சனி, 23 டிசம்பர், 2017

ஆநிரை மீட்டல் #001


பண்டைக் காலத்தில் ஒரு நாட்டின் மன்னன் இன்னுமொரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பின், அதனை வெளிப்படுத்தும் வழிமுறையாகவிருந்ததுஆநிரை கவர்தல்’. அது தான் அக்காலத்தைய போர் அறம்.

அக் காலச் சமுதாயங்களின் செல்வத்தின் ஊற்றுக் கண்களாக அமைந்தவை ஆநிரைகள். ஆகவேதான் போராயத்தச் செய்தியாக விளங்கியது ஆநிரை கவர்தல். ஒரு நாடும் அதன் மன்னனும், நாட்டினது செல்வத்தைத் தக்க வைக்க முடியாவிட்டால், அந்த நாடும் மக்களும் சுபீட்சமாக இருக்க முடியாது. எனவே தான் ஒரு நாட்டினது மன்னனின் கடமையாக அமைந்தது அந்த நாட்டின் செல்வத்தை, ஆநிரைகளைப் பாதுகாத்தல்.  அவற்றிற்குப் பங்கம் நேர்ந்தால், அதற்குக் காரணமானவர்களோடு போர் புரிந்து அவற்றை மீட்டல் மன்னன் கடமை.

இன்றைய, நவீன யுக மனிதனது செல்வம் என்ன? அச் செல்வத்தினது ஊற்றுக் கண் என்ன? எல்லாரும் நினைப்பது போல்பணமும்’ ‘உடமைகளும்அல்ல. பெருவாரியான பணமும், உடமைகளும் இருந்தும், வாழ்வின் அழகை இரசிக்க முடியாமல், திருப்தி காண முடியாமல், மகிழ்வாக இருக்க முடியாமல் தவிக்கும் ஒரு மனிதன் செல்வந்தனா? அவனுக்கும்கல்லால் அடித்த செப்புச் சல்லிகூட இல்லாதவனுக்கும் என்ன வித்தியாசம்? இருவரது நிலையும் ஒன்றுதான். அலையடிக்கும் பேராழியின் நடுவே நிற்கும் நிலைதான்.

தண்ணீர்! நோக்குமிடமெல்லாம் நிறைந்துளது. குடிப்பதற்கோவெனின், ஒரு சிறு துளியுமிலது!

Time

இன்றைய உலகத்தில் செல்வத்தின் ஊற்றுக் கண்கள் இரண்டு: நேரமும், அசைதகவும் (Time and Mobility). இவை இரண்டும் கைவரப் பெற்றவர்களே, மட்டற்ற மகிழ்வும், கட்டற்ற வாழ்வும் கொண்டவர்கள். தன் வாழ்வுக்கு அர்த்தம் தர வல்ல செயல்களைச் செய்வதற்கு வரையறையற்ற நேரமுடையவன் மட்டற்ற மகிழ்ச்சிக்குச் சொந்தக்காரன். எந்த நேரமும் ஒரேயிடத்தில் கட்டுண்டு கிடக்காமல், விரும்பியவிடமெல்லாம் சென்றும் தான் செய்ய வேண்டியவற்றைச் செய்யும் வல்லமை பெற்றவன் கட்டற்ற வாழ்வுக்குச் சொந்தக்காரன். ஏனையவர்கள், ‘நேரத்தினதும்’ ‘இடத்தினதும்அடிமைகள். அடிமைகள் செல்வந்தர்களாக இருப்பதிலையே!

Work-is-no-longer-a-place-beach-1-1038x692

ஆகவேதான் இன்றைய அர்த்தத்தில், எங்களது ஆநிரைகள்நேரமும்’ ‘அசைதகவும்தான். அவற்றை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், போர்புரிந்தாயினும் கூட.

Work Anywhere
#சமகாலப் பயணியின் சிந்தனைகள்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்


தற்செயலாக முகப் புத்தக இடுகைகளைத் தட்டிக் கொண்டு போன போது தான் அந்தப் பதிவு கண்ணில் பட்டது. தமிழ் இணையப் பாவனை குறித்த ஒரு கலந்துரையாடல் தொடர்பான செய்திக் குறிப்பு அது.

Screen Shot 2017-04-10 at 9.53.14 AM

நீண்ட காலமாகப் புதிய விடயங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்ற மன ஆதங்கம் அதிகரித்திருந்தமையால், அதனைச் சற்றே அமைதிப் படுத்தலாம் என்றெண்ணி நிகழ்வுக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

நகருலிருந்து பிறவுன் வீதி வழியாகச் சென்று, கொக்குவில் பகுதியில் ஆடியபாதம் வீதித் தொடரூந்துக் கடவைப் பகுதியில் இடப் பக்கம் திரும்பி, ஆடியபாதம் வீதி வழியே கொக்குவில் சந்திப் பக்கம் சில மீற்றர் தூரம் சென்றதும், 'நூலகம்' நிறுவனம் தற்போது இயங்கி வரும் அலுவலகம் வரும். அங்குதான் கலந்துரையாடல்.

நான் அங்கு சென்ற பொழுது, உத்தமம் நிறுவனத்தின் சார்பாகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி. சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன், திரு. சி. சரவணபவானந்தன், திரு. ஹரிகரகணபதி, தமிழ் விக்கி பீடியாவின் முன்னோடி திரு. இ. மயூரநாதன் என்போர் ஏற்கனவே வந்திருந்தனர். சற்று நேரத்தின் பின்னர், போதியளவு கேட்போர் வந்த பின்னர் உரையாடல் ஆரம்பமாகியது. ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்கள் நடை பெற்ற அளிக்கைகள், உரையாடல் என்பவை முடிவுற்ற பொழுது நான் அறிந்து கொண்டவற்றையும், மனதில் உதித்தவற்றையும் இங்கு பதிவிடுகிறேன்.
  1. எமது பிரதேசத்தில் நிகழும் 'நல்லவை அல்லாதன' குறித்த செய்திகள் எம் மத்தியில் உரத்துப் பேசப் படுகின்றன. இந்தப் பிரதேசமே அறிவினதும், நல்லவற்றினதும் வரட்சியால் துன்புறுவது போன்ற மனப் பதிவையே ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என்பவை எம்முள்ளே ஏற்படுத்தியிறுக்கின்றன. ஆனால், ஆழமான, காத்திரமான பணிகள் இங்கே எதுவித ஆர்ப்பாட்டங்களுமிலாமல், அமைதியாக நிகழ்ந்தேறுகின்றன. அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் அவற்றைத் தம் தோள் சுமந்து நிறைவேற்றி வருகின்றனர்.
  2. இணைய மொழியாகத் தமிழைப் பயன் படுத்துவதற்கும், அதன் பாவனையைச் செழுமைப் படுத்துவதற்கும், பல தமிழறிஞர்கள் மிக அர்ப்பணிப்புடனும், தொலை நோக்குடனும் செயற்பட்டு, பலமான அத்திவாரத்தையும், தெளிவான பாதையையும் ஏற்கனவே உருவாக்கியிருக்கின்றனர். அதனை மேலும் செழுமைப் படுத்தும் பெரும் பொறுப்பு எம் முன்னே உள்ளது.
  3. தமிழ் விக்கிப் பீடியாவின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் ஈழத்து மாந்தரின் பங்களிப்பு அளப்பரியது. இதனை மென்மேலும் பரவலாக்க எம் அனைவரினதும் பங்களிப்பு அவசியம். தமிழினூடாக அறிவு சார் விடயங்களைக் கற்பதனைச் சாத்தியப்படுத்தும் ஒரு முயற்சியே தமிழ் விக்கிப் பீடியா.
  4. பாடசாலையில் கற்கும் சில சிறுவர்கள், விக்கிப் பீடியாவின் செழுமைக்கு மிகப் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
  5. நூலகம் நிறுவனம் ஆவணகம் என்னும் பல்லூடக ஆவணத் தளத்தை ஆரம்பித்து, அருமருந்தன்ன பல விடயங்களை ஆவணப் படுத்தி வருகின்றது. எம் இனத்தின் முதியவர்களுடன் பேசி அவர்களூடாக, எமது கடந்த கால வாழ்வியலை 'வாய்மொழி வரலாறு' ஆக பதிவேற்றல் மிகக் காத்திரமானதொன்று.
  6. தமிழ் இணையப் பாவனை, தமிழ் விக்கிப் பீடியாவை வளர்த்தெடுத்தல், எமது பிரதேச நூல்களையும், பல்லூடகத் தகவல் மூலங்களையும் எண்மியப் படுத்தி/ ஆவணப் படுத்திப் பேணல் என்பவற்றில் நாங்கள் ஒவ்வொருவரும் முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும்.
  7. பாரதி சொன்னதை நாங்களும் மீண்டும் உறுதியுடன் சொல்ல முடியும்.
பாரதி  

ஆநிரை இழந்த கதை


(இதனை எழுதத் தொடங்கும் போதுதான் தமிழில் Busy என்ற சொல்லிற்கு மிக அச்சொட்டாகப் பொருந்தக் கூடிய ஒற்றைச் சொல் இல்லை என்பது தெரிகிறது. கீழைத் தேய வாழ் முறையில் அவ்வாறான சொற்பதத்திற்கான தேவை எழுந்ததில்லையோ என்னவோ? நேரமற்ற வேலை மும்முரம் என்பதனையே Busy என்பதன் தமிழ்ப் பதமாக இந்த இடுகையில் நான் உபயோகிக்கிறேன்.)

ஆனிரை கவர்தல்

அண்மைய நாட்களில் அதீத வேலை காரணமான நேரமின்மைக்கு நான் ஆட்பட்டிருக்கிறேன். எனக்கு ஒரு நாளில் கிடைக்கக் கூடிய நேரத்தை விட, நான் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டிருக்கிறது. பிரச்சனைகளின் பின்னணி, அவை உருவாவதற்கான காரணங்கள் என்பவை குறித்துத் தெளிவாகச் சிந்திக்க நேரமின்றி அவற்றிற்கான தீர்வுகள் குறித்துத் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தகவல்களை உள்வாங்கத் தேவையான நேரத்ததை விட அதிகமாகத் தகவல்கள் வந்து குவிகின்றன. சிந்தனைகளையும் கருத்துக்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏதுவாக, அவற்றை ஒழுங்குபடுத்த முடியாத அளவிற்கு அவை ஏராளம் ஏராளமாய்த் தோன்றி மறைகின்றன. மனிதர்களுடன் அர்த்த பூர்வமாக உரையாட முடியாத அளவிற்கு அதிகமதிகம் மனிதர்களுடன் தினமும் உரையாட வேண்டியுள்ளது. அழைப்புக்களாலும், உடன் செய்திச் செயலிகளின் விழிப்பாக்கிகளினாலும் (Instant Messaging Alerts) திறன் பேசி கணகணத்துக் கொண்டிருக்கிறது.

விளைவு? என்ன செய்வது என்று தெரியாத அங்கலாய்ப்பு. பதற்றமான மனநிலை. மன அழுத்தம். மகிழ்வின் தொலைப்பு.

எனினும், நேரமற்ற வேலை மும்முரத்துடன் ஒருவர் இருக்கும் போதுதான் சமூகம் அவரை முக்கியமான ஒருவராகக் கருதுகிறது. நேரமின்மை ஒருவரின் முக்கியத்துவத்தின் குறிகாட்டியாக மாறிவிட்டது. இந்தத் தர்க்கத்தின் படி நானும் இப்பொழுது ஒரு 'முக்கியமான நபர்' ஆக மாறிவிட்டேன்.

ஆனால், 'நிற்க இருக்க' நேரமில்லாமல், 'தின்னக் குடிக்க' நேரமில்லாமல், 'சூரியன் சந்திரன் தெரியாமல்' மும்முரமாய் வேலை செய்து நான் என்ன பயனை விளைவிக்கிறேன்? என்ன செய்து 'கிழிக்கிறேன்'? ஒரு மனிதனாக, எனக்கு 'உள்ளே' 'வெற்றும் வெறிதுமாக', கோறையாக' நான் ஆகி விட்ட பொழுது, என்னால் என்ன பயனை விளைவிக்க முடியும்?

நேரமின்மை காரணமாக உடல் ஆரோக்கியமாக இல்லை. உடலுழைப்பு இல்லை. உடற்பயிற்சி இல்லை. நல்ல உணவைத் தெரிவு செய்து உண்பதுவுமில்லை. கிடைக்கும் உணவை 'அள்ளிக் கொட்டிக் கொண்டு' ஒட வேண்டியாகிவிட்டது. வாசிப்பதற்கு நேரமில்லை. அறிவுத் தேடல் இல்லை. கற்றறிந்த மனிதர்களோடு கதைப்பதற்கும் நேரமில்லை. தேவையுள்ள மானிடர்க்காய் 'பரிவும் பகிர்வும்' கொண்டு செயற்பட முடியவில்லை. குடும்பத்தினரைக் 'காண்பதுவுமில்லை'.
'நேரமற்ற வேலை மும்முரம்' என்னை முக்கியமானவனாக மாற்றவில்லை. 'உதவாக்கரை' ஆக ஆக்கியுள்ளது.

இதிலிருது 'விட்டு விடுதலையாதலே' முதற்பணி.

என்னுடைய 'ஆநிரையை' யார் கொண்டு போனார்? ஆநிரை மீட்டலே உடனடுத்த பணி.

ஆநிரை மீட்டல்

அருவியாய் வழிந்த வியர்வையைக் காற்று துடைத்ததோ குடித்ததோ அறியேன்... (நன்றி: ஆவியோ நிலையிற் கலங்கியது, யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன்)

ஏறத்தாழ மூன்று மாத கால இடைவெளியின் பின்னர் எனது வழமையான காலை நடையினை மீண்டும் தொடங்கிய மகிழ்வில் எனது மேசையின் முன்னர் இருக்கிறேன். அருவியாய் வழிந்த வியர்வை உலர்ந்து விட்டது. உடல் இலகுவாகவும், உள்ளம் புத்துணர்வுடனும் இருப்பதாக உணர்கிறேன். இந்தக் காலை நடையை மீண்டும் தொடங்கி ஏழு நாட்கள் ஆகிவிட்டன.

 

காலை வேளைகளில் நடக்கத் தொடங்கியது நான்கு வருடங்களுக்கு முன்புதான். நான் ஒரு இரவு ஆந்தை. நீண்ட நேரம் இரவில் என்னால் விழித்திருக்க முடியும். ஆனால் அதிகாலையில் எழுவது எனக்கு முடியாத காரியம். ஆகவே காலையில் எழுந்து நடந்து அதன் பின்னர் வேலைக்கு நேரத்திற்குச் செல்வது எனக்குச் சாத்தியமான ஒரு விடயமாக எனக்குத் தோன்றியதில்லை. எனது அலுவலக வேலையோ எப்பொழுதும் கணனியின் முன்னர் அசையாது இருக்கக் கோரும் ஒரு வேலை. ஒவ்வொரு வேலை நாளின் முடிவின் போதும் எனது உடலே எனக்குப் பாரமானதாகத் தோன்றத் தொடங்கியது. எப்பொழுது படுக்கையில் விழலாம் என எதிர்பார்க்கும் ஒரு உடற் களைப்பும் மனச் சலிப்பும் தோன்றத் தொடங்கியது. இவற்றிலிருந்து  விடுபட வேண்டும் என்றால் ஏதவதொரு வகையில் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. உடற் பயிற்சி தான் ஒரே வழி. 

தினமும்  வேலையை முடித்த பின்னர்  உடற் பயிற்சி செய்யலாம் எனத் தான் ஆரம்பத்தில் முயற்சித்தேன். என்றாலும் வேலையை 'முடிக்கக் கூடிய' நேரம் எனது கட்டுபாட்டில் இருக்கவில்லை. வேறு வழியின்றிக் காலையில் நடக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், ஆறு மணிக்கு எழுவது. ஆறரை மணியளவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஐந்து சுற்று நடப்பது. ஆறு மணிக்கு எழுவது பெரும் வேலை. அவ்வாறு எழுந்து, பின்னர் ஐந்து சுற்று நடந்தால் அது இமாலய சாதனை. அவ்வாறு நடக்கும் ஒவ்வொரு நாளும் மிகத் திருப்தியான நாட்கள். இந்துக் கல்லூரி மைதானத்திற்கு மண் நிரப்பித் திருத்தும் வேலை ஆரம்பித்த போது, யாழ்ப்பாணக் கோட்டையின் பின் பகுதியிலிருந்து பண்ணை வீதி வழியாக நடக்கத் தொடங்கினேன். 

அப்பொழுது பண்ணை வீதியின் முதற் பாலம் வரையான வீதி தான் திருத்தப் பட்டிருந்தது. துரையப்பா விளையாட்டரங்கத்தின் அருகில், துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு பண்ணை வீதியின் முதலாம் பாலம் வரை சென்று திரும்புதல் அன்றைய நாளின் மிகத் திருப்தி தரும் விடயங்களில் ஒன்று. பின்னர் பண்ணை வீதியின் திருத்த வேலைகள் தொடர்ந்த போது 'புதினம்' பார்க்கும் நோக்கத்தில், அவ்வப்போது திருத்தி முடிந்த வீதியின் எல்லை வரை நடக்கத் தொடங்கினேன். அதன் விளைவாக இரண்டாவது பாலம் வரை என் காலை நடை நீண்டது. அப்பொழுதும் அதன் தூரம் எனக்குத் தெரியவில்லை. இரண்டு கிலோ மீற்றர் வரை இருக்கலாம் என நான் நினைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் இரண்டாவது பாலம் வரை போய் வரும் போது 5 கிலோ மீற்றர் நடக்கிறேன் எனக் கற்பனை கொண்டிருந்தேன். அது குறித்துப் பெருமையும் கொண்டிருந்தேன்.  வீதித் திருத்த வேலைகள் முடியும் தறுவாயில், பண்ணை வீதியில் 'மைல் கற்கள்' (கிலோ மீற்றர் கற்கள்?) நாட்டப் படத் தொடங்கின. அப்பொழுதுதான், இரண்டாவது பாலத்தையும் தாண்டி மண்டைதீவுச் சந்திக்கு அருகில் சென்றால் தான் இரண்டு கிலோ மீற்றர் வரும் என்பது தெரிந்தது. என் கற்பனைப் பெருமை தகர்ந்து விட, இரண்டாவது கிலோ மீற்றர் கல் வரை சென்று திரும்புவதைப் புதிய இலக்காகக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். மொத்தம் நான்கு கிலோ மீற்றர்கள். அந்தத் தூரம் வழமைக்கு வர மூன்றாவது கிலோ மீற்றர் கல்லை அடைந்து திரும்புவது புதிய இலக்காயிற்று. பின்னர் அது நாலாயிற்று.

 

2016 டிசம்பர் இறுதியில், வேலை நாட்களில் நாலாவது கிலோ மீற்றர் கல் வரை சென்று திரும்புவதும், அவ்வாறான எட்டு கிலோ மீற்றர் தூரத்தில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை ஓடிக் கடப்பதுவும் (துள்ளோட்டம்- Jogging) வழமையாயிற்று. விடுமுறை நாட்களில் இது ஐந்தாவது கிலோ மீற்றர் கல் வரை சென்று திரும்புவது என்றாயிற்று. தூரம் கூடக் கூட காலையில் எழும் நேரமும் முன் தள்ளிப் போனது. இப்பொழுது அது அதி காலை 4.45 மணியாக இருக்கிறது. காலை 5.15 மணிக்கு நடக்கத் தொடங்கினால் 6.45 மணிக்கு மீண்டும் வீடு திரும்பிவிடலாம். 

எனது தொழிலில் புதிய பொறுப்பை இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட நாள் முதல் மூன்று மாதங்களாக என்னால் காலை வேளைகளில் நடக்க முடியவில்லை. ஏதொவொன்றை இழந்த துயரம் இந்த மூன்று மாதங்களும். என்றாலும், மீண்டும் முயன்று 'இழந்த வழமையை மீட்டெடுத்து, 'ஆநிரை மீட்ட அர்ச்சுனனாக' மகிழ்வாக இருக்கிறேன்.