வியாழன், 25 டிசம்பர், 2014

விரி படு மனம்

சனாதிபதித் தேர்தல் தொடர்பாக நடந்துவரும் கலந்துரையாடல்களில் எனது முகப் புத்தக நண்பர்கள் சிலரின் வாதப் பிரதிவாதங்களில் காணப்பட்ட "வார்த்தைகளின் வன்முறை" முன்னர் நான் ஆங்கிலத்தில் பதிவேற்றிய குறிப்பை மொழியாக்கம் செய்யத் தூண்டியது.

நாங்கள் நிதானமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியாதா? 'நான் சரி' - 'நீ பிழை' என்ற நிலைப் பாட்டைத் தவிர்த்து, எதிர் விவாதம் செய்பவரின் கருத்து நிலையையும் புரிந்து கொள்வதையும் விவாதமொன்றின் நோக்கங்ககளிலொன்றாகக் கொள்ள முடியாதா? கருத்தாடலின் முடிவில் மற்றவரின் கருத்தை ஏற்க முடியவில்லையெனின் 'உங்கள் கருத்தை நான் புரிந்து கொண்டேன், ஆனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று கூற முடியாதா? ( I understand your view point , But I do not accept it )

ஒவ்வொருவருடைய உலக நோக்கும் எவ்வாறு உருவாகிறது என்பது குறித்த ஒரு பார்வையை இங்கே பகிர்கிறேன். 

இவ்வுலகில் நாம் என்ன "செய்கிறோம்" நாம் எவ்வாறு இந்த உலகத்தை "நோக்குகிறோம்" என்பதிற் தங்கியிருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு இவ்வுலகை நோக்குகிறோம் என்பது அவரவரைப் பொறுத்து வேறுபடும். நாம் ஒவ்வொருவரும் எமக்கேயான தனித்துவமான முறையிலேயே உலகை நோக்குகிறோம். ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் எங்களுக்கேயுரிய ஒரு சட்டகத்தின் ஊடாகவே எமது உலகத்தைப் பார்க்கிறோம்.



இன்னொரு வகையிற் சொன்னால், எனது யன்னலினூடாக எனக்குத் தெரியும் உலகமும், இன்னொருவரின் யன்னலினுடாக அவருக்குத் தெரியும் உலகமும் ஒன்று போலத் தோன்றுவதில்லை. எனது யன்னல் அமைந்திருக்கும் திசை, அது இருக்கும் உயரம், அதன் நீள அகலங்கள் என்பவை, மற்றோருவரினதை விட வேறுபடுமிடத்து, நானும், அவரும் காணும் புலக் காட்சி அச்சொட்டாக ஒன்று போல இருக்கப் போவதில்லை. 

எனது உலகை, அதிலுள்ள பொருட்களை, அதில் நிகழும் சம்பவங்களை நாம் எந்த யன்னலினுடாகப் பார்க்கிறோமோ அந்த யன்னல் எமது "நோக்கு நிலை" எனப் படுகிறது. உலகம் குறித்து, அதிலுள்ள பொருட்கள் குறித்து, அதில் நிகழும் சம்பவங்கள் குறித்து நாம் புதிது புதிதாய் அறிய விரும்புகின்றோம். அவ்வாறு அறிய விழையும் போது, மேற்கூறப்பட்டவை குறித்த எமது கேள்விகள், அக் கேள்விகளுக்கு எமக்குக் கிடைக்கும் விடைகள், அதனால் விழையும் உலகம் குறித்த எமது புரிதல் என்பவை அனைத்துமே எமது நோக்கு நிலையிற் தங்கியுள்ளன.



இந்த நோக்கு நிலை ஒரு தெரிவு. அந்தத் தெரிவு பல காரணிகளால் விழைகிறது. அது எமது தனிப்பட்ட உளவியல் சார்ந்தது. எமது பண்பாடு சார்ந்தது. எமது வாழ்வனுபவங்கள் எமக்குக் கற்றுத்தந்த பாடங்கள் (அனுபவத்தால் புடம் போடப் பட்ட அறிவு) சார்ந்தது. இவையனைத்தாலும் உருவாக்கப்பட்ட எமது நம்பிக்கைகள், விழுமியங்கள் சார்ந்தது. அது தர்க்க ரீதியாக நிறுவப் பட முடியாத பல அனுமானங்களாலும் விழைகிறது.



எனினும் எனது நோக்கு நிலை எனது முற்றிலும் சுதந்திரமான தெரிவு இல்லை. எனது வாழ் நிலை அதிற் பெரும் செல்வாக்குச் செலுத்துகிறது. அதாவது, நான் சிறுவயது முதல் வெளியுலகைப் பார்க்கப் பாவிக்கும் யன்னல் எனது தெரிவேயாயினும் எனது "சுதந்திரமான" தெரிவு அல்ல. எனது வாழ்விடமும், வாழ் நிலையும் எனக்குக் கிடைக்கக் கூடிய யன்னல்களைத் தீர்மானிக்கின்றன. அதாவது எனது வாழ்நிலை எனது நோக்கு நிலையைத் தீர்மானிக்கிறது.

நான் உலகை வெறுமனே பார்ப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. எனது யன்னலினூடாக நான் காணும் உலகம், பொருட்கள், சம்பவங்கள் குறித்த படிமங்களை நான் நாள்தோறும் எனது அக உலகில் உருவாகுகிறேன். நான் உருவாக்கிய துண்டு துண்டான படிமங்களை ஒன்று சேர்த்து இந்த உலகம் தொடர்பான எனது கருத்தினைக் கட்டமைக்கிறேன். என்னால் கட்டமைக்கப் பட்ட கருத்துக்களின் அடிப்படையில், இந்த உலகை நான் விளங்கவும், விளக்கவும் முனைகிறேன். புதிய புதிய நிகழ்வுகள் நடைபெறும் போது அவை தொடர்பான எனது புரிதலும், அவற்றுக்கான எனது விளக்கங்களும் எனது கருத்து நிலையிலிருந்தே உருவாகின்றன. அதாவது உலகம் தொடர்பான எனது விளக்கங்கள், கருதுகோள்கள், கொள்கைகள் என்பவற்றை இவ்வாறே நான் உருவாக்கிக் கொள்கிறேன்.



இவ்வாறு நான் உருவாகிக் கொண்ட கொள்கைகளே வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்பதைத் தீர்மானிக்கின்றன. நான் எனது உலகத்தை அது இருந்தவாறே பேண முயலலாம். அல்லது அதனை மாற்ற முயலலாம். மேலதிகமாக உலகம் பற்றிய எனது புரிதல் சரியானதா எனப் பரிசோதிக்க முயலலாம் (ஆய்வு). இவை என்னைச் செயற்படத் தூண்டுகின்றன. எனது கருத்துகள், எனது கொள்கைகள் எனது நடத்தைகளையும், செயற்பாடுகளையும் தீர்மானிகின்றன.

பொழிப்பாகக் கூறினால், எனது உலக "நோக்கு நிலை" எனது "கருத்து நிலையில்" செல்வாக்குச் செலுத்துகிறது. எனது "கருத்து நிலை" எனது "செயல் நிலை"யில் செல்வாக்குச் செலுத்துகிறது. எனது செயற்பாடுகளின் விளைவுகள் மீண்டும் எனது நோக்கு நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு உலகம் தொடர்பான எனது பார்வை, புரிதல், செயற்பாடுகள் என்பவை இடையறா அசைவு நிலையில் உள்ளன. அவை மாறாது நிலையாக இருப்பதில்லை.



எனது யன்னலின் ஊடாகப் பார்க்கும் போது எனக்குக் கிடைக்கும் தரிசனமே சரியானதும் சாசுவதமானதும் என்ற ஒற்றைப் பார்வை நிலை முரண்பாடுகளுக்கு இட்டுச் செல்கிறது. அவரவர் வெவ்வேறுபட்ட யன்னல்களினூடாகப் பார்ப்பதனாற் தான் அவரவர் உலகங்கள் அச்சொட்டாக ஒன்று போல் தோன்றுவதில்லை என்பதை நாம் உணரும் போது, பல்வேறு பட்ட நோக்கு நிலைகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் கிடைக்கின்றது.  'உங்கள் கருத்தை நான் புரிந்து கொண்டேன், ஆனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்று கூற முடிகிறது.( I understand your view point , But I do not accept it ).



பல்வேறு யன்னல்களினூடாகப் பார்க்க முடிகின்ற மன விரிவும், அவ்வாறான பார்வை நிலைச் சங்கமிப்பின் காரணமாக உருவாகக் கூடிய முழுமை நிறை உலக நோக்கும் எமக்குக் கைவரப் பெறுகின்றன.



மற்றவர்களுடன் விவாதிக்கும் போது வார்த்தைகளில் வன்முறை புகுவதைத் தவிர்க்கும் சாத்தியங்களும் உருவாகின்றது.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

இதமான நச்செண்ணை ஊற்றி அதில் ஊற வைத்த இதயங்கள்: துயரம் தரும் உண்மை

இம் முறையும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தென்னிலங்கையின் கதையாடல்களை நோக்கும் எவருக்கும் ஒரு விடயம் தெளிவாகப் புரிந்திருக்கும். தென்னிலங்கையின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனை குறித்து இரு வேறு கருத்தியல் அடிப்படைகள் இல்லை என்பதே அது.

அங்கே தமக்கிடையே முட்டி மோதிக் கொள்பவர்கள் அனைவரையும் இணைக்கக் கூடிய ஒரே ஒரு இணை சரடு தேசிய இனப்பிரச்சனை குறித்த அவர்களது கருத்தியலும் அதன் வழி வந்த அணுகுமுறைகளும் மட்டும் தான்.

1978ம் ஆண்டு கவிஞர் முருகையன் எழுதிய கவிதை ஞாபகம் வருகிறது.

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான நச்செண்ணை 
ஊற்றி
அதில் ஊறவைத்த உள்ளங்கள் இல்லாமல்
இத்தனை தீய எரிவு நடை பெறுமா?

தென்னிலங்கையின் வாக்கு வங்கி "இதமான நச்செண்ணை ஊற்றி அதில் ஊற வைத்த இதயங்களால்" ஆனது என்பதனை தென்னிலங்கை வேட்பாளர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கும் தார்மீக உரிமை அவர்களுக்கு உள்ளதா? அவ்வாறு கேட்பார்களயின் அதற்குச் செவி மடுக்க வேண்டிய கடப்பாடு தமிழ் மக்களுக்கு உள்ளதா?

தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி, இத் தேர்தலை தமிழ் மக்களின் பொது சனக் கருத்துக் கணிப்பாக மாற்றக் கூடிய சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிட்ட நிலையில் நாம் இன்று உள்ளோம். இந்த நிலையில் இரு பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவு வழங்குதல் குறித்து தமிழ் மக்கள் கூட்டாக ஒரு முடிவெடுத்துச் செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

தென்னிலங்கைக்கு ஒப்பீடளவில் கூடிய ஜனநாயக வெளியை வழங்குதல், பூகோள அரசியல் காரணமாக இத்தேர்தலின் முடிவில் கரிசனையுறுபவர்களை அனுசரித்தல் என்பது போன்ற உதிரிக் காரணங்களுக்காக இத் தேர்தலில் வாக்களிக்க விரும்புபவர்களுக்கு அவர்களது தெரிவுக்கான சுதந்திரத்தை வழங்கி விடலாம். 

எங்களது பிரச்சனைக்கு நீதியின் பாற்பட்டு பெறவேண்டிய தீர்வு நோக்கிய எமது பயணத்தை நாம் தொடரலாம்.