வெள்ளி, 28 மே, 2021

இன்றைய மனிதனின் கதை

அவர் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தார். நித்திரை வரவில்லை. மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தார். அதிகாலை ஐந்து மணி. அவருடைய தொழிற்சாலையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பால் குழம்பிய நித்திரை மீண்டும் வருவதாயில்லை. இந்த மூன்று மாத காலத்தில், தனக்கு ஒருவரும் அழைப்பெடுக்கக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தாலும், 'செட்டி மூட்டையைக் கைவிட்டாலும், மூட்டை செட்டியை விடாது' என்பது போல அழைப்புகள் அவரை விடுவதாக இல்லை. மீண்டும் மனம் பதகளிக்க ஆரம்பித்ததைக் கவனித்தார். கடற்கரையில் சற்றுக் காலாற நடக்கலாம் என்றெண்ணி படுக்கையை விட்டெழும்பி வெளியில் வந்தார் அவர்.

'அவர்' சாதாரண மனிதர் இல்லை. தொழிற் துறையின் முக்கிய புள்ளி. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி. எல்லாம் அவர் சம்பாதித்தது. கடும் உழைப்பு. ஊணுறக்கமின்றி, ஓடி ஓடி உழைத்ததால் எப்பொழுதுமே ஒருவித பதட்டம் அவர் வாழ்க்கையில். அண்மைக்காலமாக பதட்டம், பதகளிப்பு, மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து அவரை ஓரிடத்தில் அமைதியாக இருக்க விடவில்லை. ஏற்கனவே பல 'செல்வந்த நோய்களுக்கு' அவர் சொந்தக்காரர். இப்பொழுதெல்லாம் அவரால் உடல், உளத் தொல்லைகளைச் சமாளிக்க முடியவில்லை.


வைத்தியரிடம் போனார். 'பிரச்சனை உடம்பிலை இல்லை, மனசிலை தான். அது தான் பிறகு உடம்பையும் விடுகுதில்லை. எல்லாத்தையும் ஆரிட்டையும் பாரம் குடுத்திட்டு, மூண்டு மாதமாவது ஓய்வெடுக்க வேணும். இல்லையெண்டால், பிறகு ஒரு மருந்தாலையும் உங்களைத் திரும்ப எடுக்கேலாது' என்று சொல்லிவிட்டார்.

அவரால் அதைக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியவில்லை. என்றாலும் சுவர் இருந்தால் தானே சித்திரம் என்பதுவும் அவருக்குத் தெரியும். எல்லாவற்றையும் நம்பிக்கைக்குரியவர்களிடம் பொறுப்புக் கொடுத்தார். மூன்று மாதங்களுக்குத் தன்னைத் தொலைபேசியில் கூட அழைக்கக் கூடாது என்று சொன்னார். ஒரு குட்டித் தீவின் உல்லாச விடுதியில் இடமெடுத்தார். எந்தவொரு வெளித்தொல்லையும் இல்லாமல் அமைதியாக இருப்பதற்காக வந்துவிட்டார்.  ஆனால் மூட்டையோ செட்டியை விடுவதாயில்லை.

விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில், கடலின், காற்றின் அமைதியையும், குளிர்மையையும், அனுபவிக்க முயன்று கொண்டு, கடற்கரை மணலில் கால் புதைய நடந்தார். சற்றுத் தொலைவில், ஒரு புகையோவியமாக ஒரு மனிதன் தன் கட்டு மரத்திலிருந்து கறையிறங்கிக் கொண்டிருப்பதையும் அவர் கண்டார். ஒரு கிராமத்து மனிதனுடன் பேச்சுக் கொடுப்பது சிலவேளை தன் சொந்தப் பதட்டங்களிலிருந்து தப்ப உதவக் கூடும் என நினத்தார். அவனை நோக்கி நடந்தார். கிட்ட வரும்போது, அவன் தான் பிடித்த மீன்களை ஒரு பனையோலைக் கூடைக்குள் போட்டுக் கொண்டிருந்தான்.


"தம்பிக்கு இண்டைக்கு நல்ல பிடி போலை? ச்சா.., நல்ல பெரிய மீன்கள், என்ன?

"ஓமையா. வழமையாவும் இப்பிடித்தான். இந்தக் கடலின்ரை புண்ணியத்திலை, எனக்கு ஒவ்வொரு நாளும் பிழையில்லாத பிடிதான்"

"எத்தினை மணிக்குக் கடலுக்கை போனனியப்பு?"

"ஒரு மூண்டு மணித்தியாலம் கடலுக்கை நிண்டனான் ஐயா"

"இந்த மீனை இண்டைக்கு என்ன செய்யப் போறாய்?"

"ஊருக்கை ஒரு சந்தை இருக்கு. அங்கை விப்பன். பிறகு மளிகைச் சாமான்கள், வேறை ஏதாவது தேவையெண்டால் அதுகள் எல்லாத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டை போவன்"

"பிறகு?"

"பிறகென்ன? மனிசி சமைக்கும். பிள்ளையள் பள்ளிக் கூடத்தாலை வருவாங்கள். எல்லாரும் இருந்து சாப்பிடுவம்"

"பிறகு?"

"எல்லாரும் ஒரு சின்ன நித்திரையடிப்பம். பின்னேரம் எழும்பித் தேத்தண்ணி குடிப்பம். பிள்ளையள் விளையாடப் போவாங்கள். நானும் மனிசியும் இன சனம் வீட்டை போவம். சிலவேளை கோயிலிலை ஏதாவது வேலையிருக்கும். எல்லாரும் சேந்து செய்வம். சில வேளை பள்ளிக்கூடத்திலை சிரமதானம் மாதிரி ஏதாவது இருக்கும். ஊருக்குள்ளை கலியாணம் கார்த்திகை எண்டால், போய்ப் பந்தல் போடுவம். பலகாரம் சுடுவம். ஒரு நாளைக்கு ஒரு மாதிரி. சிலவேளை அண்ணாவியாரிட்டைப் போய்க் கூத்துப் பழகுவன். திருவிழாக் காலமெண்டால் வருசா வருசம் கூத்துப் போடுவம். சீசனுக்கு ஒரு மாதிரி."

"டவுன் சந்தையில மீனைக் கொண்டு போய்க் குடுத்தால் கூட விலைக்குக் குடுக்கலாம் தானே?"

" ஓம் ஐயா. கொஞ்சம் கூடக் காசு கிடைக்கும். ஆனா என்ரை குடும்பத்துக்கு இது காணும். அது வீண் அலைச்சல். அங்கை போட்டு வந்தால், பின்னேரம் ஒண்டும் செய்யேலாது."

"அங்கைதான் நீ பிழை விடுறாய் தம்பி. நான் சொல்லுறதைக் கேள்"

"சொல்லுங்கோ ஐயா"

""நாளேலையிருந்து நீ டவுன் சந்தைக்குப் போ. கூடக் காசு கிடைக்கும். அதை மிச்சம் பிடி. கொஞ்ச நாளிலை இந்தக் கட்டு மரத்தை விட்டிட்டு ஒரு போட் வாங்கு. இன்னும் நிறைய மீன் படும். இன்னும் காசு வரும். அதையும் மிச்சம் பிடி. நலைஞ்சு போட் வாங்கு. அள்ளு கொள்ளையா மீன் படும். மீனைச் சும்மா கொண்டு போய் விக்காமல், ரின் மீனாக்க ஒரு கொம்பனி போடு. எல்லா இடமும் அனுப்பு. ஒவ்வொரு டவுனிலையும் ரின் மீன் கடை போடு. நிறையக் காசு வரும். டவுனிலை ஒரு மாடி வீட்டைக் கட்டு. கார் வாங்கு"

"இதுக்கெல்லாம் எவ்வளவு காலமையா செல்லும்?"

"ஒரு முப்பது வரியம். இன்னும் கொஞ்சம் சோறு தண்ணி பாராமல் உழைச்சால், இருபத்தைஞ்சு வரியம்"

"அதுக்குப் பிறகையா?"

"அதுக்குப் பிறகுதான் சங்கதியே இருக்கு. உன்ரை கொம்பனியை பங்குச் சந்தையிலை போடு. பங்குகளை வில். கோடி கோடியாக் காசு வரும். அதை பாங்கில போடு. ஊருக்கு வா. வாழ்க்கையை நிம்மதியா அனுபவி"

"எப்பிடி ஐயா அனுபவிக்கிறது?"

"நீயும மனிசியும் இன சனம் வீட்டை போகலாம்....... கோயிலிலை ஏதாவது வேலையிருந்தால், எல்லாரும் சேந்து செய்யலாம்........பள்ளிக்கூடத்திலை சிரமதானம் செய்யலாம்........ ஊருக்குள்ளை கலியாணம் கார்த்திகை எண்டால், போய்ப் பந்தல் போடலாம்.......... பலகாரம் சுடலாம்......... அண்ணாவியாரிட்டைப் போய்க் கூத்துப் பழகலாம்......... திருவிழாக் காலமெண்டால் வருசா வருசம்......."

((மகிழ்வை நாடித் திரவியம் தேடி, திரவியத் தேடலில் மகிழ்வைத் தொலைத்த இன்றைய மனிதர்களின் கதை. திமொதி பெரிஸ் எழுதிய 'நான்கு மணி நேர வேலை வாரம்' (The 4 Hour Work Week by Tim Ferris) என்ற நூலில் எடுத்தாளப்பட்ட ஒரு கதை. மொழியாக்கமும், உள்ளூராக்கமும், கண்ணன் செங்கோடன்)


1 கருத்து:

  1. செட்டி மூட்டையைக் கைவிட்டாலும், மூட்டை செட்டியை விடாது.

    நாங்களும்

    அண்ணாவியாரிட்டை கூத்தும் இப்படி கதையும் எழுதப் பழகலாம்..

    தேடிக்கொண்டிருக்கிறோம் அண்ணாவியாரை❤

    பதிலளிநீக்கு