ஞாயிறு, 24 நவம்பர், 2013

கேட்க ஒரு நாதி


கேட்க ஒரு நாதி .. தமிழ் மென் சக்தி குறித்த சில பிராரம்பச் சிந்தனைப் பகிர்வுகள் - செங்கோடன்

வட மாகாண சபைக்கான தேர்தல் முடிந்து விட்டது. "சோறா? சுதந்திரமா?" என்று கேட்டவர்களுக்கு எமது பதிலை நெற்றியில் அடித்துச் சொல்லியாகிவிட்டது. "மூளாத் தீப்போல் உள்ளே கனன்ற" சுதந்திர வேட்கையை, வாக்குகளால் எழுதப்பட்ட செய்தியாக எடுத்தியம்பியாயிற்று. இனி என்ன? நாங்கள் ஓங்கி ஒலித்த சேதியை, தமது இன மேலாண்மைக் கனவுகளுக்கான அபாயச் சங்காகப் பார்பவர்கள் எமது குரலை மௌனிக்கச் செய்வதற்கான அடுத்த கட்டச் செயற்பாடுகளுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்குவர். தத்தமது நலன் சார்ந்து எம் மீது கரிசனையுறுவோர், எமது செய்தியைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டு தமது நலன் சார்ந்த அடுத்தகட்டக் காய் நகர்த்தலுக்குத் தயாராவர். எம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மூடிய கதவுகளின் பின்னால் மந்திராலோசனை செய்து கொண்டிருப்பர். எங்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவே அவர்கள் இரகசியத் திட்டங்கள் தீட்டுகிறார்கள் என்ற நம்பிக்கையிலும், எமது சனநாயகக் கடமைகளை முடித்து விட்ட திருப்தியிலும் நாங்கள் எம் அன்றாடக் கவலைகளை எதிர் கொள்ளத் தயாராகிவிடுவோம்

இதனைத்தான் எதிர்பார்க்கிறார்கள் அனைவரும்; அரசும், அயல் தேசமும், அனைத்துலகமும். வாக்களிப்பதற்கு அப்பாலான செயலுக்குப் போகாத சனநாயகத் தன்மையைத் தான் அவர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். இச் செயலுக்குப்போகாச் சனநாயக முறைமையைத் தான் அவர்கள் பிரதிநிதித்துவச் சனநாயகம் என்கிறார்கள். இந்த முறையினூடாகவே வலுவும், அதிகாரமும் சமூகத்தில் சமச்சீரற்ற முறையில் பங்கீடு செய்யப் படுகிறது. மிகச் சிறுபான்மையினராகிய சமூக மேலோங்கிகளது கைகளில் கட்டுக்கடங்காத அரசியல், சமூக, பொருளாதாரப் பலம் கையளிக்கப் படுகிறது.

வலு என்பது மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மட்டுமல்லாது, அவர்கள் எதனை அறிகிறார்கள், எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றின் மீதுசெல்வாக்குச் செலுத்துவதற்குமான இயலுமையைக் குறிக்கிறது. தேர்தல் முறை மூலம் கையளிக்கப் பட்ட வலுவின் விளைவாகக் கிடைத்த அதிகாரம், அதனூடாக ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும், தடைகளை விதிப்பதற்குமான இயலுமை, என்பவற்றின் துணை கொண்டு, ஆளப்படுவதற்கான  சம்மதத்தை மக்கள் மத்தியில் உற்பத்தி செய்கிறார்கள்.

ஆளப்படுவதற்கான சம்மதத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும், மக்களின் செயலுக்குப் போகாத் தன்மையை உறுதிப் படுத்துவதற்காகவும், அதிகாரம் கொண்ட சமூக மேலோங்கிகள் பல்வேறு விதமான சமூக ஐதீகங்களை உருவாக்குகிறார்கள். பல்வேறுபட்ட கோஷங்கள், நம்பிக்கைகள், விழுமியங்கள் என்பவற்றின் துணை கொண்டு இந்த ஐதீகங்கள் கட்டி எழுப்பப் படுகிறன. கவர்ச்சிகரமான சொல்லாடல்களினால் கட்டமைக்கப் பட்ட உத்தியோகபூர்வமான கொள்கைகளும், பிரகடனங்களும், இவ்வாறான ஐதீகங்களை உறுதிப் படுத்துவற்காகப் பயன்படுத்தப் படுகின்றன

சிறி லங்காவின் அரசியல் வரலாற்றில், பண்டாரநாயக்கவின் 'அப்பே ரட்ட' 'அப்பே ஆண்டுவ' கோஷங்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 'உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு' கோஷங்கள், சந்திரிக்காவின் 'சமாதானத்திற்கான யுத்தம்', மகிந்தவின் 'தமிழ் மக்களைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்டல்', 'அழிவிலிருந்து அபிவிருத்திக்கு', 'வடக்கின் வசந்தம்', 'கிழக்கின் உதயம்', . பி. டி.பி அமைப்பின் 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' போன்றவை சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும் ஆள்வதற்கான சம்மதத்தை அவரவர்களிடமிருந்து பெறும் நோக்கில் எழுப்பப் பட்ட கோஷங்களுக்கு உதாரணங்களாகும்

இவ்வாறு கட்டியெழுப்பப்பட்ட ஐதீகங்களிற்கும், உத்தியோக பூர்வமான கொள்கைகளுக்கும் நேரெதிராகவே நடைமுறை யதார்த்தம் காணப்படுகின்றது. எனினும் பிரதிநிதித்துவ சனநாயக முறைமையின் அனைத்து நிறுவன வடிவங்களினூடாகவும், ஊடகங்கள், கல்வி- பண்பாட்டுத் தளங்களினூடாகவும், இந்த இடைவெளியை விமர்சன நோக்கற்றுச் சகித்துக் கொள்ளும் மனப்பாங்கு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வாக்குகளை வழங்கிப் பிரதி நிதிகளைத் தெரிவு செய்த பின்னர், அவர்களின் தீர்மானமெடுக்கும் செயன்முறையில் இருந்து மக்கள் விலக்கி வைக்கப் படுகிறார்கள்.

இன்னொரு வகையில் கூறுவதானால், சனநாயகம் என்பது தமக்குள்ளே போட்டியிடும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சமூக மேலோங்கிக் குழுக்களிடையே நடை பெறும் பலப் பரீட்சை ஆகும். மக்கள் திரளினர் வாக்களிப்பது என்ற செயன்முறை ஊடாக இப் பலப் பரீட்சையில் பங்கு கொள்ளலாம். அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துத் தீர்மானமெடுக்கும் செயல் முறைகளிலிருந்தும் மக்கள் விலக்கி வைக்கப் படுவர். வென்றவர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள், ஒட்டு மொத்த மக்களின் தீர்மானங்கள் என்ற அங்கீகாரத்தைப் பெறுவதை பார்த்தபடி வாழாவிருக்க வேண்டியதே மக்களின் பணி. அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிறிய மாற்றங்களைக் கொண்டு வர விரும்பின், அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பில் உள்ளவர்களை நோக்கி முறையிடலாம். அவர்களின் மனங்களை வெல்வதற்கான செயன்முறைகளில் ஈடுபடலாம். (இதற்காக 'இணக்க அரசியல்' 'நல்லெண்ண சமிக்ஞை' போன்ற இன்னோரன்ன யுக்திகள் இருக்கின்றன. தற்காலத் தமிழ் அமைச்சர்களிடமும், புதிய தமிழ் தலைவர்களிடமிருந்தும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.)

இவ்வாறனதொரு செயலுக்குப் போகாச் சனநாயக மரபை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் மத்தியில் ஒரு மென் சக்தி உருவாக வேண்டும், அது பேச்சுவார்த்தை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்ற வழி முறைகளினூடாகத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றே அயல் தேசமும், அனைத்துலகமும் விரும்புகின்றன. (தமிழ்  சூழலில் மென் சக்தி தொடர்பான கருத்தாக்கம் தொடர்பான மூலக் கட்டுரைக்குதமிழ் மென்சக்தி - நிலாந்தன் : எதனைச் சாதிக்கும்? நிலாந்தன்குளோபல் தமிழ்ச் செய்திகள், 06/10/2013)  இந்த விருப்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மனதிற்கும் நெருக்கமானதாகத் தான் இருக்கும் என்பது அதன் அரசியல் தலைவர்களின் இயல்பையும், பின்னணிகளையும் அறிந்தவர்களுக்குப் புரியும்.

ஆனால், தமிழ் பேசும் மக்களின் இதுவரை கால அரசியல் அனுபவத்தின் அடிப்படையில், இவ்வாறானதொரு அடிப்படையைக் கொண்ட மென் சக்தி தமிழ் பேசும் மக்களின் அரசியலை அசையாத குட்டையாக ஆக்கிவிடும் என்று ஊகிப்பது கடினமல்ல. எனினும் தமிழ் பேசும் மக்களின் அகச் சூழலின் அடிப்படையிலும் தமிழ் பேசும் மக்களிடையே ஒரு மென் சக்தி உருவாக்கப் படுவதே உடனடி எதிர்காலத்தில் சாத்தியம் என்ற யதார்த்தத்தைக் கருத்தில் எடுத்து, தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள் செயலூக்கமுடைய, பங்கேற்பு சனநாயகத் தன்மை வாய்ந்த ஒரு அரசியலியக்கத்தை உருவாக்குவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்களின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விரும்பும் அரசியற்செயற்பாட்டாளர்கள், வெற்றுக் கோஷங்களை எழுப்புபவர்களாகவோ, தேர்தல் அரசியல் மூலம் பெற்றுக் கொள்ளும் அரசியற்பலம், தனிப்பட்ட அரசியற் சாணக்கியம், இராஜதந்திரச் சொல்லாடல்கள், காய் நகர்த்தல்கள் என்பவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாகவோ இருந்துவிடக் கூடாது. மாறாக, அவர்கள் மக்களின் மேல் நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், சகல விதமான அரசியல், பொருளாதார, சமூக வலுக்களினதும் ஊற்றுக் கண் மக்கள் தான். அவர்களுடைய மௌனமான சம்மதமும், சூக்குமமான ஒத்துழைப்பும் கிடைக்கும் வரையில் தான் அவர்கள் ஆளப்படலாம். அவர்கள் தமது மௌனத்தைக் கலைக்கும் போது, சூக்குமமான ஒத்துழைப்பைத் திரும்பப் பெறும் போது, சாம்ராஜ்ஜியங்களின் அத்திபாரங்கள் அரிக்கப் படத் தொடங்குகின்றன.

இது தான் தோன்றியாக நிகழ்வதில்லை. போதுமான தகவல்கள் மக்களைச் சென்றடைந்து, அவற்றினடிப்படையிலான பொதுப் புரிதல் உருவாக்கப் பட்டு, விமர்சனக் கண்ணோட்டத்துடன் விடயங்களை அணுகும் பண்பாடு உருவாக்கப்பட்டு, இவையனைத்தாலும் மக்கள் வலுவூட்டப் படும் போது இது நிகழ ஆரம்பிக்கிறது. அப்போது, அனைத்துச் சமூக, பொருளாதார, அரசியற் செயன்முரைகளிலும் அவர்கள் ஆக்கபூர்வமான இடையீட்டினை மேற்கொள்ள விழைவார்கள். சனநாயகம், நீதி, சமத்துவம், பாதுகாப்பு, அமைதி, மானுட மேம்பாடு, சூழல் மேம்பாடு என்பவை குறித்து உரத்த குரலில் பேசுவார்கள். இவ்வாறானதொரு, பங்கேற்புச் சனநாயக அடிப்படையிலமைந்த, அரசியல் விழிப்புணர்வும், செயலூக்கமும் கைவரப் பெற்ற ஒரு மென்சக்தியை உருவாக்குவதே இன்றைய தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்களின் தலையாய கடமை

இந்த அரசியற் செயன்முறையின் பிரதான பங்காளர்களாக (Participants) தமிழ் அரசியற் செயற்பாட்டளர்களும், ஸ்ரீ லங்கா அரசும், தமிழ் பேசும் மக்களும் விளங்குவர். பங்கீடுபாட்டளர்களாக (Stakeholders)  முற்போக்குச் சிங்கள அரசியற் செயற்பாட்டாளர்கள், சிங்கள மக்கள், தமிழ் நாட்டு முற்போக்கு சக்திகள், புலம் பெயர் தமிழ் உறவுகள், அனைத்துலக சமூகம் என்பவை விளங்கும்

இச்செயன் முறையின் மையமாக அரசியல் அம்பலப் படுத்தல் அமையும். அரசியல் அம்பலப் படுத்தலின் பேசு பொருளாக தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையின் வடிவங்களும், இன ரீதியான பாகுபாடும் அமையுமெனினும், அதன் குவி மையமாக அமைய வேண்டியது ஏற்கனவே இருக்கும் அரசியல் நிறுவன வடிவங்களினூடாக (ஒற்றையாட்சி அரசியல் யாப்பு, பாராளுமன்றம், அதிகாரப் பரவலாக்க அமைப்புகள், நீதித் துறை) எமது பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற யதார்த்தத்தை வெளிக்கொணர்வதேயாகும். விமர்சன ரீதியான பகுப்பாய்வுகள், அளிக்கைகள், பிரசுரங்கள், கலந்துரையாடல்கள், கூட்டங்கள், கல்வி வட்டங்கள், பண்பாட்டுநடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், நடை பவனிகள், என இன்னோரன்ன வழி முறைகள் மூலம் அரசியல் அம்பலப்படுத்தல் மேற்கொள்ளப் படலாம்

அரசியல் அம்பலப் படுத்தலின் நோக்கம் அரசின் திட்டங்களையும், நடைமுறைகளையும் மாற்றுவது அல்ல. மாறாக மக்களை முன்னெச்சரிக்கை செய்து, விழிப்புணர்வூட்டி, ஆற்றுப் படுத்தி, அரசியற் செயலூக்கமூட்டி, சமூக நீதியின் பாற்பட்டுத் தமிழ் தேசிய இனம் இந்நாட்டில் சரிநிகர் சமானமாக வாழ உரித்துடையது என்ற நம்பிக்கையை வளர்த்து, அதற்கான அரசியல் செயன்முறையில் மேலும் மேலும் மக்களை நேரடியாகப் பங்களிக்கத் தூண்டுவதேயாகும்

இதன் தர்க்க ரீதியான வளர்ச்சிப் போக்கில், பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் அரசியற்செயற்பாடாளர்களாக மாறும் நிலை உருவாகும். தமிழ் பேசும் மக்கள் இவ்வாறானதொரு சமூக-அரசியல் இயக்கமாகப் பரிணமிக்கும் போது, தமிழ் மென் சக்தி நிகரற்ற பேரம் பேசும் ஆற்றலையும், சனநாயகத் தன்மையையும் தன்னகத்தே கொண்டிருக்கும்

இது ஒரு நீண்ட பயணம். ஆனால் தவிர்க்க முடியாதது. எழுபதுகளின் மத்தியில் இருந்து முகிழ்த்த இளைஞர் அரசியலில் இன்று வரைக்கும் ஏதோவொரு வகையில் பங்கேற்ற, அனுபவமும், அரசியல் சிந்தனைத் தெளிவு உள்ள அனைவரும் இந்த வரலாற்றுக் கடமையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். முன்னெப்போதையும் விட முன்னோடிகள் எமக்கு இப்போ தேவைப் படுகிறார்கள்

உன்னால்   முடிந்தால் ...
உன்னைப் போல் ஆயிரம் பேர் 
வீதிக்கு வீதி 
வீட்டுக்கு வீடெல்லாம் 
நீதிக்குப் பக்கமதாய் 
நிழல் விரித்து நில்லுங்கள் .

(கவி வரிகள் : புதுவை )


(குளோபல் தமிழ் செய்திகளில் பிரசுரிக்கப் பட்டது)