகனதாஸ், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பைச் சார்ந்த திரு. ஶ்ரீதரன், ஆசிரியர் திரு. விஜயன், எந்திரி. சூரியசேகரம், மாகாண சபை எதிர்க்கட்சி முதல்வர். திரு. தவராசா, அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தவர் எனத் தன்னை அறிமுகப் படுத்திய ஒருவர் (பெயர் சரியாகக் கேட்கவில்லை) எனப் பலர் கருத்துத் தெரிவித்தனர்.

பி.ப. 3.00 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வு 6.30 மணியளவில் நிறைவெய்தியது. பேசியவர்கள், டேவிட் அய்யாவுடனான தமது பரிச்சயம், நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்கள், அவரது வாழ்க்கையிலிருந்து தாம் கற்றுக் கொண்டவை என்பவற்றை மையமாக வைத்து உரையாற்றினர். வருடாவருடம் அவர் நினைவாக நினைவுப் பேருரை ஒன்றை ஒழுங்கமைப்பது தொடர்பாகவும், அவரால் பாவிக்கப் பட்டு, இங்கு அவர் எடுத்து வர விரும்பிய 200 கிலோ எடையுடைய அவரது நூற்தேட்டத்தை எடுத்து வந்து, அவர் நினைவான ஒரு பகுதியை யாழ். பொது நூல் நிலையத்தில் உருவாக்குவது தொடர்பாகவும் பேசப்பட்டது.

டேவிட் அய்யாவினது வாழ்வினைச் சம்பவத் தொகுப்புகளாகவும், சரித்திரமாகவும் பார்ப்பதற்கு அப்பால், இன்றைய தமிழ்ச் சமூகச் சூழலில் அவரது வாழ்வின் தொடர்ச்சியாக அல்லது நீட்சியாக அமையக் கூடிய வாழ்வு எவ்வாறு இருக்கக் கூடும் என்பது பற்றிய உரையாடலை நாம் நிகழ்த்த வேண்டும் என்று தோன்றுகிறது. இன்னொரு வகையில் சொல்லப் போனால், ‘டேவிட் அய்யாவின் வாழ்விலிருந்து எங்கே?’ என்ற கேள்விக்கான விடை தேடும் உரையாடல்.அந்த உரையாடல், டேவிட் அய்யாவின் வாழ்வு மையம் கொண்டிருந்த அடிப்படைகளை அடையாளப் படுத்தி, அந்த வாழ்வனுபத்தினூடாகப் பெற்ற படிப்பினைகளை இனம் கண்டு, இன்றைய சமூக, பொருண்மிய, அரசியல், பண்பாட்டுச் சூழலில் அவரது வாழ்வு போன்றதொரு வாழ்வு எவ்வாறான செல் நெறியைக் கொண்டிருக்கும் அல்லது கொண்டிருக்க வேண்டும் என உசாவும் ஒரு உரையாடலாக அது அமைய வேண்டும்.
மூன்று விடயப் பரப்புகளை மையமாகக் கொண்டு, டேவிட் அய்யாவினுடைய வாழ்வு தொடர்பான உரையாடல், அமையப் பெறலாம்.

ஒன்று: தமிழ் மக்களிடையே சமூக, அரசியற் செயற்பாட்டியக்கங்கள் தோன்றியது மிகக் குறைவு. அரசியற் கட்சிகளும், ஆயுதப் போராட்ட இயக்கங்களும் எம் மத்தியிற் தோன்றினவெனினும், பொது நிலையினராற் தோற்றுவிக்கப் பட்ட சமூகச் செயற்பாட்டு இயக்கங்கள் மிகக் குறைவு. அதனை விட சமூகச் செயற்பாட்டினைத் தமது முழு நேரச் செயற்பாடாக வரித்துக் கொண்டவர்கள் அரிது. டேவிட் அய்யா ஒரு முழு நேரச் சமூகச் செயற்பாட்டாளராக வாழ்ந்தவர். மருத்துவர் இராஜசுந்தரமும் அவரும் இணைந்து உருவாக்கிய காந்தீயம் அமைப்பு மிகக் காத்திரமான பங்களிப்பைச் செய்த சமூக/அரசியலியக்கமாகும். அந்த அனுபவங்களிலிருந்து நாம் எவற்றைக் கற்றுக் கொள்ளப் போகிறோம்?  ஒரு சமூகச் செயற்பாட்டியக்கத்தை ஈழத்தின் தமிழ்ச் சூழலில் உருவாக்குவது, முழு நேரச் சமூகச் செயற்பாட்டில் ஈடுபடுவது என்பவற்றிற்கான ஏது நிலைகள், சவால்கள், வெற்றி பெற்ற செயன்முறைகள், தவிர்க்கப் பட வேண்டியவை என்பவை குறித்த உரையாடல்.

இரண்டு: டேவிட் அய்யா போன்ற செயற்பாட்டாளர்கள் ஒரு ‘வாழ்க்கை முறையைத்’ தெரிவு செய்தனர். எழுபதுகளின் ஈழத் தமிழ்ச் சூழல் தொடர்பான டேவிட் அய்யாவின் புரிதலின் அடிப்படையில், அச் சூழலை மாற்றியமைக்க அவர் விருப்பம் கொண்டு, தனக்கென ஒரு வாழ்க்கை முறையை அவர் வரித்துக் கொண்டார். அந்த வாழ்க்கை முறை, அக்காலத்தின் மைய நீரோட்ட வாழ்முறையிலிருந்து வேறுபட்டு இருந்தது. தமது அமைப்புக்கு அவர்கள் தெரிவு செய்த பெயரின் அடிப்படையில் அது காந்தீயத் தத்துவத்தை அடியொற்றிய வாழ்க்கை முறை என்பதை நாம் புரிந்து கொண்டாலும், ஈழத் தமிழ்ச் சூழலில் அவ்வாழ்முறை எவ்வாறு கட்டமைக்கப் பட்டது என்பதை அவர் வாழ்விலிருந்து நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். மிகச் சுட்டிப்பாக, கருத்து நிலை உருவாக்கம், வாழ்வின் பொருண்மியத் தெரிவுகள், புதிய தனி மனித, சமூக உறவுகளைக் கட்டியெழுப்புதல், இயற்கைச் சூழல் தொடர்பான தெரிவுகள் தொடர்பான அவரின் வாழ்க்கை நடை முறைகள் எவ்வாறு அமைந்தன என்பவற்றை அடையாளம் காண்பதனூடாக, ஒரு மாற்று வாழ் முறையின் சாத்தியம், அதன் அடிப்படைகள் என்பவை குறித்த தெளிவைப் பெறலாம். அவ்வாறான மாற்று வாழ்முறை, ஆன்ம உறுதி, ஒருமித்த உணர்வு, கருத்து நிலைத் தெளிவு என்பவற்றை நோக்கி ஒரு சமூகமாக எம்மிற் பலரை இட்டுச் செல்லுமா? என்பவை குறித்த உரையாடல்.

மூன்று: ஒரு செயற்பாட்டாளருக்கு இருக்க வேண்டிய மன விரிவும், ஆன்மீக முதிர்ச்சியும் குறித்த உரையாடல். கொள்கைப் பிடிப்பிற்கும், செயல் வேகத்திற்கும் அதீத முக்கியத்துவம் வழங்கி, அவற்றின் பின்னால் இருக்கும் உளப் பாங்கையும், உலகியல் நோக்கையும் நாம் கவனமெடுக்காது விடும் போது, புகழையும், அதிகாரக் குவிப்பையும் விரும்பும், தனி மனிதனை மையப் படுத்தும், ஒரு பண்பாட்டு நிலை தோற்றுவிக்கப் படுகிறது. இந்நிலை படிப்படியாக சனநாயகத் தன்மையற்ற நிலைக்கு வழி கோலுகிறது. கொள்கைப் பிடிப்புக்கும், செயல் வேகத்துக்கும் ஈடாக, அனைவரையும் உள்வாங்கிச் செயற்படும், பொதுக் கருத்து நிலையை உருவாக்கச் சதா முயன்று கொண்டிருக்கும், அக விரிவும், உணர்வுச் சமநிலையும், ஆத்ம பலமும் செயற்பாட்டாளர்களுக்கு மிக மிக அத்தியாவசியமானவையாகும். இவை எவ்வாறு உருவாகின்றன? அல்லது உருவாகாமல் விடுகின்றன? இந்த நோக்கு நிலையில், டேவிட் அய்யாவின் வாழ்க்கையை எவ்வாறு அணுகலாம், எவற்றைக் கற்றுக் கொள்ளலாம்? என்பவை குறித்த உரையாடல்.


ஒருவரை அல்லது ஒரு அமைப்பை அவர்தம்/ அதன் கருத்துக்களையும், செயற்பாடுகளையும் பிழையென நிறுவுவதன் மூலம் தான் தமது கருத்தைச் சரியென நிறுவும் ஒரு விவாத முறை, உரையாடல் முறை, கருத்துருவாக்க முறை எம்மத்தியில் வேரூன்றி வருகிற இன்றைய சூழலில், எல்லா மனிதர்களிடமும், அமைப்புகளிடமும், உள்ள சிறப்பானவற்றை அடையாளங்கண்டு, அவற்றை இணைத்தும், தொகுத்தும், உள்வாங்கியும், அவற்றிலிருந்து மேலெழும் இன்னும் சிறப்பான கருத்து நிலையை, வாழ்முறையைக் கட்டியெழுப்பும் வகையில் எமது விவாத முறை, உரையாடல் முறை, கருத்துருவாக்க முறை உருவாக வேண்டும். எமது போதாமைகள் குறித்து எள்ளலுடன் விமர்சித்து, இந்த இனமும், இந்த மக்களும் உருப்பட மாட்டார்கள் என்ற வகையிலான முடிவுகளுக்கு எப்போதும் இட்டுச் செல்ல முனையும் ஒரு உரையாடலிலிருந்து, எமக்குப் புத்துணர்வை, புத்தெழுச்சியை, புத்தாக்க மனவுணர்வை உருவாக்கும் உரையாடலிற்குள் நாம் காலடியெடுத்து வைக்க வேண்டும். அப் புதிய பண்பாட்டின் நுழை வாயிலாக டேவிட் அய்யாவின் வாழ்வு தொடர்பான எமது உரையாடல் அமையட்டும். 

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

நட்சத்திரங்களின் நடுவில் வாழும் ஒரு மனிதனின் உலகம் அல்லது சமகால யாழ்ப்பாண மனிதனின் கனவு

யாழ்ப்பாணம் 2016.

புளி கொண்டு விளக்கிச் சுத்தமாகக் கழுவிய செம்பொன்று தண்மையாகப் பிரகாசிப்பது போல மினுங்கியபடி இருக்கும் தேனீர்ப் பேணி. அதன் வட்டமான வாயிலிருந்து மெலிதான மேகப் புகாரென வெளிக் கிளம்பும் நீராவி. செங்கருப்பு நிறத்தில் இருக்கும் ‘பிளேன் ரீ’. நாசியை இதமாக வருடும் தேயிலையின் சுகந்தம். மெல்லிய பனையோலைச் சார்வுகளால் இழைக்கப் பட்ட வட்டமான தட்டுக்கள். அவற்றின் பருமனுக்கேற்ப வெட்டப் பட்டு மேலே போடப் பட்டிருக்கும் வாழையிலைத் தகடு. பொன்னிறத்தில் மின்னும் சிறிய பந்துகள் போல உருண்டிருக்கும், இப்போதுதான அடுப்பிலிருந்து இறக்கப்பட்டு, இளம் சூட்டுடன் இருக்கும் வாய்ப்பன் உருண்டைகள். அவற்றின் நிறத்தை ஈடுகட்டி, சற்று வெளிர்ப் பொன்னிற மேற்பரப்பில், உளுத்தம் பருப்புத் துண்டுகள் ஊடு தெரிய, சூடாக இருக்கும் வடைகள். அவற்றின் இளம் சூட்டில் மெதுவாக வதங்கிக் கருக்கும் வாழையிலைத் தட்டத்தின் அலாதியான வாசம்.


ஆன்மாவின் சாரத்தை உறிஞ்சியெடுத்த ஒரு கனத்த வேலை நாளின், அல்லது உடல் நோக வயலுழைத்த ஒரு வேலை நாளின் முடிவில், அலுப்புத் தீரக் குளித்துத், தளர் உடை உடுத்தி வந்திருக்கும் மனிதர்கள். அலுவலகம் உறிஞ்சித் துப்பிய ஆன்மாவைப் பிரபஞ்ச வெளியில் பிடித்து மீண்டும் உயிர்ப்புடன் துடிக்க வைக்கும் மாலை நேர எத்தனம்.


இடையிடையே மரங்களும், எங்கணும் புற்களும் நிறைந்திருக்கும் தரை. அதில் பர்ணசாலைகள் எனத் தோற்றமளிக்கும் சிறு குடில்கள் ஒன்றிரண்டு. வட்ட வடிவமான விதானங்கள் கிடுகுகளால் நேர்த்தியாக வேயப் பட்டிருக்கின்றன. செங்கட்டிகளாலான காற்சுவர். அழுத்தமாக மெழுகப் பட்டிருக்கும் நிலம். வட்ட வடிவிலான மர மேசை. சுற்ற வர ஏழெட்டுப் பேர் அமரலாம். ஒவ்வொரு குடிலிலும் இது போல் ஒன்றிரண்டு மேசைகள். 



குடிலின் மூலையில் மரக்கரி அடுப்பெனத் தோன்றும் ஒரு அமைப்பிலிருந்து, மூலிகைகளின் கலவை போன்ற சுகந்த தாதுக்களைச் சுமந்து கொண்டு, மெதுவாக வெளியேறும் புகை. ஈக்களோ நுளம்புகளோ இல்லாதிருப்பதற்கு இது காரணமாக இருக்கக் கூடும்.


ஒவ்வொரு மேசையைச் சூழவும் ஏழெட்டுப் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு மேசையும் ஒவ்வொரு உலகம். அவற்றின் தினசரிப் பேசு பொருட்கள் பலவிதம். தேவ அபிராவின் கவிதைகள் குறித்தும், ரஞ்சகுமாரின் கதைகள் குறித்தும், ஒரு மோதிரமும் துப்பாக்கியும் காணொளி குறித்தும், டேவிட் அய்யாவின் வாழ்வு குறித்தும், ஓயாது பெய்யும் மழை குறித்தும், எல்-நினோ குறித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு திட்டம் குறித்தும், வன்னியின் பெண்களின் வாழ்வாதாரத் திட்டம் குறித்தும், சர்வதேச விசாரணை குறித்தும் அவை அமைந்திருக்கலாம். 

உரையாடலின் நடுவே, மீள நிரப்பப் படும் ‘பிளேன் ரீ’ பேணிகள். மீள வரவழைக்கப் படும் வாய்ப்பன்கள், வடைகள். சலியாது சிரித்தபடி பரிமாறும் பரிசாரகத் தோழர்கள். அவர்களும் இவர்களைப் போன்றவர்களே. அவர்கள் ஒரு ஆற்றுகைக் குழுவைச் சேர்ந்தவர்களாகவோ, சமூகச் செயற்பாட்டாளர்களாகவோ, ஆக்க இலக்கிய வாதிகளாகவோ இருப்பவர்கள் தாம். ‘உணவும் உரையாடலுமாக’ மாலை வேளையினூடு பயணிக்கிறது அந்த உலகம். ரீகல் தியேட்டரடி ‘ரீக்கடை’ வாங்குகளிலும், பூபாலசிங்கம் புத்தகக் கடை முன்றலிலும், முற்ற வெளியிலும் நிகழ்ந்து, மூன்று தசாப்தங்களுக்கு முன் நாம் தொலைத்த உரையாடல் மீண்டும் கண்டெடுக்கப் பட்டிருக்கிறதோ?


பிரபஞ்ச வெளியிலிருந்து நாம் தொலைத்த வாழ்வின் சாரத்தை, எமது கனவுகளை, உயிரோட்டத்தை, புத்துணர்வைப், புனைவூக்கத்தை, ‘செவி நுகர் கனிகளாக’ மீட்டெடுத்தபடி அவ்வுலகில் வந்த படியும் சென்றபடியுமிருக்கிறார்கள் என் மண்ணின் பெரு மானிடர்கள்.


மீண்டும் தொடங்கிற்று அவர்தம் வாழ்வின் மிடுக்கு.

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்: புதிய அரசியல் ஒழுங்கு தொடர்பான உரையாடலைத் தொடங்குதல்


இலங்கையின் அரசியல் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டும் அல்லது அதற்கு ஒரு படி மேலே சென்று அரசியல் யாப்பு முழுமையாக மாற்றியமைக்கப் பட வேண்டும் என்பவை குறித்த உரையாடல்கள் இப்பொழுது சற்று வேகமும், உரப்பும் பெற்று வருகின்றன.

இவ்வாறான அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பான எண்ணப்பாடு முனைப்புப் பெறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று,  தற்போதைய நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி ஆட்சி முறை, தென்னிலங்கையில் தொடர்ச்சியாக ஏற்படுத்தி வரும் சனநாயக விரோத, எதேச்சாதிகாரத் தன்மை கொண்ட அரசியற் சூழ்நிலை.  தமிழ் மக்களின் போராட்டத்தை அடக்க வேண்டிய தேவை இருந்த காலத்தில் இது போன்ற அரசியற் சூழ்நிலையைத் தென்னிலங்கை சகித்துக் கொண்டது. ஆனால் இப்பொழுது போராட்டம் காயடிக்கப் பட்டு விட்டது, இனியும் தென்னிலங்கையில் இதனைச் சகிக்க வேண்டிய தேவை இல்லை எனத் தென்னிலங்கை எண்ணத் தொடங்கிவிட்டது போலத் தோன்றுகிறது.

இரண்டு, இலங்கையின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் ஒரு எத்தனமாக அரசியல் யாப்பு மாற்றத்தைக் காட்சிப் படுத்த வேண்டிய சர்வதேசச் சூழ்நிலை.

இலங்கையின் பல்லினத் தன்மையை அங்கீகரித்து, இனங்களினிடையேயான கௌரவமான சகவாழ்வினை உறுதிப்படுத்தக் கூடிய அடிப்படையான அரசியல் ஏற்பாடு ஒன்றை ஏற்படுத்தும் எத்தனமாகவா அல்லது தென்னிலங்கைக்குத் தேவையான சனநாயக வெளி ஒன்றை உருவாக்கும் அதே சமயத்தில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாகவும் அதனையே உருவகிக்கும் தந்திரோபாய நடவடிக்கையாகவா அரசியல் யாப்பு மாற்றம் முன்னெடுக்கப் படவுள்ளது என்பது தான் இம் மாற்றத்தின் நோக்கையும் போக்கையும் தீர்மானிக்கவுள்ளது.

எது எவ்வாறிருப்பினும், இந்த மாற்றம் தொடர்பான உரையாடல்களும், மாற்றத்தில் உள்ளடக்கப் பட வேண்டிய அம்சங்கள் குறித்த முன் மொழிவுகளும், தென்னிலங்கைப் புலமையாளர்கள் மட்டத்திலும், ‘தொழில் முறைச்’ சிவில் அமைப்புகள் மட்டத்திலுமே மேற்கொள்ளப் படும்.

இன்னுமொரு வகையில் கூறுவதானால், இவை மையத்தில் நிகழும், மையத்தின் கரிசனைகளை மட்டும் கருத்திலெடுக்கும் தன்மை வாய்ந்தவையாகவே இருக்கும். விளிம்பு நிலை மக்களின் கரிசனைகளும் பங்கேற்பும், வழமை போலவே ‘ஓரத்தில்’ வைக்கப் படும்.



இதனை மாற்றும் எத்தனமாக, வெறுமனே யாப்புச் சீர்திருத்தம், யாப்பு மாற்றம் என்ற வரையறைகளுக்கு அப்பாற் சென்று, இலங்கைக்குத் தேவையான, அதன் பல்லினத் தன்மையையும், இனங்களுக்கு இடையேயான கௌரவமான சகவாழ்வை உறுதிப்படுத்த வல்ல, ஒரு புதிய அரசியல் ஒழுங்கு தொடர்பான மாற்று உரையாடலை எம்மத்தியிலும், மையத்துடனும், தமிழ் மக்கள் தொடங்க வேண்டும்.

எம் மத்தியிலான அந்த உரையாடல், பங்கேற்புச் சனநாயக அடிப்படையில், கட்டமைக்கப் பட வேண்டும். அந்த உரையாடல், தமிழ்ப் புலமையாளர்கள், தமிழ் அரசியலாளர்கள், அரசியற் பிரக்ஞையுள்ள தமிழ்ப் பொது நிலையினர் என அனைத்துத் திறத்தவரும் பங்கேற்கும் ஒன்றாக அமைதல் வேண்டும்.

இவ்வாறான உரையாடலைத் தூண்டுவதற்குப் பல்வேறு அமைப்புக்களும், குழுக்களும் முன் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அவ்வாறான முன் முயற்சி மேற்கொள்ளப் படும் போது அதற்குத் தேவையான நெகிழ்வுப் போக்கான கட்டமைப்புகள், செயன் முறைகள் தொடர்பான சிந்தனைப் பகிர்வாகவே இப் பிரதி முன்வக்கப் படுகிறது.

ஒரு சீரிய உரையாடலைத் தொடங்கி, ஒழுங்கமைத்து, ஆற்றுப் படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு, எண்ணிக்கையில் சிறிய முன் முயற்சியாளர்களைக் கொண்ட ‘ஆற்றுப் படுத்தற் குழு’ அமைவது உசிதமானது.

ஆரம்பத்தில் ஆழமான அரசியற் பிரக்ஞை கொண்ட துறை சார் நிபுணர்கள், அரசியலாளர்கள், அரசியல்-சமூகச் செயற்பாட்டாளர்கள், அரச நிர்வாக அனுபவமுடையோர் என்போரை உள்ளடக்கிய பல்துறைச் சங்கமக் குழு இவ்வுரையாடலில் ஈடுபடத் தொடங்கலாம்.

இக் குழு புதிய அரசியல் ஒழுங்கு தொடர்பாகத் தமிழ் மக்கள் கவனம் கொள்ள வேண்டிய விடயப் பரப்புக்களை அடையாளம் கண்டு, அவை தொடர்பான பின்புலத் தகவல்களையும், அவ்வவ் விடயப் பரப்புகளில் தமிழ் மக்கள் அவாவி நிற்பவை எவை, அவ்வாறான கோரிக்கைகளின் கோட்பாட்டு அடிப்படை, அரசியல் முக்கியத்துவம் என்பவற்றைத் தொகுப்பாக்கம் செய்ய வேண்டும்.

இவ்வுரையாடலின் பிரதான பேசுபொருட்களாகப் பின்வருபவை அமையலாம்.

  1. புதிய அரசியல் ஒழுங்கில் தமிழ் மக்களின் அடையாளம், நிலை, வகி பாகம்.
  2. புதிய அரசியல் ஒழுங்கு பற்றிய எமது உரையாடலில் இடம் பெற வேண்டிய கோட்பாட்டு/ அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களும், பதப் பிரயோகங்களும்.
  3. இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையைக் கூர்மையடையச் செய்ததில், இதுவரை இருந்த அரசியல் ஏற்பாடுகளினதும், யாப்புகளினதும் பங்களிப்பு.
  4. 13ம் திருத்தச் சட்ட மூலம்: கோட்பாட்டு அடிப்படைகள், அரசியல் அடிப்படைகள், நடை முறை அனுபவங்கள் என்பவை குறித்த பகுப்பாய்வு.
  5. தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் ஒழுங்கு முறைகள்: சர்வதேச அனுபவங்களும், தீர்வு மாதிரிகளும்.
  6. தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இலங்கையில் நடாத்தப் பட்ட உரையாடல்களும், முன் வைக்கப் பட்ட தீர்வு மாதிரிகளும்.
  7. புதிய அரசியல் ஒழுங்கில் இடம் பெற வேண்டிய பகிர்வு தொடர்பான விடயப் பரப்புகள்
  • அரசுருவாக்கம்
  • பகிர்வலகு
  • ஆள்புல எல்லைகள்
  • காணி
  • நிதி
  • நீதி
  • கல்வி
  • உள்ளூராட்சி
     8. பொதுச் சேவை புதிய அரசியல் ஒழுங்கின் பேண்தகு தன்மையும், பாதுகாப்பு முறைகளும்

இம் முயற்சி, தொடர் கலந்துரையாடல்கள், கருத்தமர்வுகள், வேலைப் பட்டறைகள் என்பவற்றின் வாயிலாக மேற்கொள்ளப் படலாம்.

இவ்வாறான செயன்முறைக்கூடாக, தமிழ் மக்களின் நோக்கு நிலையின் அடிப்படையில், ஒவ்வொரு விடயப் பரப்புத் தொடர்பானதுமான கொள்கை ஆவணங்கள் உருவாக்கப் பட வேண்டும்.

பின்னர் இக் கொள்கை ஆவணங்கள், பரந்து பட்ட பொது நிலையினர் மத்தியில் உரையாடலுக்காகவும், விவாதத்திற்காகவும், எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

சம காலத்தில் அவை நிபுணத்துவப் பரிசீலனைக்கும், விவாதத்திற்கும் உட்படுத்தப் பட வேண்டும்.

இவற்றின் நிறைவில், அவை செம்மைப் படுத்தப் பட்டு, ஒருங்கிணைக்கப் பட்டு, தமிழ் மக்கள் அவாவி நிற்கும், புதிய அரசியல் ஒழுங்கு தொடர்பான ஒருங்கிணந்த கொள்கை ஆவணம் உருவாக்கப் பட வேண்டும்.

இறுதியாக, இதன் அடிப்படையில், எமது அரசியற்சட்ட வல்லுனர்களால், புதிய அரசியல் ஒழுங்கின் பாற்பட்ட அரசியல் யாப்புக்கான எமது வரைபு அல்லது முன் மொழிவு உருவாக்கப் பட வேண்டும்.

இதனையே நாம் அரசியற் தீர்வுக்கான எமது முன்வைப்பாக அரசியற் கட்சிகளினூடாக முன் வைக்க வேண்டும்.